“கவிஞர்களையே ஒன்று சேர்த்து விட்டீர்கள். இது காங்கிரஸ் கட்சியை ஒன்று சேர்ப்பதை விடவும் கடினமானது” என்றார் கவிஞர் வைரமுத்து. மேடையில் அவரையும் சேர்த்து மூன்று கவிஞர்கள் இருந்தனர். வைரமுத்து, மு.மேத்தா, மரபின் மைந்தன் முத்தையா.

கவிஞர்களை ஒருங்கிணைத்தவர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். விழாவிற்குத் தலைமை ஏற்றவர் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன்.

p chidambaram‘எழுத்து’ என்னும் புதிய அமைப்பின் தொடக்க விழா, 03.11.14 அன்று சென்னையில் நடைபெற்றது. அந்த அமைப்பிற்கு ப.சிதம்பரம்தான் அடிக்கல். அவ்வையும் கவிஞர்கள் மூவரும் அறங்காவலர்கள்.

அமைப்பிற்கான நல்லதொரு நோக்கத்தைச் சிதம்பரம் வெளியிட்டார். இப்போதைக்கு ஒரு நோக்கம்தான், பிறகு அது விரிவடையலாம் என்றார். அந்த நோக்கம், புதிய எழுத்தாளர்களின், தரமான படைப்புகளை நூல்களாக வெளிக் கொண்டு வரவேண்டும் என்பதே! ஒரே ஒரு நிபந்தனை - அது அவர்களின் முதல் நூலாக இருக்க வேண்டும் என்பது.

எழுத்து அமைப்பிடம் தங்கள் எழுத்துப் படியை ஒப்டைப்பதோடு, படைப்பாளிகளின் வேலை முடிந்துவிட்டது. அது தரமானது என்று நடுவர்குழு தேர்ந்தெடுக்குமானால், அதன்பின், அச்சுப்பணி தொடங்கி, விற்பனை வரைக்கும் எல்லாவற்றையும் எழுத்தே பார்த்துக் கொள்ளும். அது மட்டுமில்லை, எழுத்தாளர்களுக்கான உரிமத் தொகையை (ROYALTY) நூல் வெளியாகும் மாலைப் பொழுதிலேயே அவர் கைகளில் கொடுத்து விடுவார்களாம்.

ஏற்கனவே ‘இலக்கியச் சிந்தனை’ போன்ற பல நல்ல இலக்கிய அமைப்புகள் இருக்கின்றனவே, பிறகு ஏன் இன்னொன்று? வினாவிற்கு விடை தந்தார் வைரமுத்து. அந்த அமைப்புகள் வெளிவந்த படைப்புகளுள் சிறந்தனவற்றைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றன. இந்த அமைப்போ, சிறந்தனவற்றைத் தேர்ந்தெடுத்து வெளியிடுகின்றது.

தொல்காப்பியம்தான் நமக்குக் கிடைத்துள்ள நூல்களிலேயே தொன்மையானது. அந்நூல் ‘எழுத்தெனப் படுப...’ என்றுதான் தொடங்குகின்றது. முதல் தமிழ் நூலின் முதல் சொல்லே, இவ்வமைப்பின் பெயர் என்று விளக்கினார் அவ்வை.

இவ்வமைப்பிற்காகவே வைரமுத்து எழுதியிருந்த பாடல் பொருள் பொதிந்ததாய் அமைந்திருந்தது. எழுத்தும் நீயே, சொல்லும் நீயே, பொருளும் நீயே என்று தொடங்கிய அப்பாடல், ‘நிலவும் கதிரும் நிலவும் வரையில்,நீதான் தமிழே எங்கள் முதல் தாய்’ என்று முடிந்தது.

தன்னுடைய 28ஆவது வயதில், தன் 'கண்ணீர்ப் பூக்கள்' கவிதை நூலை வெளியிடத் தான் எப்படியெல்லாம் துன்பப்பட்டேன் என்பதைக் கவிஞர் மு. மேத்தா விளக்கினார். "என் மனைவி தன் கை வளையல்களைக் கழற்றினார்....நீங்கள் என் கவிதைகளைப் படித்தீர்கள்" என்றார். இப்போது புதிதாய்க் கவிதையுடன் வரும் இளைஞர், புதிய நம்பிக்கையோடும் வரலாம் என்றார்.

ப. சிதம்பரம் இருபெரும் வேதனைகளை அரங்கின் முன் வைத்தார். ஒன்று, 7 கோடித் தமிழர்கள் வாழும் நாட்டில், 1000 படிகளை விற்பனை செய்ய முடியவில்லையே என்பது. தமிழ்நாட்டில் இன்று 59 பல்கலைக் கழகங்கள் உள்பட, ஏறத்தாழ 13,000 கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஒரு நிறுவனம் ஒரு நூல் வாங்கினால் கூட, 13,000 படிகள் விற்றுத் தீர்ந்து விடுமே என்றார்.

 அடுத்து ஒரு வேதனையான செய்தியை முன்வைத்தார். இங்கு நூலகங்களுக்கு நூல்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப் படுகின்றன என்பதை விரித்துக் கூற முடியவில்லை என்றார். உண்மைதான். தரம் பார்த்து இங்கு நூல்கள் நூலகங்களுக்குத் தேர்வு செய்யப் படுகின்றனவா? ஏன், சில குறிப்பிட்ட பதிப்பகங்களுக்கு மட்டும் ஏராளமாய் அரசின் பணம் போய்ச் சேருகின்றது? பணம், கட்சி, சாதி இவைகள்தான் கோலோச்சுகின்றனவா? இவ்வினாக்கள் விடை காணப்பட வேண்டியவை. இவ்வினாக்களுக்கு விடை தேடி,நேர்மையான படைப்பாளிகளும், அறிஞர்களும் ஓர் இயக்கம், ஒரு போராட்டமே நடத்த வேண்டாமா? அதற்கான காலம் நெருங்கி விட்டது.

சிதம்பரம் அவர்களிடம் நமக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. மத்திய அரசின் மிகப் பெரிய பொறுப்புகளில் எல்லாம் இருந்தவர் ப.சிதம்பரம். அப்போதெல்லாம் இந்த ‘நூலக ஊழல்’ குறித்து அவர் ஏன் பேசவில்லை?

எவ்வாறாயினும், ஓர் அரசியல்வாதியின் நல்லதொரு இலக்கிய முயற்சி பாராட்டிற்குரியது. வாழ்த்துவோம்....வளரட்டும் எழுத்து!

Pin It