eelam refugees 400

அவர் பெயர் சுரேசுகுமார். இடுப்புக்குக் கீழே எந்த உறுப்பும் செயல்படுவதில்லை. இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இலங்கையில் எந்த மருத்துவ வசதியும் இல்லாததால், மருத்துவச் சிகிச்சைக்காகத் தன் நண்பர்கள் உதவியுடன் தாய்த்தமிழகத்திற்குக் கடந்த 2012 ஆம் ஆண்டு வந்து சேர்ந்தார். மருத்துவச் சிகிச்சைக்காகப் பல்லாவரத்தில் தங்கியிருந்த போது தமிழகக் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவருடன் சிவனேசுவரன், டாக்டர் மகேசுவரன் உள்ளிட்டோரும் கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் சிவனேசுவரன் வெப்பன் தாக்கப்பட்டு உடல் முழுவதும் காயப்பட்டவர். கெமிக்கல் அதாவது போரில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தியதன் விளைவால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். அப்படிப் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் மகேசுவரன். மற்றவர்களாலும் சிறு சிறு பாதிப்புகளுடன் மருத்துவச் சிகிச்சைக்காகத் தாய்த் தமிழ் உறவுகளை நம்பி வந்தவர்கள்.

ஏதோ ரகசிய திட்டங்களுடன் இவர்கள் வந்ததாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்றும் குற்றம் சுமத்திப் புழல் சிறையில் அடைத்தது கியூ பிரிவு. வழக்கில் பிணையில் வந்தும் வெளியில் விட விரும்பாத தமிழகக் காவல்துறை, திருச்சி சிறப்பு முகாம் என்று அழைக்கப்படும் கொடுஞ்சிறையில் அடைத்து வைத்துள்ளது. இதில், சுரேசுகுமாருக்கு இடுப்புக்குக் கீழே எந்தப் பகுதியும் வேலை செய்யாததால் யாராவது ஒருவரின் உதவியால் மட்டுமே அவருடைய கடமைகளைச் செய்ய முடியும். சிறப்பு- முகாமிலிருந்த அவருக்கு 2014 ஆம் ஆண்டு, திருச்சி நீதிமன்றம் ஒரு உதவியாளரை வைத்து உதவ வேண்டும் என்று காவல்துறைக்குப் பரிந்துரை செய்தது. ஆனால் இதுவரை நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சி செய்யக்கூட மறுக்கிறது தமிழகக் காவல்துறை.

ஆக உதவியாளர் வைத்துக் கொடுக்க வேண்டும், வழக்குகளை விரைந்து முடித்து விடுதலை செய்ய வேண்டும், அல்லது எங்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதம் இருந்தார். 6 நாட்களாகியும் சிறப்பு முகாமைச் சார்ந்த அதிகாரிகளோ, தாசில்தாரோ, ஆட்சியரோ, தமிழக அரசோ கண்டு கொள்ளாததால் பிளேடால் கைகளை அறுத்துக் கொண்டார். உடனடியாகக் காவல்துறை அவர்மீது தற்கொலை முயற்சி வழக்கும், அதிகாரிகளைக் கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கும் பதிவு செய்து திருச்சி நீதிமன்றத்தில் நிறுத்தினர். நீதிபதியோ இவ்வளவு செயல் இழந்து கிடக்கிறார். இவரா உங்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தார் என்று காவல்துறை அதிகாரிகளைக் கண்டித்துத் திருப்பி அனுப்பிவிட்டார்.

தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள தமிழக உறவுகளின் நிலை தற்போது இதுதான். இது ஒரு உதாரணம்.

திருச்சி சிறப்பு முகாம் என்பது திருச்சி மத்திய சிறைக்குள்ளேயே இருக்கும் ஒரு பகுதிதான். இங்கு 13 தமிழக உறவுகள் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிறப்பு முகாமில் 2 தமிழக உறவுகள் உள்ளனர். இவர்கள் அத்தனை பேர் மீதான வழக்குகளும் பாஸ்போர்ட் வழக்குகள், முன்னாள் விடுதலைப்புலிகள் என்ற சந்தேக வழக்குகள் தான். இதற்காக நீண்ட ஆண்டுகளாகச் சிறைப்பிடித்திருப்பது பெரும் கொடுமையாக உள்ளது.

இந்தப் பின்னணியிலிருந்து தமிழக அரசின் நிலைப்பாட்டைப் பார்க்க வேண்டியுள்ளது. இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை எனவும் ராஜபக்சே உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானத்தைப் பெருமையுடன் நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா அவர்கள். இப்படியான தீர்மானத்தை இதற்கு முன்பும் நிறைவேற்றியுள்ளார். இத்தகைய தீர்மானங்களைத் தமிழகத்தில் உள்ள தமிழ்த்தேசிய ஆர்வலர்களும் இயக்கங்களும் தூக்கி வைத்துப் பாராட்டினார்கள். ஆனால் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள ஈழத்தமிழர்களை “ஈழத்தாய்” என்று அழைக்கப்படும் ஜெயலலிதா எப்படி நடத்துகிறார் என்பதைப் பார்க்கும் போது, உண்மையான அக்கறையோடு தான் இத்தீர்மானங்களை ஜெயலலிதா நிறைவேற்றுகிறாரா என்கிற அய்யம் நம்மை அறியாமலேயே மேலிடுகிறது.

கடந்த ஆகஸ்ட் இறுதியில் மணலி பகுதியில் தஞ்சம் அடைந்த 27 மியான்மர் அகதிகள் அங்கு குடியிருக்க எதிர்ப்புத் தெரிவித்தனர் அப்பகுதி மக்கள். ஒரு வார கால அலைக்கழிப்புக்குப் பிறகு வேறு இடத்தில் தமிழக அரசு பாதுகாப்பாகத் தங்க வைத்தது. ஆனால் அகதிகள் ஒருவார கால அலைகழிப்புக்குக் காரணம் என்ன என்பது குறித்துத் தேசிய மனித உரிமை ஆணையம், கடந்த செப்டம்பர் 8&ம் தேதி தமிழக அரசுக்கு, அதாவது தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் சென்னை போலீஸ் ஆணையருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் பல ஆண்டுகளாக வழக்கு, அவமதிப்பு என்று ஈழத்தமிழர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. மனித உரிமை ஆணையம் கூட இத்தகைய மனித உரிமை மீறல் குறித்துக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழகத்தில் புலம் பெயர்ந்து வாழ வரும் தமிழீழச் சொந்தங்கள் குறித்துத் தமிழக முதல்வர் ஜெயலலிதா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் மீது போடப்படும் வழக்குகள், பொய்யானவை. அவர்கள் வாழவே முடியாத அளவு துரத்தப்படுகிறார்கள். அவர்கள் மீது எந்த அக்கறையையும் செலுத்தாத தமிழக அரசுதான் தனித்தமிழ் ஈழம் தேவை என்று தீர்மானம் இயற்றியது.

தொடர்ச்சியாகத் தமிழக உறவுகள் அரசியல் ரீதியாகவும் ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்பதற்கு ஒரு உதாரணம் தான், தமிழகத்தின் ஈழத் தமிழர்கள் நடத்தப்படுகின்ற விதம். ஏமாற்றங்கள் இவர்களைத் துரத்திக் கொண்டேதான் இருக்கின்றன.

அப்படித்தான் ஐ.நா. பேரவையும், ஈழத்தமிழர்களை வஞ்சித்து விட்டது. அமெரிக்காவின் அரசியலுக்கு இந்தியா பலியாகிவிட்டது. இந்தியாவின் தனித்தன்மையை ஐ.நா. அவையில் நிரூபிக்கப் பிரதமர் மோடி தவற விட்டுவிட்டார். லட்சக்கணக்கான மக்களைக் கொன்றொழித்த இலங்கையைச் சர்வதேச நாடுகளிடமிருந்து மோடி காப்பாற்றிவிட்டார்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் பொதுத் தேர்தலில் ஈழம் கிடைக்க வழி செய்வோம் நிரந்தர இனப்படுகொலை குறித்துப் பேசுவோம் என்றெல்லாம் தேர்தல் பரப்புரையின் போது பேசிய மோடி, அந்த வாக்குறுதியையும் காப்பாற்றத் தவறவிட்டார்.

ராஜபக்சேவின் இனச் சார்புத் தன்மையை அகற்றவும், மிரட்டவும் தான் ஈழத்தமிழர் பிரச்சனையை அமெரிக்கா கடந்த காலங்களில் எடுத்துக்கொண்டது என்பதையும் மறுக்க முடியாது.

இலங்கை இனப்படுகொலையை விசாரிப்பதற்காக ஐ.நா. சார்பாக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் செயத் ராட் அல் உசேன், அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முதல் நாள் பேசும் போது, “நடத்தப்படுகின்ற இந்த மாநாடுகளால் என்ன பயன்? உலகம் முழுக்க மானுடத்திற்கு எதிராக உள்ள குறைகள் அதிகரித்து வருகின்றன. எதிர்க்குரல்கள் அழுத்தப்படுகின்றன. இதனால் எங்கள் குழு விரக்தியும் கோபமும் கொண்டு உள்ளது” என்று தொடங்கினார்.

இந்தக் குரல் தான், அரை நூற்றாண்டாக நாடு கேட்டுப் போராடி வரும் தமிழ் ஈழ மக்களின் நிலையாக இருக்கிறது. விரக்தியு-ம் கோபமும் தான் பீறிடுகிறது. சர்வதேச உலகமும், ஈழத்தமிழர் பிரச்சினையைப் பிராந்திய நலன் சார்ந்த பிரச்சனையாக மாற்றி, அரை நூற்றாண்டுப் போராட்டத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் வைத்துச் சர்வதேச உலகம் தமிழீழ மக்களைக் கொன்றொழித்தது. இப்போது ஜெனீவாவில் வைத்து மீண்டும் அம்மக்களின் நீதியைக் கொன்றொழித்து விட்டது. இந்தியாவும் சேர்ந்துக் கொன்றொழித்த பிறகு, நாம் இந்தியன் என்று சொல்லிக்கொள்வதில் என்ன பெருமை இருக்க முடியும்?

Pin It