2014 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் படுதோல்வியைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி வரஇருக்கிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தற்போது தயாராக வேண்டிய சூழலில் உள்ளது. அரசியல் ரீதியாகக் கட்சிக்கு உள்ளும், வெளியிலும் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், அமலாக்கப் பிரிவும் காங்கிரஸைக் குறி வைத்திருக்கிறது.

இது குறித்து, கடந்த மே மாதம் உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் சிந்தனை அமர்வில் ஆலோசித்து ‘பாரத் ஜோடோ யாத்திரை’ (ஒன்றிய ஒற்றுமைப் பயணம்) நடத்துவது என்று அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். இந்தப் பயணம் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

rahul gandhi and stalin 47207.09.2022 அன்று மாலை 5 மணிக்குக் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம், 150 நாட்கள் தொடர்ந்து நடந்து காஷ்மீரில் நிறைவடைகிறது. 3,570 கி.மீ. தொலைவு செல்லும் இந்தப் பயணம், ஒவ்வொரு நாளும் காலை - மாலை தலா மூன்று மணிநேரம் என 20 கி.மீ தொலைவைக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியாணா, தில்லி, பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த நடைபயணம் நடைபெறும். இந்த நடைபயணத்தில் மூன்று விதமான பங்கேற்பாளர்கள் இருப்பார்கள்.

இந்த நடைபயணத்தின் தொடக்கம் முதல் முடியும் வரை கலந்துகொள்ளும் 100 பேர், நடைபயணம் மேற்கொள்ளப்படும் மாநிலத்தைச் சேர்ந்த 100 பேர், எந்தெந்த மாநிலங்கள் வாயிலாக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படவில்லையோ அந்த மாநிலங்களைச் சேர்ந்த 100 பேர் கலந்துகொள்ள உள்ளனர். இப்படி ஒரே சமயத்தில் 300 பேர் இந்த நடைபயணத்தில் உறுதியாகக் கலந்துகொள்கின்றனர். தேசியக் கொடியை ஏந்தி நடைபெறும் இந்த நடைபயணத்தில் இடதுசாரி, பொதுவுடைமை அமைப்புகள், காங்கிரஸ் விமர்சகர்கள், பொதுச் சமூகம் எனப் பல்வேறு தரப்பினரும் பங்கேற்கின்றனர்.

கன்னியாகுமரி காந்தி மண்டபம் நுழைவுவாயிலில் 07.09.2022 அன்று மாலை ராகுல்காந்தியிடம் தேசியக் கொடியை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த நடைபயணத்தைத் தொடங்கி வைத்தார்.

“இன்று, என் சகோதரர் ராகுல் காந்தி இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுக்கவும், நமது குடியரசின் உயர்ந்த இலட்சியங்களை நிலைநிறுத்தவும், நம் நாட்டு மக்களை அன்புடன் ஒன்றிணைக்கவும் ஒரு பயணத்தைத் தொடங்கியுள்ளார். சமத்துவச் சிலை தலை நிமிர்ந்து நிற்கும் குமரியை விடச் சிறந்த இடம் வேறு எதுவும் இருக்க முடியாது. இந்தியாவின் பெரிய கட்சி, இந்தியாவை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்க ஒரு கடினமான பணியை மேற்கொண்டுள்ளது. ஒற்றுமை நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்”என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தியடிகள் மேற்கொண்ட தண்டி யாத்திரை, நெருக்கடி நிலைக்குப் பிறகு ஜெயப்பிரகாஷ் நாராயணன் மேற்கொண்ட நடைபயணம், திருச்செந்தூர் கோவில் வைரவேல் திருட்டு மற்றும் கோவில் அதிகாரி மர்ம மரணத்தையொட்டி தலைவர் கலைஞர் மேற்கொண்ட நீதி கேட்டு நெடும் பயணம் போன்றவை இந்திய அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வரிசையில் ராகுல் காந்தியின் இந்தப் பயணமும் இடம் பெறுகிறது.

நாடெங்கும் வெறுப்புணர்வைத் தூண்டி மதவாத அரசியலை முன்னெடுக்கும் பா.ஜ.கவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற அச்சாரமாக இப்பயணம் மக்களை எழுச்சி பெறச் செய்யவும், தொடர் தோல்விகளால் துவண்டிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புத்துயிரூட்டும் வகையில் அமையும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

முன்னரே முதல்வர் மு.க.ஸ்டாலின் “இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டதைப் போல இந்தியாவை மீட்கும் இந்தப் பயணம் தெற்கிலிருந்து தொடங்கி இருக்கிறது. அனைத்து மனமாச்சரியங்களை மறந்து எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டினால் ஆளும் பா.ஜ.கவை விரட்டி அடிக்கலாம் என்று சுட்டிக் காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்பயணத்தைத் தொடங்கி வைத்திருப்பது நல்லதொரு நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

மதவாதத்தை வீழ்த்துவோம்! மனிதநேயத்தைக் காப்போம்!

வழக்கறிஞர் இராம.வைரமுத்து

Pin It