kaaruvaki 450காருவகி

ஆசிரியர் : இளவேனில்

கிடைக்குமிடம் : கற்பகம் புத்தகாலயம்

4/2, சுந்தரம் தெரு (நடேசன் பூங்கா அருகில்)

தியாகராயநகர், சென்னை - 17

விலை : ரூ.200

தொலைபேசி : 044&21314347

அசோகரின் கலிங்கப் போர் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், அந்தப் போரில் அசோகர் எந்த மன்னனுடன் போரிட்டார் என்னும் வினாவிற்கு விடை தெரிந்தறுவர்கள் மிக மிகச் சிலராகவே இருப்பர். எழுத்தாளர் இளவேனில் எழுதியுள்ள காருவகி என்னும் வரலாற்று நாவல், இந்த வினாவிற்கான விடையை சான்றுகளோடு தருகிறது.

அசோகரோடு போரிட்ட மன்னர் யார், அசோகரின் மனமாற்றத்திற்கு அந்தப் போர்க்களக் காட்சி மட்டும்தான் காரணமா, கொடிய மனங்கொண்ட கௌடில்யரின் பின்புலக் கதை என்ன ஆகிய மூன்று வினாக்களை மையமாகக் கொண்டு சுழல்கிறது காருவகி நாவல்.

“பூமலி பொன்மலி பாடலிபுத்திரம்” ஒரு காலகட்டத்தில் உணவுக்கே வழியின்றி வறுமையில் தவித்தது. அப்போது, தமிழகத்தின் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், நூற்றுக்கணக்கான நெல்மூட்டைகளைக் கப்பல்களில் ஏற்றி அங்கு அனுப்பினார்கள். ஆனாலும் பாடலிபுத்திரத்திற்கும், தமிழ் நாட்டுக்குமான உறவு தொடர்ந்து நீடிக்கவில்லை.

சந்திரகுப்தன், பிந்துசாரன் ஆகிய அரசர்களின் ராஜகுருவாக விளங்கிய கௌடில்யர் என்னும் சாணக்கியர் கூறிய அறிவுரைகளையே அந்தப் பாடலிபுத்திரத்து மன்னர்கள் செவிமடுத்தார்கள். அப்போது சுசீமனும், அசோகனும் இளவரசர்களாக இருந்தனர்.

கலிங்கம் என்பது இன்றைய ஒடிசாதான் என்பதை எல்லோரும் அறிவோம். அந்தக் கலிங்கத்தை அன்றைக்கு ஆண்ட, மேகவாணன் என்னும் அரசன் மௌரிய மன்னன் பிந்துசாரனுக்கு நண்பனாகவும், சம்பந்தியாகவும் விளங்கினான். தமிழகத்தின் எல்லைகளிலும் தன் கொடி பறக்க வேண்டும் என்னும் ஆசை மேகவாணனுக்கு எழுந்தது. அதற்கு சுசீமன் உடந்தையாக இருந்தான்.

அன்றைக்குக் கூலிப்படைகளாக விளங்கிய கோசர்களின் துணையோடு, சோழ நாட்டின் எல்லையில் இருந்த சத்திரம் ஒன்றை அவன் எரித்தான். அந்தச் சத்திரத்தில்தான் தமிழகத்தின் மிகத் தொன்மையான சுவடிகள் எல்லாம் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவற்றைத்தான் அவன் எரித்தான். இளவேனிலின் வரிகளில் சொல்ல வேண்டுமானால், “அவர்கள் எரித்தது சத்திரத்தை அன்று, தமிழினச் சரித்திரத்தை”.

சோழ நாட்டில், அன்னி ஞிமிலி என்றொரு பெண் இருந்தாள். அவள் மேய்த்துக் கொண்டிருந்த ஆநிரைகளைக் கோசர்கள் கவர்ந்து சென்றார்கள். அவற்றை மீட்கச் சென்ற அன்னியின் தந்தை, திரையனின் கண்களைப் பிடுங்கி எடுத்துக் குருடாக்கினார்கள். சுருக்கமாகச் சொன்னால், சோழ மாமன்னரைப் போருக்கு இழுப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

புறப்பட்டான் சோழ மன்னன் போர்க்களம் நோக்கி! அந்தப் போரில் கலிங்க அரசனுக்குத் துணையாக, மௌரிய வம்சத்தின் இளவரசன் அசோகன் களத்தில் இறங்கினான். அதுதான் கலிங்கப் போர். அந்தப் போர் கலிங்கத்தில் நடந்ததே தவிர, கலிங்க மன்னனுக்கும் அசோகனுக்கும் நடந்த போரில்லை. அசோகனுக்கும், தமிழனாகிய சோழ மன்னன் ஒருவனுக்கும் நடைபெற்ற போர். அப்போரில் ஈடுபட்ட சோழ மன்னின் பெயர், ‘செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி’.

கலிங்க மன்னனின் கோட்டை பாழிக் கோட்டை. அந்தக் கோட்டையைச் செருவில் & போரில் & தகர்த்து எறிந்த இளஞ்சேட்சென்னி என்பது அதன் பொருள். இந்த உண்மையை வரலாற்றுச் சான்றுகளோடு வடித்தெடுத்துப் புதினமாக்கி இருக்கிறார் இளவேனில்.

மாமன்னன் அசோகனின் மனமாற்றம் ஒரே இரவில் நிகழ்ந்திருக்க முடியாது. அதற்குப் பின்புலமாகப் பல்வேறு நிகழ்வுகளும் மனிதர்கள் சிலரும் இருந்திருக்கக் கூடும். தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்னிஞிமிலி அசோகனின் மனமாற்றத்திற்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்பதைக் கல்வெட்டுச் சான்றுகளில் இருந்து ஆய்வாளர்கள் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர். அந்தப் பெண்ணின் பெயர்தான், பௌத்த பிக்குவான உபகுப்தரால், ‘காருவகி’ என்று மாற்றப்பட்டுள்ளது. கார் (மேகம் & மழை) கண்டு உவக்கும் மயிலை மிகவும் நேசிக்கிற பெண் என்பதால் அவளுக்குக் காருவகி என்று பெயர் சூட்டுகிறார் உபகுப்தர். அந்தக் காருவகிதான் இந்த நாவலின் கதாநாயகி.

சாணக்கியரின் தந்திரம், வஞ்சகம் ஆகியனவற்றை உலகம் அறியும். ஆனால் அவைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் அவர் வாழ்வின் அவலங்கள் குறித்து அனைவரும் அறிந்திருக்க முடியாது. அதனை விரிவாகவே இந்நூல் பேசுகிறது. பார்ப்பனர் என்றாலும், கருப்பாக இருந்த காரணத்தால், அந்தச் சமூகத்தினரால் கருப்புப் பார்ப்பனன் என்று அவமதிக்கப்பட்டவரே சாணக்கியன்.

மன்னர்கள் பலரும் கலந்து கொண்ட விருந்து ஒன்றில், அந்தக் காரணத்தைக் காட்டியே நந்தர்கள் அவரை வெளியேற்றி அவமானப்படுத்தினார்கள். அந்த வெறி அவர் நெஞ்சுக்குள் நெருப்பாய் எரிந்தது. நந்த வம்சத்தையே பூண்டோடு அழிக்க வேண்டும் என்று அவர் கொண்ட சபதம்தான் வடநாட்டின் வரலாற்றில் ஒரு பகுதியை மாற்றி எழுதியது-. நந்தர்களின் பேரரசு முடிந்து, மௌரியர்களின் காலம் தொடங்கிற்று.

நாவலின் இறுதிப்பகுதியில் சாணக்கியர் தன் பிறப்பின் ரகசியத்தை ஒரு கடிதமாக எழுதி அசோகருக்கு அனுப்பி வைக்கிறார். அந்தக் கடிதத்தின் கடைசி வரிகள், “ஆதிக்க வெறிபிடித்த மூளையோடு மகத நாட்டுக்குள் வந்தேன். அன்புக்குத் தலைவணங்கும் இதயத்தோடு அங்கிருந்து வெளியேறுகிறேன்” என முடியும்போது, சாணக்கியரின் மீது நாம் கொண்டிருக்கும் கோபம்கூடத் தணிந்து, அறிவும் ஆற்றலும் மிக்க மனிதர்களைக் கூட, சாதி வெறி கொண்ட சமூக அமைப்பு எப்படி மாற்றிவிடுகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

இளவேனிலின் மொழிநடை, நாவலின் தனிச்சிறப்பு. இதோ சில எடுத்துக்காட்டுகள்:

“(அந்தச் சத்திரத்திற்கு) ஆசைகளைத் துறந்த புத்த, ஜைனத் துறவிகள் வருவார்கள். ஆசைகளோடும், வேத மந்திரங்களோடும் பிராமணப் பண்டிதர்கள் வருவார்கள்”

“காடுகளை அழித்தால் ஒரு நாடு அழிந்துவிடும். ஏடுகளை அழித்தால் ஓர் இனமே அழிந்து விடும்”

“யாரோ சொன்னார்கள்...இது இரத்த ஞாயிறாம். இது இரத்த ஞாயிறு அல்ல, தமிழன் செத்த ஞாயிறு”

“போர் வீரனாக வாழ்ந்து பாருங்கள். சாவைப் பற்றிய பயமே வராது”

“இங்கே வீரம் என்பது வெறும் போதையாய் இருக்கிறது. புதிய வாழ்க்கையைக் கொண்டு வருவதில்தான் வீரம் இருக்கிறது, புதிய சர்வாதிகாரியைக் கொண்டு வருவதில் இல்லை”

“கனமாக இருக்கிறதா, சுகமாக இருக்கிறதா என்பது சுமையில் இல்லை. அது யாரைச் சுமக்கிறோம் என்பதில் இருக்கிறது”

வரலாற்றுச் செய்திகளுக்காகவும், அழகிய தமிழுக்காகவும் அனைவரும் படித்து அறிந்து கொள்ள வேண்டிய நூல் & இளவேனிலின் இந்த எழுத்துச் சித்திரம்.

Pin It