திப்பு சுல்தான் ஒரு மதவெறியர் என்று பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் அக்கட்சியை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளைச் சேர்ந்தோர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

1761-இல் ஆட்சிக்கு வந்த ஹைதர் அலி, 1767-இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைக் கைப்பற்ற முனைகிறார். அதற்குக் காரணம் மலபார் கடற்கரைப் பகுதியைத் தன்னுடைய அரசின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காகவே தவிர, திருவிதாங்கூர் ஒரு இந்து ராஜ்யம் என்பதற்காக இல்லை. ஆனால், அதில் தோல்வி அடைகிறார். இதற்கிடையே 1776-ல் கொச்சின், ஹைதர் அலியிடம் சரணடைகிறது. அன்றிலிருந்து ஹைதர் அலிக்கு எதிராக நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் கலகம் செய்யத் தொடங்குகின்றனர். திப்பு சுல்தானின் காலத்தில் இது மேலும் வலுவடைகிறது. திப்பு மலபார் பகுதியிலுள்ள சிறு சிறு ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறித்து அங்கே ஒருங்கிணைந்த ஆட்சிமுறையை நிறுவுகிறார்.

tippu sulthan 361இந்த நேரத்தில் நாயர் குல மக்களின் சமூகப் பழக்க வழக்கங்களை நாம் அறிந்து கொள்வது நல்லது.

நாயர் குடும்பங்களில் மூத்த மகன் மட்டுமே திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ அனுமதிக்கப்படுவார். மற்ற ஆண் பிள்ளைகள் அரசனின் போர்ப்படையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும். பெண் பிள்ளைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட கணவர்களுடன் வாழ்வர். பிள்ளைகள் யாருடையவர் என்று தெரியாத நிலையில் தாய் மட்டுமே அந்தப் பிள்ளைகளுக்குப் பொறுப்பாவாள். ஆண்கள் மனைவி, பிள்ளைகள் என்ற ஈடுபாடு இல்லாமல் நாடு காக்கும் கடமையில் ஈடுபட வசதியாக இவ்வமைப்பு ஏற்பட்டது என்று கூறுவர். இந்தப் பெண்கள் வசிக்கும் இல்லம் ‘தரவாடு’ வீடு எனப்படும். தகப்பன் சொத்துக்கள் பிள்ளைகளுக்குச் சேராது. அவன் சகோதரியின் பிள்ளைகளுக்கே அது போய்ச் சேரும். ‘தரவாடு’ பெண்களின் பிள்ளைகள் தாயின் உடன்பிறந்த சகோதரனின் சொத்துகளை அனுபவிப்பர். இதையே ‘மடுமக்க தாயம்’ எனும் தாய்வழிச் சொத்து என்று அழைப்பர். இந்த அமைப்பு முறையைத் திப்பு சுல்தான் வன்மையாகக் கண்டித்தார். 1788-ல் கள்ளிக் கோட்டைக்கு வருகை புரிந்த திப்பு சுல்தான், “நீங்கள் ஒரு பெண்ணுடன் பத்து ஆண்கள் குடும்பம் நடத்துகிறீர்கள். உங்கள் தாய் மற்றும் சகோதரிகளையும் இவ்வாறு வாழ நிர்பந்திக்கிறீர்கள். இது இழிநிலையாகும். இன்றிலிருந்து இப்பாவச் செயலை விடுத்து, நீங்கள் மற்றவர்களைப் போல் முறையான வாழ்க்கை வாழுமாறு எச்சரிக்கிறேன்” என்று அறிவிக்கிறார்.

இது நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் தொன்றுதொட்டுக் கடைபிடித்து வரும் வாழ்க்கை முறையை மற்றொரு மதத்தைச் சேர்ந்த ஆட்சியாளர் ஒழிக்க நினைப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால், நாயர்களும், நம்பூதிரி பிராமணர்களும் தொடர் கலகத்தில் ஈடுபட்டனர். மலையாளக் கரையோரத்தில் மட்டுமல்லாமல் குடகுப் பகுதியிலும் புதிதாகக் கிளர்ச்சிகள் மூண்டன. 1786-ம் ஆண்டு தொடங்கி 1788-ம் ஆண்டு வரையிலும் இவை தொடர்ந்தன. திப்பு சுல்தானின் படையை நாயர்கள் தாக்கினர். 1789-ம் ஆண்டு குடகில் கிளர்ச்சி உக்கிரமாக மூண்டது. திப்புவின் சேனை குடகில் இருந்ததால் மலையாளக் கரை கிளர்ந்து எழுந்தது. மைசூர்ப் படைகள் மலையாளக் கரை சென்றதும் குடகர்கள் மைசூர்ப் படைகளிடமிருந்து தங்கள் நாட்டை விடுவித்தார்கள். இவ்வாறு தொல்லை தந்து கொண்டே இருந்தார்கள். இதனிடையே திருவிதாங்கூர் ராஜாவும் திப்புவைத் தன் முதன்மைப் பகைவனாக எண்ணிக் கொண்டார். அதற்குக் காரணம் மலபார் கடற்கரைச் சிக்கலையொட்டி ஹைதருடன் அவருக்கிருந்த மோதல்தான். இரண்டாவது மைசூர்ப் போரின் போது ஆங்கிலேயருக்குத் திருவிதாங்கூர் ராஜா உதவி செய்தார். மேலும் ஆங்கிலேயரின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டு, ஆங்கிலப் படைகளைத் தன்னுடைய சமஸ்தானத்தில் வைத்துக் கொண்டார்.

இதுவே, நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் மீது திப்பு தாக்குதல் நடத்தப் போதுமான காரணமாக அமைந்தது.

மேலும், திப்புவைப் பொறுத்தவரை, கொச்சின் அவரது மானியப் பகுதியாகும். அதனைத் திருவிதாங்கூர் மன்னர் இணைத்துக் கொண்டதும் திப்பு திருவிதாங்கூரைத் தாக்க ஒரு காரணமாகும். இவ்வாறு, மலையாளப் பகுதி திப்புவுக்குத் தீராத தலைவலியாக இருந்தது. திப்புவை மதவெறியர் என்று சொல்பவர்கள் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். அன்றைய சூழ்நிலையில், முடியாட்சி நடைபெறும் ஒரு அரசாங்கத்தில் எதிர்ப்பவர்கள் தண்டிக்கப்படுவர். இதில் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு கிடையாது. இன்றும் ஜனநாயக நாடுகளில் கூட இதுவே நிலையாகும். அரசுக்கு எதிராகச் சதி செய்வோர் தண்டிக்கப் பெறுவர்.

திப்பு சுல்தானின் ஆட்சிப் பகுதியில் பாராமஹால் (கிருஷ்ணகிரி) மற்றும் திண்டுக்கல் பகுதிகள் இருந்துள்ளன. அங்கெல்லாம் மதமாற்றம் செய்தார் என்ற குற்றச்சாட்டு திப்பு சுல்தானின் மீது எழவில்லை. மேலும் வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோருடன் நட்பு பாராட்டியிருக்கிறார். இந்து ஆட்சியாளர்கள் என்று பகைமை உணர்வைக் காட்டவில்லை.

இதுபோலவே, கர்நாடக நவாப் கடைசிவரை திப்பு சுல்தானின் எதிரியாகவே இருந்துள்ளார். இதன் மூலம் திப்பு சுல்தான் மதத்தின் அடிப்படையில், எவருடனும் நட்போ பகைமையோ கொண்டதில்லை என்பது புலனாகிறது.

மலையாளப் பகுதியில் மதமாற்றம் நடைபெற்றிருந்தால் அதன் காரணம் அவர்களின் முறையற்ற வாழ்க்கை முறையே. திப்பு சுல்தான் அதை மாற்ற முயற்சி செய்திருக்கக் கூடும். எனவே, இனிமேலும் திப்புவின் மீது மதவெறிச் சாயம் பூசுவோர் இந்த நோக்கில் இதை அணுக வேண்டும்.

முப்பதாண்டு காலம் திப்புவின் மைசூர்ப் படைகள் ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய போராட்டம் வீரம் செறிந்ததாகும். இந்திய வரலாற்றில் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டத்தில் மைசூரே மையமாக விளங்கியது. திப்புவின் தோல்வி இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் கட்ட விடுதலைப் போரின் முடிவாகும். ஆனால், இன்றோ சிறுபான்மை இனத்தவர் என்பதற்காக ஒரு மாவீரன் சிறுமைப்படுத்தப் படுத்தப்படுகிறார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

Pin It