திருக்குறள் குறித்துப் பேசத் தெரிந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்குத் திருவள்ளுவர் சொல்லும் அடக்கமுடைமையும், நாவடக்கமும் எப்படித் தெரியாமல் போயிற்று?

அவர் ஒரு சனாதனவாதி. அதனால்  தெரியாமல் போகலாம்.  இந்தியாவின் வரலாறு என்பது ஆரியத்திற்கும், பவுத்தத்திற்குமான போர் என்று சொல்வார் அறிஞர் அம்பேத்கர்.

 இதில் ஒரு நுட்பமான செய்தி இருக்கிறது. அவர் சொல்வார், இந்தியாவில் இரண்டு இனங்கள்தான் இருக்கின்றன.  ஒன்று திராவிட இனம், மற்றொன்று ஆரிய இனம். ஆகவே ஆரிய-திராவிடப் போர்தான் இந்திய வரலாறு என்பதைப் பவுத்தத்தை முன்னிறுத்தி உறுதி செய்கிறார், அம்பேத்கர்.

வரலாறு என்றால் என்னவென்றே தெரியாத ஆளுநர் ரவி சொல்கிறார், திராவிட இனம் என்ற ஓர் இனம் இங்கு இல்லை, இருந்ததில்லை என்று.

சனாதனத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அவருடைய சனாதன நூல்களில் இருந்தே திராவிடத்தைப் பற்றிச் சில சான்றுகளைச் சொல்லலாம்.

* மனுஸ்மிருதி, பத்தாம் அத்தியாயம் 43/44ஆம் பாடல்களில், பார்ப்பனர்களைப் பணிந்து வணங்காத பெளண்ட்ரகர், ஒட்ரர், “திராவிடர்’’, காம்போஜர், யவணர், சாகர், பாரதர், பஹ்லவர், சீனர், கிராதர், தரதர், கசர் ஆகியோர் சூத்திரக் குடியினர் ஆவார்  என்று சொல்வதன் மூலம், ‘திராவிட’ இனத்தைச் சுட்டிக் காட்டுகிறது ஆரிய மனுஸ்மிருதி.

* பார்ப்பனப் புராண, இதிகாசங்களின் மூதாதையர்களில் ஒருவரான சத்திய விரதரைப் பற்றிச் சொல்லும்போது பாகவத புராணம், “திராவிட மன்னன்’’ என்று குறிப்பிடுவதில் இருந்து திராவிடரை அங்கீகரிக்கிறது, பாகவத புராணம்.

* ஐத்திரேய பிராமணத்தில் விசுவாமித்திரர் வழித்தோன்றல்களில் விருஷலர்களைக் குறிக்குமிடத்தில் புண்டரர், சபரர், புளிந்தர் வரிசையில் “திராவிடர்’’ என்று  திராவிட இனத்தை உறுதிப்படுத்துகிறது, ஐத்திரேய புராணம்.

* வடமொழி வித்தகரான குமரிலப்பட்டர் “திராவிட பாஷா’’ என்று சொல்லித் திராவிட இனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

* ‘சமஸ்கிருத மூலங்கள்’ என்ற நூலை எழுதிய பேராசிரியர் ஜே.மூர் (J.Muir) “திராவிடம்’’ என்பதை ‘விபாஷை’ அதாவது சிறு பாகதம் என்று குறிப்பிடும் வடநூலார், திராவிடர்களின் மொழியைத் ‘திராவிடி’ என்று பதிவு செய்துள்ளதை எடுத்துக் காட்டுகிறார்.

* திராவிடி என்பது செளரசேனி உள்ளிட்ட மூல பாகத மொழிகளுள் மூத்த மொழி என்று “தமிழ்”மொழியைக் குறிப்பிடுகிறார், வடமொழி அறிஞரான பாபு இராசேந்திரலால் மித்ரா.

* டாக்டர் அம்பேத்கர், “ரிக் வேதத்தில் நாகர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, நாகர்கள் மிகப் பண்டைய காலத்து மக்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது. நாகர்கள் எவ்வகையிலும் ஆதிவாசிகளாகவோ அல்லது நாகரீகமற்ற மக்களாகவோ இருந்தது இல்லை என்பது நினைவு கூரத்தக்கது” என்று சொல்லும் அம்பேத்கர், திராவிடர்கள், நாகர்கள் என்பது ஓர் இனமக்களின் வெவ்வேறு பெயர்கள் என்றும், திராவிடர்கள், நாகர்களாகத் “தென்னிந்தியாவில்’’ மட்டுமில்லாமல்  வட இந்தியா முழுவதும் பரவியிருந்தனர் என்பதும் வரலாற்று உண்மை என்று அழுத்தமாகச் சொல்கிறார்.

* சி.எப்.ஓல்டாம் தன்னுடைய ‘சூரியனும் நாகங்களும்’ என்ற நூலில், “திராவிட மக்கள் பண்டைக்காலம் முதலே சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் எனப் பிரிந்து இருந்திருக்கிறார்கள்” என்கிறார்.

* மொஹஞ்சதாரோ அழிவுற்ற நாகரீகமாக இருப்பினும்  அது, ஆரியர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே இங்கு பரவியிருந்த மிகப் பழைய திராவிட நாகரீகமாக இருந்ததாகத் தன் ‘உலக வரலாறு’ நூலில் ஜவகர்லால் நேரு பதிவு செய்திருப்பது கருதத்தக்கது.

* “தமிழ் என்னும் சொல்லுக்கு நேர் வடமொழிச் சொல் “திராவிடம்’’ என்பதாகும். இச்சொல் தமிழர் அல்லது திராவிடர் வாழ்ந்த நாட்டையும், அவர்கள் பேசிய மொழியையும் ஒன்றாகக் குறிப்பதாகும்” என்று ‘கால்டுவெல் ஒப்பிலக்கணம் - கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புகளுடன்’ என்ற நூலில் தெளிவாகச் சொல்கிறார், அறிஞர் கிரீயர்ஸன்.

இன்றைக்குத் திராவிடம் என்றால் பகுத்தறிவு, சமூகநீதி என்றும், வடவர் ஆதிக்கத்திற்கு எதிராகவும் எழுந்து நிற்கிறது.

திராவிடர் சங்கம், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி), திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று வளர்ந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்கின்ற நிலையில்,  திராவிடம் என்பது பொய், திராவிடம் என்பதே இங்கு இருந்ததில்லை என்று தமிழக ஆளுநர்  சொல்கிறார் என்றால் அவருக்கு வரலாறு தெரியவில்லை என்பது மட்டுமில்லை; அவர், அவருடைய ஆளுநர் வேலையைக் கூட ஒழுங்காகச் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.

பா.ஜ.க வின் ரப்பர் ஸ்டாம்ப்பாகவும், ஆர்.எஸ்.எஸ் ஏஜெண்டாகவும் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்வதை விட்டு விட்டுத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி விரைந்து பதவி விலக வேண்டும்.

திராவிடர்கள் யார் என்ற கவலை இனி ஆளுநருக்கு வேண்டாம், அதைத் திராவிடர்களாகிய நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

- எழில்.இளங்கோவன்

Pin It