சிங்கள அரசு மீனவர்களைக் கொல்வது ஒன்றும் புதிதில்லை. நேற்றுவரை, கடலில் துப்பாக்கியால் நம் மீனவர்களைச் சுட்டுக் கொன்றவர்கள் இப்போது இன்னொரு புது வழியைக் கண்டுபிடித்துள்ளனர். போதைப் பொருள் கடத்தும் கும்பல் என்று இழி பெயரைச் சூட்டித் தூக்கில் போடலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள் போலிருக்கிறது!

 இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரியக் கடல் அது. இரண்டு நாட்டு மீனவர்களும் மீன் பிடிக்கலாம் என்பதுதான் உலகளாவிய விதி. ஆஅனால் அந்த விதியைச் சிங்கள அரசு மதிக்கவில்லை. இந்திய அரசோ கேட்கவில்லை.

 ஒரு பொய் வழக்கு புனையப்பாடு, மூன்று ஆண்டுகள் சிறை வாசம் இருந்தபின், இப்போது தூக்குத் தண்டனை என்கின்றனர். மத்தியில் பா.ஜ.க. அரசு பதவி ஏற்றபோது, மீனவர்களை எல்லாம் விடுதலை செய்கிறோம் என்றனர். ஆனால் அப்போதும் இவர்கள் ஐவரும் விடுவிக்கப்படவில்லை.

 இதனைத் தண்டனை என்பதை விட, மிரட்டல் என்பதே சரியானது. யாரேனும் மீன் பிடிக்கக் கடலுக்குள் வந்தால், திருட்டுப் பட்டமோ, கடத்தல் பட்டமோ சூட்டித் தூக்கில் போட்டு விடுவோம் என்கிற மிரட்டல். இந்த மிரட்டலை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே முதன்மையானது. அவர்களுக்கு வழக்கறிஞர் வைத்துக் கொடுப்பதன் மூலமோ, சிறை மாற்றத்தின் மூலமோ நம் மீனவ மக்களை நிரந்தரமாகக் காப்பாறிவிட முடியாது.

 இந்திய அரசு இலங்கைக்கு எச்சரிக்கை விட வேண்டும். எங்கள் மீனவர்களைத் தொட்டால், நாடு கொந்தளிக்கும் என்று அவர்களின் தூதுவரை நேரிடையாக அழைத்து எச்சரிக்க வேண்டும்.

 இது நம் நாடு, நம் கடல்.....அடுத்த நாட்டு அரசிடம் அடிமையைப் போல் கெஞ்சிக் கொண்டிருப்பது நமக்கும் பெருமை இல்லை, நாட்டுக்கும் பெருமை இல்லை.

Pin It