மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கும் பீர்காதர் ஒலிராவுத்தருக்கும், மகாபாரதத்திற்கும் சையிது முகம்மது அண்ணாவியாருக்கும் தொடர்பிருக்கின்றது என்று நண்பர்களிடம் நான் பேசிய சமயங்களில் கிட்டத்தட்ட அனைவருமே ‘அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன தொடர்பிருக்க முடியும்’ என்பது போலத்தான் பார்த்தார்கள். தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் முகம்மது உசேன் நயினார் என்பவருக்கு ஒரு இடம் இருக்கிறது என்ற போது பலரும் புருவத்தைச் சுளித்தனர். நாம் அனைவரும் ‘தமிழ் இனம்’ என்ற சிந்தனை அற்று மதத்தாலும் சாதியாலும் வேறுபட்ட மனிதர்கள் என்ற எண்ணம் நம்முள் பதிந்து கிடப்பதுதான் இத்தகைய அவல நிலைக்குக் காரணமாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுகின்றது.

s_mohammed_hussain_2501868-இல் பீர்காதர் ஒலி ராவுத்தர் திருவாச கத்தைப் பதிப்பிக்கின்றார். 1835ஆம் ஆண்டிலிருந்தே சுமார் ஆறு ஏழு பதிப்புக்கள் ராவுத்தர் பதிப்பிற்கு முன்னரே வெளிவந்திருக்கின்றன. ஆனால் திருவாச கத்தின் தொடக்கமாக உள்ள சிவபுராணம் என்ற பகுதி முன் பதிப்புக்களில் எல்லாம் சிவபுராணத்து அகவல் என்று குறிப்பிடப்பட்டிருந்திருக்கின்றது. அப்படி அதனை அகவல் என்று குறிப்பிடுவது தமிழ் இலக்கண மரபின்படி பிழையானது என்பதையும் உண்மையில் அது ‘கலிவெண்பா’ என்பதை யாப் பருங்கலம், தொல்காப்பிய நூற்பாக்களின் வழியாக நிரூபித்து, அந்த செய்யுள் வெண்தளையால் அமைந்த கலிவெண்பா என்று சரியாகக் குறிப்பிடுகின்றார். பின்னர் இன்று வரை வந்த பதிப்புக்கள் அனைத்தும் ராவுத்தர் பதிப்பை அடியொற்றி அமைந்துள்ளன1 என்பது குறிப்பிடத்தக்கது.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘சையிது முகம்மது அண்ணாவியார்’ மகாபாரதத்தில் பதினான்காவது பருவமான அசுவமேத பருவத்தை ‘சாந்தாதி அசுவ மகம்’ என்ற பெயரில் 23 சருக்கங்களில் 4103 பாடல் களாகப் பாடியுள்ளார். கம்பனுக்கும் வில்லிபுத் தூராருக்கும் புலமையில் நிகரானவர் என்று சொல்லும்படி அவருடைய பாடல்கள் அமைந்து உள்ளன.2 இவர் இயற்றிய ‘மகாபாரத அம்மானை’ என்ற நூலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் 10க்கு மேற்பட்ட புராண நூல்களை இயற்றியுள்ளார்.

இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பலரைப் பற்றி இதுவரை வெளியிடப்பட்டுள்ள தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் முறையாகக் குறிப்பிடப்பட வில்லை. பலரைப் பற்றிய செய்திகள் கூட இல்லை. இசுலாமிய இலக்கிய வரலாறு எழுதியவர்களும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அவ்வாறு புறக்கணிப்புக்கு உள்ளானவர்களில் 1950களில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் அரபி, பார்ஸி, உருது பகுதியின் தலைவராக விளங்கிய பேராசிரியர் எஸ்.முகம்மது உசேன் நயினார் அவர்களும் ஒருவர். இங்கிலாந்தில் டாக்டர் பட்டம் பெற்ற அவர் மு.இராகவ அய்யங்கார், வேங்கடராஜுலு ரெட்டியார், புருசோத்தமன் நாயுடு போன்றவர்களால் ஊக்குவிக்கப்பெற்று, 1939-இல் முதன்முதலாக ‘சீதக்காதி நொண்டி நாடகத்தை’வெளியிடுகின்றார். ஒரே ஒரு சுவடி மட்டும்தான் இந்நூலைப் பதிப்பிக்கையில் கிடைக் கின்றது. எனவே அந்நூலைப் பிழைகள் இன்றி வெளியிட முடியவில்லை. அதனைச் சிறப்பாக வெளியிடுவதற்காக மேலும் சுவடிகள் கிடைக்குமா என்று தேடுகிறார். பின்னர் பழனியிலிருந்து ஒரு சுவடி கிடைக்கின்றது. அதை வைத்து ஒப்புநோக்கி 1953இல் மறுபதிப்பு வெளியிடுகின்றார். இதே காலத்தில் ‘சீதக்காதி திருமண வாழ்த்து’ என்ற நூலையும் வெளியிடுகின்றார்.

kelakarai_261இந்த நூல்களில் 17, 18ஆம் நூற்றாண்டுகளின் பல வரலாற்றுச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. அந்த நூற்றாண்டின் தமிழக வரலாறும், தமிழ் இலக்கிய வரலாறும் தெளிவற்ற நிலையில் இன்றளவும் உள்ளன. அதே போன்று சீதக்காதியின் வரலாறும் உள்ளது. எனவே நூல்களின் வாயிலாகவும், கள ஆய்வு செய்தும் பல செய்திகளைக் கண்டறிகின்றார். அதனை அறுபத்தொரு பக்கங்களில் தனிநூலாக வெளியிட்டுள்ளார். அதில் சீதக்காதி என்னும் பெயர், ‘ஷைகு அப்துல் காதிறு’ என்பதன் மரூஉதான் ‘செய்தக் காதிறு’, ‘செய்தக்காதி’, ‘சைத காதி’, ‘சீதக்காதி’ என்றும் வழங்குகிறது என்று தெளிவு படுத்துகின்றார். மேலும் சீதக்காதி வாழ்ந்த காலம் கி.பி.1650க்கும் கி.பி.1720க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என்பதைச் சில சான்றுகள் கொண்டு நிறுவுகின்றார். அதே போன்று சீதக்காதியின் ஊர் காயல்பட்டினமா, கீழக்கரையா என்ற குழப்பத் திற்கும் முறையான காரணங்களைக் கூறிக் கீழக் கரைதான் அவர் வாழ்ந்த ஊர் என்பதைத் தெளிவு படுத்துகின்றார். களஆய்வில் சீதக்காதியின் அரண் மனை, அவர் தொழுகை நடத்திய பள்ளிவாசல், அவரும் அவருடைய உறவினர்களும் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகள் போன்றவற்றைப் புகைப்படம் எடுத்து இந்நூலில் இணைத்துள்ளார்.

‘சீதக்காதி திருமண வாழ்த்து’ தனிநூலாகவும், ‘சீதக்காதி நொண்டி நாடகம்’ தனிநூலாகவும் உள்ளன. ஒவ்வொரு நூலுக்கும் விரிவான நூலாராய்ச்சி உள்ளது. அவற்றில் அக்காலத்தில் முகம்மதியர்கள் செய்த வணிகம் பற்றிய குறிப்புகள், இசுலாமியர்கள் அந்தக் காலங்களில் இந்துத் தமிழர்கள் போன்றுதான் தங்கள் திருமணத்தை நடத்தினார்கள் என்றும் முகமதியர்கள் தங்களுக்கான மணமகளை இந்துக்களிடமிருந்து பெறும் நிலை இருந்ததால் அப்படி நடந்திருக்கிறது. பிற்காலங்களில் அந்த நிலை மாறிவிட்டதாகவும் கூறுகின்றார். அக்காலத்தில் பாண்டிய மன்னர்களுக்கும் முகமதிய வணிகர்களுக்கும் இருந்த நல்ல உறவுமுறைகள், முகம்மதியர்கள் சிலர் பாண்டியர்களிடம் செல் வாக்குப் பெற்ற அதிகாரிகளாகப் பணிபுரிந்தது போன்ற செய்திகளும் அவுரங்கசீப்பின் படைத் தளபதி செங்கி கோட்டையை எட்டு ஆண்டுகள் முற்றுகையிட்ட வரலாறு போன்றவற்றையும் குறிக் கின்றார்.

சீதக்காதி திருமண வாழ்த்து, சீதக்காதி நொண்டி நாடகம் இரண்டும் நவீன முறைப்படி பதிப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 1. ஒரு நூலை வாசகர்கள் புரிந்து கொள்வதற்கான விரிவான முன்னுரை 2. குறிப்புரை 3. அரும்பதவுரை 4. அரிய வழக்குச் சொற்களுக்கான விளக்கம் 5. அரபி, பார்ஸி, இந்தி சொற்களுக்கான பொருள் விளக்கம் 6. அரபி பெயர்களின் குறிப்புரை 7. தமிழ்ப் பெயர்களின் குறிப்புரை 8. இடப்பெயர்களின் அகராதி 9. சீதக்காதி வாழ்ந்த காலத்தில் தமிழ் நாட்டின் அமைப்பைக் காட்டும் படம் 10. இசுலாமியர் பரவிய வகையைக் குறிக்கும் வரைபடங்கள், புகைப்படங்கள் என்று ஒரு நூலைப் புரிந்து கொள் வதற்கான அனைத்து விவரங்களுடன் இப்பதிப்பு திகழ்கின்றது. ஆனால் இரண்டு நூல்களுக்கும் உரை இல்லாமல் இருப்பது குறையாக உள்ளது. உரையுடன் கூடிய மறுபதிப்பாக இந்நூற்கள் வெளிவர வேண்டும்.

குறிப்புகள்

1.     தஞ்சை தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்த பாடசாலை 2008 இந்நூலை மறுபதிப்புச் செய்துள்ளது.

2.     சையது முகம்மது அண்ணாவியார் இயற்றிய மகாபாரதம் ‘சாந்தாதியசுவகம்’ நூலை 1989இல் சென்னையில் உ.வே.சா. நூலகம் வெளியிட்டுள்ளது. 1370 பாடல்கள் மட்டும் உள்ளது. பாடல்கள் எல்லாவற்றிற்கும் உரை எழுதப் பட்டுள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் 2004இல் 4103 பாடல்கள் உள்ள முழு நூலையும் வெளியிட்டுள்ளது. குறிப்புரை மட்டும் உண்டு.

Pin It