kumaresan 350மத்தியில் மோடி அவர்களின் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவ்வாட்சி குறித்த தங்களின் மதிப்பீடு என்ன?

வானதி : மத்தியிலே பதவியேற்று 6 மாதங்கள் ஆன ஒரு அரசாங்கம் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அத்தனையும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் படி செய்து கொண்டிருக்கிறது.

முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே கறுப்புப் பணம் மீட்புக்கான சிறப்புக் குழுவை அமைத்தது முதற்கொண்டு, தூய்மை பாரதம், மேக் இன் இன்டியா, தேவையற்ற சட்டங்களை நீக்குவது, அனைத்து அரசுத் துறைகளிலும் செயல்படக்கூடிய தன்மையை ஊக்குவித்தது, குறிப்பாக அதிகாரிகள் மட்டத்தில் முடிவெடுக்கக் கூடிய நம்பிக்கையை ஏற்படுத்தியது, உற்பத்தியை எடுத்துக்கொண்டால், ஒட்டுமொத்த வளர்ச்சியான நிஞிறியில் 1.5% வரை உயரச் செய்திருப்பது, அண்டை நாடுகளுடனான நல்லுறவை மேம்படுத்தியது என இம்மாதிரியான காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாகத் தமிழகத்தைப் பொறுத்தவரை, மீனவர்கள் பிரச்சினையில் அக்கறை எடுத்திருப்பது, திருவள்ளுவர், பாரதியார் ஆகியோரின் புகழை நாடறியச் செய்திருப்பது, ஏன் பாரதியினுடைய பிறந்த நாளுக்குத் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துச் சொல்லியிருப்பதன் மூலமாக, உலக அளவில் நம் பாரதியினுடைய புகழ் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இம்மாதிரியான பல்வேறு விசயங்கள், பல்வேறு வகைகளில், தேசிய எண்ணத்தை வலுப்படுத்துகின்ற வகையில் செயல்பட்டுக்கொண்டிருப்பது என அவருடைய செயல்பாடுகள் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளன.

குமரேசன் :

இந்த ஆட்சி அமைந்தால் எப்படியிருக்கும் என்று தேர்தலுக்கு முன் கணித்தேனோ அப்படியே அமைந்திருப்பதாகவே கருதுகிறேன். தொடக்கக் கட்டத்திற்கே உரிய சில நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்படுவது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் உடனுக்குடன் செயல்பட முடிகிறது என்ற எண்ணம் பரப்பப்படுகிறது. ஆனால் எப்படிப்பட்ட நடவடிக்கைகள் என்பதும், அதிகாரிகள் உடனுக்குடன் என்ன செய்கிறார்கள் என்பதும் மக்கள் கவனத்திற்கு வராமல் மறைக்கப்படுகிறது.

எந்தவொரு அரசின் செயல்பாடும், அது பொருளாதாரம், சமுதாயம் ஆகிய இரண்டு களங்களில் என்ன செய்கிறது என்பதைக் கொண்டே மதிப்பிடப்படும். நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியைப் பொறுத்தமட்டில், முன்பு மன்மோகன் சிங் அரசு எப்படிப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் மீது திணித்ததோ, அதே கொள்கைகள்தான் இப்போதும் புகுத்தப்படுகின்றன.

பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக்கட்டுவது, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதன் பெயரால் உள்நாட்டில் தொழிலாளர் உரிமைகளைக் காவுகொடுப்பது, உள்நாட்டு - பன்னாட்டுப் பெரு நிறுவனங்களின் ஆதாய வேட்டைக்காக நிலங்களைத் தாரை வார்ப்பது, அவர்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்குவது, மக்களுக்குப் பாதுகாப்பாக இருந்துவந்த மானிய ஏற்பாடுகளைக் கைவிடுவது, மக்களை முழுக்க முழுக்க சந்தை சக்திகளின் பிடியில் தள்ளிவிடுவது......என்று பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முந்தைய ஆட்சியை ஒற்றியெடுத்ததாக இருக்கின்றன.

நாடாளுமன்றம், நீதிமன்றம் இரண்டையுமே மதிக்காமல் ‘ஆதார்’ அட்டையைக் கட்டாயமாக்குவதும், பிற்காலத்தில் முற்றிலுமாக அரசின் நிதிப்பொறுப்பைக் கழற்றிக்கொள்ளத் தோதாக சமையல் எரிவாயுவுக்கு மானியமாக இல்லாமல் வங்கிக்கணக்கில் பணமாகவே போடப்படும் என்ற ஏற்பாடும் இதற்கு உடனடி சாட்சிகள்.

காங்கிரஸ் கட்சி கூட, தனது கொள்கைகளைத்தான் பாஜக அரசு செயல்படுத்துகிறது என்பதை விளக்கி, கறுப்புப் பண மீட்பு உள்ளிட்டவற்றில் தனது நிலைபாடுகளுக்கே மோடி திரும்பி வருகிறார் என்ற பொருளில் “யுடர்ன் அரசு” என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. இது “யுடர்ன்” அரசு கூட அல்ல, முந்தைய ஆட்சியின் கொள்கைகளை இன்னும் வேகமாக, இன்னும் மூர்க்கமாகக் கையிலெடுத்துக்கொண்டு தொடர் ஓட்டமாய் ஓடுகிற “ரிலே ரேஸ்” அரசு என்பேன்.

இந்த ஆட்சியின் மாறுபட்ட தன்மை என்னவென்றால், மக்களின் ஏமாற்றத்தை எப்படித் தடம் மாற்றுவது என்ற வித்தையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான். மக்களின் ஆத்திரத்தை மதவாதப் பிரச்சனைகளாகத் திசை திருப்புவதில் வல்லவர்கள் இவர்கள். கடந்த ஆறு மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மதம் சார்ந்த வன்முறைகள் பெருகியிருப்பது தற்செயலானது அல்ல.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாநிலங்களில்தான் பயங்கரவாதக் குற்றங்கள் அதிகமாக நிகழ்ந்திருக்கின்றன என்று நாடாளுமன்றத்திலேயே ஒரு அமைச்சர் மதத்தை அடையாளப்படுத்தித் தகவலளிப்பதும், பாஜக-வினர் அல்லாத மற்றவர்கள் ராமன் வழியில் அல்லாமல் முறைதவறிப் பிறந்தவர்கள் என்று அமைச்சராக உள்ள ஒரு பெண் சாமியார் பேசுவதும் ஏதோ வாய் தவறி விழுந்த சொற்களல்ல. அரசியல் - சமுதாயம் இரண்டையும் மதவெறிமயமாக்குகிற நெடுந்திட்டத்திற்கான ஏற்பாடுகளே.

அரசியலுக்காக மதத்தைப் பயன்படுத்திக்கொள்கிறவர்கள் உண்டு. பாஜக-வோ மதத்திற்காக அரசியலைப் பயன்படுத்துகிற கட்சி. மதச்சார்ப்பற்ற இந்தியாவை ஒற்றை மத ஆட்சிக்கு உட்பட்ட நாடாக மாற்ற வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்ட ஆர்எஸ்ஆர்எஸ் அமைப்பின் வியூகங்களில் ஒன்றுதான் மைய ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது.

இந்து மதத்தின் ஆட்சி என்பதன் பொருள் உலகில் வேறெங்கும் இல்லாத இழிவாகிய சாதிப்பாகுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட வர்ணாஸ்ரமத்தையும், பெண்ணடிமைத்தனத்தையும் கட்டிக்காப்பதுதான். அதன் ஒரு கட்டமாகத்தான், இந்து மதத்திற்கு உள்ளேயே கூட அனைத்து சமூகங்களுக்கும் கல்வி - வேலை வாய்ப்பு அளிக்கிற சமூக நீதி ஏற்பாட்டைக் குழி தோண்டிப் புதைப்பதற்காக அரசுத்துறை, பொதுத்துறை கட்டமைப்புகளை உருக்குலைக்கிற உத்திகள். ஆம், இந்துத்துவா ஆட்சி என்பது சிறுபான்மை மதங்களுக்கு எதிரானது மட்டுமன்று, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் என பெரும்பான்மை மக்களுக்கும் எதிரானது.

சுதேசிப் பொருளாதாரம் என்பது பா.ஜ.க.வின் கொள்கை. ஆனால் இன்று அதிலிருந்து முற்றிலுமாக விலகி, உலகமயமாதல் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்னும் விமர்சனம் சரியானதுதானா?

வானதி : ஒரு விதத்தில் மேக் இன் இன்டியா என்பதே சுதேசி பொருளாதாரம் சார்ந்த எண்ணம்தான். முதலீடுகள், தொழில்நுட்பம், மூலப்பொருட்கள் எங்கிருந்து வந்தாலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என்கின்ற சிந்தனையே இதனுடைய அடிப்படையாகும். அதிலும் குறிப்பாக, நம்முடைய நாட்டின் உற்பத்தித் துறையில் பெரும்பங்கு வகிக்கின்ற சிறுகுறு தொழில்நிறுவனங்களைக் காப்பாற்றுகின்ற நோக்கில், இதுவரை இல்லாத அளவிற்கு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது, சேவைத் துறையைத் தாண்டி, உற்பத்தித் துறையிலும் மிகப்பெரிய அளவில் நம்முடைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குகின்ற திட்டங்களும், ஸ்கில் டெவலப்மென்ட் என்பதற்காகத் தனி அமைச்சரை நியமித்து நம்முடைய உற்பத்திக்கு வலுவூட்டிக் கொண்டிருக்கிறார் மோடி.

குமரேசன் : சுதேசிப் பொருளாதாரமே தனது கொள்கையாக பாஜக முன்பு அறிவித்துக்கொண்டது, தான் மட்டுமே நாட்டுப் பற்றுள்ள இயக்கம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுததுவதற்கான ஒரு உத்தியாகத்தான். அண்மைக்காலமாக பாஜக அந்த முழக்கத்தை ஓங்கி எழுப்புவதில்லை. இவர்களுடைய ஆட்சி வர வேண்டும் என்று விரும்பிய, மக்களிடையே இவர்களுக்கு ஆதரவான மனநிலையை உருவாக்க ஒத்துழைத்த உலகச் சந்தை தாதாக்கள் கண்காட்டிய பிறகு சுதேசிப் பொருளாதாரம் என்ற பதாகையைச் சுருட்டி வைத்துவிட்டார்கள்.

குஜராத் முதல்வராக இருந்தபோது மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கத் தவறிவிட்டார் என்ற காரணத்தைக் கூறி, மோடி அமெரிக்காவுக்குள் வரத் தடை விதித்திருந்த அந்நாட்டு அரசு, இப்போது அந்தத் தடையை விலக்கிக்கொண்டு அவரை வரவேற்கிறது என்றால், அவர் இந்தியாவின் பிரதமராகிவிட்டார் என்பதால் மட்டுமல்ல, பொருளாதார உலகமயமாக்கலுக்கு உடன்படுகிறார், முந்தைய ஆட்சியாளர்களை விடவும் அதில் செயல்முனைப்புக் காட்டுகிறார் என்பதாலும்தான்.

உள்நாட்டு மக்களுக்கான காப்பீட்டுத் துறையில் மட்டுமல்லாமல், நாட்டிற்கான காப்பாகிய பாதுகாப்புத் துறையிலேயே அந்நிய நேரடி முதலீட்டிற்குக் கதவு திறந்துவிடப்படுவதெல்லாம் உலகச் சந்தை சக்திகளின் கட்டளைப்படியே.

பொருளாதாரத்தில் உலகமயமாதலும், மொழிக் கொள்கையில் வேத மயமாதலும் என்று எண்ணத்தக்க அளவில் பா.ஜ.க. அரசு சென்று கொண்டிருக்கிறதா?

வானதி : இல்லை. உலகமயமாதல் என்கின்ற உலக நகர்வில் இந்தியா பின்தங்கிவிட முடியாது. நம் நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, குடிமக்கள் உரிமை - இம்மூன்றுக்கும் உச்சபட்ச கவனம் கொடுக்கப்பட்டு கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல வேதமயமாக்கல் என்பது சமற்கிருதத்தை ஒட்டி வருகின்ற கேள்வியாக நான் பார்க்கிறேன்.

95% நம்முடைய வேதங்கள், வாழ்வியலைச் சொல்கிறதே தவிர, சடங்குகளைச் சொல்லவில்லை. ஆக, அதைக் குறிப்பிட்ட ஒரு மதத்தோடு சேர்த்துக் குழப்பிக் கொள்ளாமல், அதை ஒரு சிந்தனைக் கருவூலமாகத்தான் பார்க்க வேண்டும். ஆக, சமற்கிருதத் திணிப்பு அல்லது கட்டாயம் என்று இல்லாமல் இருக்கின்ற சூழ்நிலையில், ஒரு மொழி அரசியலுக்காக இங்கு எழுப்பப்படும் ஒரு குரலாகவே இதைப் பார்க்கிறோம். மேலும், சமற்கிருதம் என்பது, குறிப்பாக ‘குருஉத்சவ்’ என எடுத்துக் கொண்டால், அதில் வருகின்ற ‘குரு’ என்னும் சொல்கூட, குரவன் என்கின்ற தமிழ்ச் சொல்லை மூலமாகக் கொண்டது.

ஆசிரியர் தினம் என்பதிலுள்ள, ‘தினம்’ என்பது சமற்கிருதச் சொல். இந்நாட்டில் இருக்கக் கூடிய பல்வேறு மொழிகளும், ஒன்றுக்குள் ஒன்று பிணைந்து, மொழியைச் செறிவூட்டியதே அல்லாமல், அதைப் பிரிப்பதற்கான ஒரு காரணியாய்ப் பார்க்கக் கூடாது.

குமரேசன் : நாடாளுமன்ற மக்களவையில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படாத பெரும்பான்மை வலிமையோடு இருக்கிற, முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகளோடு அப்பட்டமான மதவாதமும் இணைந்துள்ள கட்சியின் ஆட்சி நடப்பது, இந்தியச் சந்தையை ஆக்கிரமிக்கிற தங்களது நோக்கங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று உலகச் சந்தை பீடங்கள் கருதுகின்றன. உலகின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் என்ற ‘டைம்’ பட்டமெல்லாம் மோடி அவர்களுக்கு வழங்கப்படுவதன் உள்நோக்கம் அதுதான்.

அதே போல், உலகச்சந்தையோடு முடிச்சுப்போடுகிற உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளால், மக்களிடையே ஏற்றத்தாழ்வு பெருகுவது, நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர்களைக் கூறுபோட ஏதுவாக இருக்கும் என்றே இங்குள்ள மதவெறி பீடங்கள் கணக்குப் போடுகின்றன. அந்தக் கணக்கோடுதான் வேதமயமாக்கலின் ஒரு பகுதியாகவே, ஏதோ இந்தி படித்தால்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற திசை திருப்பல் கைங்கரியங்கள் நடக்கின்றன. இந்தியையே தாய்மொழியாகக் கொண்டவர்கள் தங்கள் மாநிலங்களில் வேலைவாய்ப்பில்லாமல் ஏன் வேறு பகுதிகளுக்குப் புலம் பெயர்கிறார்கள் என்று மக்களை யோசிக்க விடுவதில்லை.

சமஸ்கிருதம் புகுத்தப்படுவதன் நோக்கம், அந்த மொழியைப் பாதுகாப்பதல்ல. வேதங்கள் வற்புறுத்துகிற சாதிய வர்ணாஸ்ரமக் கட்டமைப்புகளையும், சமூக - பாலின சமத்துவ உரிமைகளுக்கு எதிரான பாகுபாடுகளையும், அறிவியல் கண்ணோட்டங்களுக்கு முரணான மூடக் கோட்பாடுகளையும் நிலை நிறுத்துவதுதான். புராணங்களின் கற்பனைகளை ஆதாரம் காட்டி வேத காலத்திலேயே ‘ஸ்டெம் செல்’ சிகிச்சை முறைகளும் ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ நுட்பங்களும், ஏவுகணைத் தொழில் நுணுக்கங்களும் இருந்தன என்றெல்லாம் பேசுவது திட்டமிட்ட மூளைக்கறை உத்திதான்.

மத்திய அமைச்சர் நிர்னஞ்சன் ஜோதியின் பேச்சு நாட்டிலும், நாடாளுமன்றத்திலும் பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளதே, அது குறித்து?

வானதி : மத்திய அமைச்சர் நிர்னஞ்சன் ஜோதி அவர்களின் பேச்சுக்கு அவரே மன்னிப்பு-க் கேட்டிருக்கிறார். பிரதமரே பாராளுமன்றத்தில் நேரில் விளக்கம் அளித்திருக்கிறார். ஒரு கிராமப்புற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, முதல் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி, பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த பின்னும், இதைக் காரணம் காட்டி, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளி செய்வது, இந்த அரசாங்கத்தின் மீது சொல்வதற்கு எதுவுமில்லை என்கின்ற நிலையைத்தான் காட்டுகிறது.

குமரசேன் : முந்தைய ஆட்சியின்போது கூட நாடாளுமன்றத்தில் பேனி பிரசாத் வர்மா போன்ற அமைச்சர்கள், வாஜ்பாய், அத்வானி போன்ற பாஜக தலைவர்கள் பற்றி தரக்குறைவான முறையில் பேசியிருக்கிறார்கள், அதற்காக பிரதமர் மன்மோகன் சிங் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

அப்போதெல்லாம் பெரிதுபடுத்தாதவர்கள் இப்போது நிர்னஞ்சன் ஜோதியின் பேச்சை மட்டும் பெரும் சிக்கலாக்குவது ஏன் என்று பாஜக-வினர் கேட்கிறார்கள். முன்பு அப்படிப் பேசியதைக் கொஞ்சமும் நியாயப்படுத்துவதற்கில்லை என்றாலும், அது தனி மனிதர்களைப் பற்றிய பேச்சு. நிரஞ்ஜன் ஜோதியின் பேச்சோ தனிப்பட்ட யாரையும் பற்றியதல்ல, அதை அவரே குறிப்பிட்டிருக்கிறார்.

பாஜக அல்லாத மற்ற கட்சிகளைச் சேர்ந்தோர் அனைவரும் முறைதவறிப் பிறந்தவர்கள் என்று கூறுவது எப்பேர்ப்பட்ட அரசியல் வன்மம்! ராமன் வழி என்று அடையாளப்படுத்தியதன் மூலம், வேறு கடவுள்களை நம்புகிற மற்ற மதங்களைப் பின்பற்றுவோர், ஏன் - இந்து மத வேலிக்கு உள்ளேயே கூட ராமன் அல்லாத மற்ற சாமிகளைக் கும்பிடுவோர் என அனைவரையும் இழிவு படுத்துவது எப்பேர்ப்பட்ட கலாச்சார வன்மம்!

அவர் ஒரு பிற்படுத்தப்பட்ட எளிய பிரிவைச் சேர்ந்தவர் என்றெல்லாம் கூறி இதற்கு ஒரு சாதிய முலாம் பூசுவதற்கும் முயற்சி செய்தது எப்பேர்ப்பட்ட சமூக வன்மம்!

இவரைப் போன்றவர்கள் அமைச்சராக வலம் வர அனுமதிப்பது என்பது, பொது வெளியில் ஏற்கெனவே மதவெறியோடும் சாதிய வன்மங்களோடும் மூர்க்கத்தனமான வன்முறைகளைக் கைக்கொள்கிற கலாச்சார போலிஸ் கும்பல்களுக்கு ஊக்கமளிக்கும். இப்படியெல்லாம் கிளறிவிட்டு மதம், சாதி சார்ந்த பதற்றங்களைத் தணியவிடாமல் வைத்திருப்பதே கூட ஒரு பிராமணியத் தந்திரம்தான்.

வைகோ அவர்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாது என்று ஹெச். ராஜா பேசியிருப்பது, கொலை மிரட்டலை ஒத்துள்ளதே? இது அரசியல் நாகரிகம்தானா?

வானதி : இன்றைய தேதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மரியாதைக்குரிய வைகோ அவர்கள் இல்லை. ஆனால் கூட்டணியில் இருந்து கொண்டே, திரு வைகோ அவர்கள், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை ஒருமையில் பேசிய பேச்சுக்களும், அதற்கேற்ப பதிலடி கொடுத்த, பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் திரு ராஜா அவர்களின் கருத்தும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியன.

குமரேசன் : அவர்களுடைய அரசியல் நாகரிகத்தோடு இணைந்ததுதான் இது. மோடி தலைமையை ஏற்க மனமில்லாதவர்கள் பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டியதுதான் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசியவருக்கு, மத்திய அரசில் அமைச்சர் பதவிச் சால்வை போர்த்திக் கவுரவிக்கப்படுகிறதே! எச். ராஜா தனக்கும் ஒரு சால்வையை எதிர்பார்ப்பதில் வியப்பென்ன?

ஆனால் இது வைகோ அவர்களுக்கு மட்டுமான மிரட்டலல்ல. பிராமணியத்துக்கு எதிரான திராவிட இயக்கச் சிந்தனைகளை முன்வைப்போர், சுரண்டல் கூட்டங்களுக்கு எதிரான பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டங்களைப் பரப்புவோர், ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண்விடுதலைக்காக வாதாடுவோர் என முற்போக்காளர்கள் அனைவருக்கும் விடுக்கப்படுகிற சவால் இது.

காங்கிரஸ், பா.ஜ.க இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் இடதுசாரிகள், தாங்களும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் உள்ளனர். இடதுசாரிகளுக்கு அளிக்கும் வாக்குகள் வீணாகிவிடும் என்ற எண்ணம் மக்களுக்குத் தோன்றாதா?

வானதி : நிச்சயமாகத் தோன்றும். ஏனென்று கேட்டால், கம்யூனிசக் கொள்கைகள் உலகளவில் தோல்வியடைந்த கொள்கைத் தத்துவமாக இன்று பார்க்கப்படுகிறது-. அதிலும் குறிப்பாக, இந்தியாவை எடுத்துக் கொண்டால், அவர்கள் ஆட்சி செய்திருக்கின்ற கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இன்றுவரை கூட, பொருளாதாரத்திலும், வேலை வாய்ப்பிலும், வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றத்தைக் காணவில்லை.

vanathi 350தேசிய அளவில் அந்தக் கட்சிக்கு வலுமிக்க கட்டமைப்பும் இல்லாத சூழ்நிலையில், அவர்கள் இனிமேல், அரசியல் கட்சி என்பதைத் தாண்டி, அரசியல் விமர்சகர்களாகவே பார்க்கப்படுவார்கள்.

குமரேசன் : இடதுசாரிகளின் ஆட்சி அல்லது இடதுசாரிகளின் தலைமையில் ஆட்சி அமைவது அரசியல், சமுதாயம், பொருளாதாரம் என அனைத்துப் பரிமாணங்களிலும் பெருமளவுக்கு மக்களுக்கு நன்மையளிப்பதாக இருக்கும். மார்க்சியவாதிகள் உள்ளிட்ட இடதுசாரிகள் அப்படியரு மாற்று ஆட்சி அமைக்கிற நோக்கத்துடன்தான் இயக்கம் நடத்துகிறார்கள்.

அதேவேளையில் ஆட்சியமைப்பது மட்டுமே தலையாயது அல்ல. மக்களுக்கான அரசியலில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்படுவதும் இன்றியமையாதது.

மக்களின் தேவைகளுக்காகக் குரல் கொடுக்க, உண்மையான பிரச்சனைகளை எடுத்துரைக்க, திசைதிருப்பல்களை அம்பலப்படுத்த, மாற்றுக் கொள்கைகளில் நம்பிக்கையை ஏற்படுத்த அந்தப் பொறுப்பு விரிகிறது. இடதுசாரிகள் அதை நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

இடதுசாரிகளுக்கு அளிக்கும் வாக்குகள் வீணாகிவிடக்கூடும் என்ற எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்துவதே கூட வலது சாரி சக்திகளின் ஒரு பரப்புரைத் தந்திரம்தான். தட்டிக்கேட்க ஆளில்லாத முழு வலிமையை ஆளுங்கட்சிக்குத் தருவது சர்வாதிகாரத்துக்கே வழிவகுக்கும் என்பதையும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். தட்டிக்கேட்கும் தகுதியோடு இருப்பவர்கள் இடதுசாரிகள் என்ற உண்மையையும் மக்கள் உணரச் செய்ய வேண்டும்.

இந்தச் செய்தியை எடுத்துச்செல்வதற்காகத்தான் நாடாளுமன்றம், மாநில சட்டமன்றம் போன்ற அமைப்புகளுக்கு உள்ளேயும் வெளியேயும் இடதுசாரிகள் மக்களின் பிரச்சனைகளுக்காகப் போராடுகிறார்கள்.

அ.குமரேசன், ஆசிரியர், தீக்கதிர்
வானதி சீனிவாசன், மாநிலத் துணைத்தலைவர், பா.ஜ.க

Pin It