நிலம் கையகப்படுத்துதல் சட்ட முன்வடிவு குறித்து அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசும்போது, “இதை உங்களின் கவுரவப் பிரச்சனையாகக் கருத வேண்டாம்” எனப் பேசி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இது இந்திய விவசாய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனை என்பதைப் புரிந்து கொள்ளாத மோடி, இதை அவரின் கவுரவப் பிரச்சனையாகக் கருதிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் ஆணவம் மிக்க அவசரச் சட்டம்.

இச்சட்டம் பிரித்தானிய அரசால் 1894ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது-. அப்போதுதான் இந்தியாவில் தொடர் வண்டிகள் அறிமுகமாயின. அவற்றுக்கான தண்டவாளங்களை அமைப்பதற்கு நிலங்களை, வயல்களைக் கையகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஆங்கிலேய அரசுக்கு ஏற்பட்டது. அதற்காகவே இந்தச்சட்டம் நிறைவேறியது-. 117 ஆண்டுகளுக்குப் பிறகு முந்தைய காங்கிரஸ் அரசு அச்சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்தது. அவற்றுள் முக்கியமானது, நிலச் சொந்தக்காரர்கள் 70 விழுக்காட்டினரின் அனுமதி பெற வேண்டும் என்பது. மோடியின் அவசரச் சட்டம் அதைத் திருத்தி விவசாய நில உரிமையாளர்களின் அனுமதி பெறாமலே, நிலங்களைக் கையகப்படுத்த வழி வகை செய்துவிட்டது.

இச்சட்டத்தை ஆளும் கட்சியான பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகளே எதிர்த்தன. அகாலி தளமும், சிவசேனாவும் இச்சட்டம் வேண்டாம் என வலியுறுத்தின. இறுதியில் அகாலிதளம் மட்டும் சட்டம் நிறைவேறத் தன் ஒப்புதலைத் தெரிவித்துவிட்டது. கள்ள மவுனம் சாதித்து வந்த அ.தி.மு.க., 10.03.15ஆம் நாள் நாடாளுமன்ற மக்களவையில் தன் ஆதரவைத் தெரிவித்து வாக்களித்துள்ளது. இந்தியாவெங்கும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அ.தி.மு.க. செய்துள்ள மிகப்பெரிய துரோகம் இது.

பழங்குடியின மக்கள் அவர்களின் சொந்த வாழ்விடமான மலைகளில் இருந்து விரட்டப்படுவதைப் போல, விவசாயப் பெருமக்கள் அவர்களின் நிலங்களில் இருந்து விரட்டப்படும் நிலைக்கு ஆளாக்கப்பட்டு விட்டார்கள்.

நிலம் கையகப்படுத்தல் என்பது ஏதோ பயன் இல்லாத புறம் போக்கு நிலங்களைக் கையகப்படுத்துவது அன்று. மாறாக வளமை நிறைந்த நன்செய், புன்செய் நிலங்களைப் பறிக்கும் கொடுமை இதனுள் அடங்கி இருக்கிறது. இதன் தாக்கம் தமிழகத்தில் தெரிகிறது.

தொழில் வளர்ச்சிக்கென மாவட்டங்கள் தோறும் நில வங்கிகள் அமைத்தல், தொழில்துறையை ஊக்குவிக்க சிப்காட், சிட்கோ போன்ற அரசு அமைப்புகள் மூலம் தொழில் பேட்டைகள் அமைத்தல் போன்றவற்றிற்காக நிலம் கையகப்படுத்தும் முடிவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதற்காக அரசு தேர்வு செய்த இடம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின், ஓசூர் வட்டத்தில் உள்ள சூளகிரி. இதன் அருகில் 2300 ஏக்கர் கையகப்படுத்த 21.11.2012 அன்று ஓர் ஆணையும் வெளியிடப்பட்டது.

அதன்படி சூளகிரி ஒன்றியத்தின் கானலட்டி, கோனேரிப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, தோரிப்பள்ளி, அட்டகுறுக்கி, செட்டப்பள்ளி ஊராட்சிகளில் 834 ஏக்கர் நிலங்கள் கைப்பற்றப்படுவதாகக் கூறி சனவரி 21ஆம் நாள் அந்நில விவசாயிகளுக்கு அறிவிக்கை அனுப்பியது.

இந்நிலங்கள் எப்படிப்பட்டவை தெரியுமா?

இவைகளுக்குத் தென்பெண்ணை ஆற்றின் நீரும், கெலவரப்பள்ளி அணையின் நீரும் வந்து கொண்டு இருக்கின்றன. அங்குள்ள வேளாண் கிணறுகளில் எட்டும் தூரத்தில் தண்ணீர் வளம் இருக்கிறது. நன்செய் நிலங்கள். நெற்பயிர் செழித்து வளரும் செம்மண் நிலங்கள். காய்கறிகள் பயிர் செய்வதற்கு உரிய புன்செய் நிலங்கள். இங்கே விளையும் விளைபொருள்கள் அண்டைய மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகத்திற்குப் பெருமளவில் அனுப்பப்படுகின்றன. தமிழகத்திற்கு இந்த விளைபொருள்களின் பயன்கள் கூடுதலாகவே கிடைத்து வருகின்றன.

இப்படிப்பட்ட நிலங்களைத்தான் அரசு கையகப்படுத்த முனைகிறது. அப்படி நடந்தால் அந்நிலங்களின் வேளாண்மை முற்றிலும் அழிந்துவிடும். விவசாயிகளின் வாழ்க்கை தெருவுக்கு வந்து கேள்விக்குறியாகிவிடும். அவர்கள் குழந்தைகளின் எதிர்காலம் எல்லாம் அற்றுப்போய்விடும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சிப்காட் தொழில்பேட்டை ஏற்கனவே இருக்கிறது.

தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு அங்கு தொழில் தொடங்க வந்தவர்களை ஊக்கப்படுத்தியது. அவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டுத் தண்ணீர், தடையில்லா மின்சாரம் போன்ற அனைத்து வசதிகளும் கொடுக்கப்பட்டன.

ஆனால் இன்றைய அரசின் மின்தட்டுப்பாடு உட்பட பல்வேறு அலட்சியப் போக்கால் ஓசூர் தொழில்பேட்டையில் 236 தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன, முடங்கிப்போனவைகளும் உண்டு.

இவைகளைச் சரிசெய்து தொழிற்பேட்டையை வளர்ச்சி நிலைக்குக் கொண்டு போக முடியாத அரசு, வளமான விளைநிலங்களைக் கையகப்படுத்துவது ஏன் என்ற வினாவும் அம்மக்கள் மத்தியில் எழாமல் இல்லை.

பன்னாட்டுக் கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று, மாதம் ஒன்றுக்கு 1000 கார்கள் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு அதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுடன் கையெழுத்தாகியுள்ளது.

அதற்குத் தண்ணீர், மின்சாரம், உரிய தட்பவெப்பச் சூழல், இவைகளோடு பிற மாநிலங்களுடன் எளிதான போக்குவரத்துக்குரிய வசதிகள் ஆகியவை தேவைப்படுகின்றன.

அதற்காகத்தான் ஓசூரில் பெருமளவு நிலம் கையகப்படுத்தும் நோக்கத்தில் அரசு முனைந்துள்ளது என்று அப்பகுதி மக்களிடம் கருத்து நிலவுகின்றது.
ஏற்கனவே மேற்கு வங்க இடதுசாரிகளின் ஆட்சியில், டாடா நிறுவனத்திற்கு நானோ கார் தொழிற்சாலை அமைக்க 900 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மக்களின் வலிமையான போராட்டம், டாடா நிறுவனத்தைப் பின்வாங்கச் செய்தது என்பதை அறிவோம்.

இப்பொழுது தமிழகத்திலும் அந்தக் காற்று வீசுவதாகத் தெரிகிறது. இது ஓர் எடுத்துக்காட்டுதான்.

மோடி அரசின் அவசரச் சட்டத்தில் தேசியப் பாதுகாப்பு, இராணுவம், மின்சாரம், தொழில் மற்றும் ஏழைகளுக்கான வீடுகள் ஆகிய 5 திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சியினர் இதைக் கருப்புச் சட்டம் என்கிறார்கள்.

நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் என்றெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தது பி.ஜே.பி. அதன் பிரதமர் 10 லட்சத்தில் கோட் போடுவார்;அப்படியே, விவசாயிகளின் கோவணத்தையும் உருவிக் கொள்வார்.

Pin It