சிங்கள இனவாதம் தலைதூக்கத் தொடங்கி, தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்ட நாள் முதலாக, ‘இலங்கை’யின் சுதந்திர நாளில் தமிழ்ப் பிரதிநிதிகள் ஒருவரும் பங்கேற்றதில்லை.  இலங்கைத் தீவின் மற்றொரு தேசிய இனமான தமிழினத்தின் தனிநாட்டுக்கான உரிமை அங்கீகரிக்கப்படாதவரை, அத்தீவின் சுதந்திர நாள் என்பது, சிங்கள இனத்திற்கு மட்டுமே உரியது என்பதே அதற்குக் காரணம். அதை ஒருவகையில், தமிழினத்தின் தன்மான நடவடிக்கை என்றும் கொள்ளலாம்.

இன்றைக்கு அந்தத் தன்மானம் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 4ஆம் நாள் நடந்த, இலங்கையின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தில், தமிழ்ப் பிரதிநிதிகள் இருவர் கலந்து கொண்டுள்ளனர். புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் தமிழர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையைப் பெற்ற அரசாங்கம் அன்று. ஆட்சி மாறியிருக்கிறதே ஒழிய, அரசு மாறவில்லை, அரசமைப்பு மாறவில்லை. தமிழர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்திருக்கின்ற காரணத்தால், ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் புதிய ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். அதற்காக அவர்கள் மேற்கொள்ளப் போவதாகச் சொல்லும் திட்டங்கள் நடைமுறைக்கு ஒத்து வருவதாகத் தெரியவில்லை.

இராணுவத்தை விலக்கிக் கொள்ளாமல், இன்றும் திறந்தவெளி சிறைச்சாலைகளைப் போலத்தான், தமிழர்கள் வசிக்கின்ற பகுதிகளை, இலங்கை அரசு வைத்துள்ளது. தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்டவற்றை உத்திரவாதப்படுத்தும் திட்டங்களோ, நடவடிக்கைகளோ முன்னெடுக்கப்படுவதற்கான அடையாளங்கள் எதுவும் காணக்கிடைக்கவில்லை.

இந்நிலையில், அந்நாட்டின் சுதந்திர நாளில் தமிழ்ப்பிரதிநிதிகள் பங்கேற்றதை நம்மால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அப்படிச் செய்வது, இலங்கையின் இன்றைய சட்ட திட்டங்களை, அரசமைப்பை ஒப்புக்கொண்டது போலாகும் என்றே நாம் கருதுகிறோம்.

Pin It