1913இல் இந்தியாவின் முதல் திரைப் படம் ராஜா ஹரிஷ்சந்திரா வெளிவந்தது. இந்திய திரைப்படத்தின் தந்தை என அழைக்கப்படும் பால்கே அப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். இந்தியத் திரைப்படத்திற்கு இந்த ஆண்டோடு நூறு வயது ஆகிறது. அதன் நூற்றாண்டு விழா, தென்னிந்திய திரைப்படத் துறையினால் சென்னையில் கொண்டாடப்பட்டது. செப்டம்பர் 21 முதல் 24 வரை நான்கு நாள்கள் நடைபெற்ற இவ்விழாவில், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என நான்கு மாநிலத்தைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு மொழிக்கு என்று ஒதுக்கப்பட்டு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடக்க விழா, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலும், நிறைவு விழா, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் தலைமையிலும் நடை பெற்றன. நிறைவு விழாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.

இந்திய திரைப்படத்துறையின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் வரலாற்றுப் பதிவாக நடந்திருக்க வேண்டிய நூற்றாண்டு விழா, அறிவிக்கப் படாத அ.தி.மு.க., மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது. “சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்” என்ற எஜமான் படப் பாடல் வரிகளைப்போல, விழாக் குழுவினர், ஜெயலலிதாவின் சுட்டு விரல் அசைவிலேயே அனைத்து ஏற்பாடுகளை யும் செய்தனர் என்கின்றன பத்திரிகைகள். பெருமையோடு பேசப்பட்டிருக்க வேண்டிய நூற்றாண்டு விழா, தென்னிந்திய திரைப்படத் துறையின் செயல்பாடற்ற தன்மையால், கடுமையான கண்டனங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் ஆளாகியிருக்கிறது.

தமிழ்நாட்டின் தலைநகரில் நடைபெறும் விழாவினை முதல்வர், அதுவும் திரைப்படத் துறையில் இருந்து வந்தவர் தொடங்கிவைத்தது மிகவும் பொருத்தமானதுதான். ஆனால் அவருக்கே உரிய “நான்” என்ற ஆணவத் தோடு ‘ஆடாமல் ஆடிய’ ஆட்டம், திரைப்படத்துறையின் வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்திவிட்டது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களின் அரசு சார்பாக, திரைப் படத்துறை, தகவல் தொடர்புத் துறை சார்ந்த அமைச்சர்கள் அந்தந்த நாள்களில் விழாவிற்குத் தலைமை ஏற்றனர். நிறைவு நாள் அன்று அந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆனால் தமிழ்நாடு அரசு சார்பாக முதலமைச்சரைத் தவிர வேறு எந்த அமைச்சரும் விழா மேடையில் இல்லை. ஏன், தமிழ்நாட்டில் தகவல் தொடர்புத் துறைக்கு அமைச்சரே இல்லையா? (ஓட்டுப் போட்ட கொடுமைக்கி, இப்பிடியாவது அந்த அமைச்சரோட மொகத்த ஒரு தடவை மக்கள் பாக்க அனுமதிச்சிருக்கலாம்!) “கல்யாண வீடா இருந்தா நாந்தான் மாப்பிள்ளையா இருக்கணும், எழவு வீடா இருந்தா நாந்தான் பொணமா இருக்கணும்” என்ற எஜமான் பட வசனம், ஜெயலலிதாவுக்கு மிகவும் பொருந்தும். அரசுப் பணத்தி லிருந்து 10 கோடியைத் தூக்கி எறிந்தது வீண் போகவில்லை.

கலைஞர்கள் சுதந்திரமானவர்கள். சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கத் தினர். அப்படிப்பட்டவர்களை அடிமை களைப் போல அடக்கி ஒடுக்கி, தன் சுய நலத்திற்கு, அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்திக் கொண்ட அதே மேடை யில், “என்னுடைய இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் திரைப்படத்துறையினர் மிகவும் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றனர்” என்று பேச ஜெயலலிதா வால் மட்டுமே முடியும். அதுவும் சற்றும் சிரிக்காமல் இத்தனை பெரிய நகைச்சுவை வசனத்தைப் பேசி, தன்னுடைய நடிப்புத் திறமையால் அனைவரையும் வாயடைத்துப் போகச் செய்துவிட்டார் போங்கள்!-.

‘தி.மு.க., விழாக்களில் கலந்து கொள்ளச் சொல்லி எங்களைக் கட்டாயப்படுத்துகின்றனர்’ என்று, முதலமைச்சராக இருந்த கலைஞர் முன்னிலை யிலேயே மேடையில் சொன்னார் நடிகர் அஜீத். அதை எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார் ரஜினிகாந்த். அந்தத் தன்மான வீரர்கள் எல்லோரும் இப்போது எங்கே போனார்கள்? ஏன் எந்த ஒரு எதிர்ப்புக் குரலும், ஒரு சிறு முணகலும்கூட எழாமல் போய்விட்டன?

விழாவின் மற்றொரு சறுக்கல், தென்னிந்தியத் திரைப்பட வரலாறு தேடிக்கொண்ட அவப்பெயர், தனக்குப் பெருமை தேடித்தந்த மூத்த முன்னோ டிகளில், மிகவும் குறிப்பிடத்தக்க பலரையும் புறக்கணித்தது. அவர்களுள் முதன்மையானவர், இன்றளவும் திரைப்படத்துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் தி.மு--.க., தலைவர் கலைஞர். நிகழ்ச்சி தொடங்குவதற்குச் சில மணிநேரங்கள் இருக்கும்போதுதான், அவருக்கு அழைப்பிதழே கொடுக்கப் பட்டுள்ளது.

75 படங்களுக்குத் திரைக்கதை & வசனம் எழுதியவர், 21 படங்களுக்குப் பாடல் இயற்றியவர், 29 படங்களைத் தயாரித்தவர், 20 வயதில் திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்தவர், இன்றுவரை அத்துறையில் இயங்கிக் கொண்டிருப்பவர், சுருக்கமாகச் சொன்னால், 60 ஆண்டுகளுக்கும் மேலான திரைப்பட வரலாற்றைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் பன்முகக் கலைஞன் - கலைஞர். அவருடைய பெயர் கூட உச்சரிக்கப்படாமல், திரைப் படத்துறையின் நூற்றாண்டு விழா நடந்து முடிந்திருக்கிறது.

கலைஞரைப் புறக்கணித்தவர்களால், அவருடைய பராசக்தியைப் புறக்கணிக்க முடியவில்லை. முடியவும் முடியாது. காரணம், சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன் என்னும் சிறந்த நடிகர் களைத் தமிழ் திரையுலகிற்குக் கொடுத்தது கலைஞரின் பராசக்திதான். தமிழ்த்திரைப் படத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு சென்றதும் கலைஞரின் பராசக்திதான். ஆனாலும் கலைஞரின் பெயரைத் தவிர்த்தே, பராசக்தி பேசப்பட்டது. நூற்றாண்டு விழா விளம்பரங்கள், பதாகைகள், ஒளிப்படத் தொகுப்புகள் எல்லாவற்றிலும் கலைஞரின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டது.

தினத்தந்தியின் ராஜவிசுவாசத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. திரைப்படத் துறையின் நூற்றாண்டை ஒட்டி, 100 ஆண்டுகளில் அத்துறையில் சாதித்தவர்கள் என தினத்தந்தி வெளியிட்ட தொடர் பட்டியலில் கலைஞரின் பெயர் இல்லை. ஒவ்வொரு படத்திற்கும் கதை வசனம் எழுதியவர் களைக் குறிப்பிடும்போதும், பராசக்தியில் சிவாஜியின் நடிப்பை மட்டுமே சொன்ன தந்தியின் தந்திரத்தை என்னவென்று சொல்வது!

தி.மு.க., ஆதரவு திரைப்படக் கலைஞர்களும் புறக்கணிப்புக்கு ஆளாகி யிருக்கின்றனர். இசையில் தமிழர்களுக்கு உலகளவில் பெருமை தேடித்தந்த, 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ஏ.ஆர். ரகுமானுக்கு விருது வழங்கப்படவில்லை. காரணம், கலைஞர் எழுதிய செம்மொழி பாடலுக்கு இசை அமைத்தார் என்பதுதான்-. அதேபோல, வைரமுத்து, எஸ்.பி.முத்துராமன், வடிவேலு உள்ளிட்ட மேலும் பலருக்கு இதே காரணத்திற்காக அழைப்பிதழ் கூட அனுப்பப்படவில்லை. நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஜயகாந்திற்கும் அழைப்பு இல்லை. எல்லாம் ‘அம்மா’வின் ஆணைப்படியே நடந்துள்ளது என்பதைச் சொல்லத் தேவையில்லை.

திராவிட இயக்கம் தந்த நடிகர்களின் வரிசையில், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆருக்கு முதலில் விருது வழங்கித் தன்மானத்தைச் சற்றேனும் காப்பாற்றிக் கொண்டனர். தன் வாழ்நாளின் இறுதிவரை தன்மானத்தோடு வாழ்ந்தவர், நடிப்பில் தனி முத்திரை பதித்தவர் நடிகவேள் எம்.ஆர்.இராதா. அவர் நடித்த ‘ரத்தக்கண்ணீர்’ தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்த முத்திரைப் படங்களில் முதன்மையானது. அதன் திரைக்கதை வசனத்தை எழுதியவர் திருவாரூர் தங்கராசு. அவருக்கும் அங்கே இடமில்லை. இத்தனைக்கும் எம்.ஆர். ராதாவின் மகன் ராதாரவி நடிகர் சங்கத்தின் பொருளாளர், மருமகன் சரத்குமார் தலைவர், மகள் ராதிகா புகழ்பெற்ற நடிகை. பணத்திற்காகவும், பதவிக்காகவும் ஜெயலலிதாவின் அடிபணிந்து கிடக்கும் இவர்களைக் காட்டிலும், பணம், புகழ் என எதற்கும் அடிபணியாமல் வாழ்ந்த அந்த மாபெரும் கலைஞனை, வேறு யாராலும் அவமதிக்க முடியாது!.

அண்ணாவின் படங்களுக்கும் ஒட்டுமொத்தமாக நாமத்தைச் சாத்திவிட்டார் அம்மையார். பகுத்தறிவுக் கருத்துகளைச் சொல்லும் கலைவாணர் என்.எஸ்.கே.யின் படங்கள் திரையிடப் படவில்லை. எம்.ஜி.ஆர். நடித்த ‘மந்திரிகுமாரி’ இடம்பெறவில்லை. இன்றைய தலைமுறை அறிந்திராத பல அருமையான கலைஞர்களை அறிமுகப்படுத்தி இருக்க வேண்டிய நூற்றாண்டு விழா, கோடிகளை வாரியிறைத்து நடத்தப்பட்ட நூற்றாண்டு விழா புரட்சித் தலைவியின் புகழ் பாடுவதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கலைஞரை புறக்கணிப்பதாக எண்ணிக் கொண்டு, ஒட்டுமொத்த கலைத்துறையையும் அவமதித்துவிட்டார், முன்னாள் ‘கலைச்செல்வி’.  கற்றோரைக் கற்றோரே காமுறுவர்! கலைஞர்களை கலைஞரே அடையாளம் காண்பர்! எல்லோராலும் கலைஞர்களைப் பெருமைப்படுத்திவிட முடியாது!.

Pin It