ஆன்ட்டி- இந்தியன் (anti- Indian) என்பவர்கள் யார்? அவர்களுக்கு ஏதேனும் அடையாளம் இருக்கிறதா? ஆம், நிறைய அடையாளங்கள் இருக்கின்றன. இன்றைய சூழலில் இந்த அடையாளங்களை வைத்து அவர்களைக் கண்டுபிடித்து விடலாம்!
1. புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா அல்லது பூமி பூஜைக்கு, அன்றைய குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை. அதேபோல அந்தக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு இன்றைய இந்தியக் குடியரசுத் தலைவரையும் அழைக்கவில்லை. அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர், இவர் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலா என்று கேட்பார்கள்!
2. அரியணை, மகுடம், வெண்கொற்றக் குடை, செங்கோல் இவை எல்லாம் மன்னர் ஆட்சியின் குறியீடுகள்! இவற்றுள் ஒன்றான செங்கோல், மக்களாட்சியில் ஏன் வருகிறது என்று குதர்க்கம் பேசுவார்கள்.
3. செங்கோல் மாற்றம், அதிகாரம் மாற்றத்திற்கான அடையாளம் என்றால், இப்போது அதற்கு என்ன வேலை? நடக்கப் போவது அதிகார மாற்றமா, கட்டிட மாற்றமா என்ற கேள்வியையும் எழுப்புவார்கள்!
4. குடியரசு நாளிலோ, இந்தியா விடுதலை பெற்ற நாளிலோ அல்லாமல், சாவர்க்கர் பிறந்தநாளான மே 28 இல் எதற்காக இந்தக் கட்டிடத் திறப்பு விழா என்றும் வினவுவார்கள்!
5. ராஜாஜி தொடக்கி வைத்து, சங்கராச்சாரியார் எடுத்துச் சொல்லி, துக்ளக்கில் கட்டுரையாக வந்து, பத்மா சுப்ரமணியத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, இன்று அரியணை ஏறும் செங்கோல், முற்றுமாக ஒரு “நூல்இழை”யில் இணைக்கப்பட்டிருக்கிறது.
இப்போது ஒரு மடத்தின் ஆதீனம் அதைக் கொடுக்க இருக்கிறார். மதச்சார்பற்ற நாட்டில், ஏன் இப்படிக் குறிப்பிட்ட ஒரு மதத்தின் தொடர்புகள் ஆட்சி அதிகாரத்தோடு பிணைக்கப்படுகின்றன என்று நாத்திகம் பேசுவார்கள்!
இவையெல்லாம் தான் ஆன்ட்டி இந்தியன் என்பதற்கான அடையாளங்கள்! கவனம் வைத்துக் கொண்டு, அவர்களோடு பழகுவதைத் தவிர்த்து விடுங்கள்! இதனைத் தாண்டி இன்னும் இரண்டு கேள்விகள் இருக்கின்றன. அவை இவற்றை விட மோசமானவை!
1. சில ஆண்டுகளுக்கு முன்பு, தருண் விஜய் என்பவர் திருக்குறளைப் புகழ்ந்து பேசி, திருவள்ளுவர் சிலையைத் தில்லிக்கு எடுத்துச் சென்றாரே, அது என்னாயிற்று? அதே போலத்தான் இப்போது, பிரதமர் மோடி தமிழைப் புகழ்ந்து பேசுவதும், செங்கோல் தமிழர் மரபு, இது சோழர் செங்கோல் என்று கூறுவதும், தமிழர்களை மீண்டும் ஏமாற்றுவதற்காகவா என்ற வினாவைத் தொடுப்பார்கள்.
2. சோழர் செங்கோல், சனாதனத்தை, சாதி அடுக்குகளை ஆதரித்த ஒன்றாயிற்றே, சமூக நீதிக்கு எதிராக வளைந்த செங்கோலும் அதுவன்றோ என்றும் கேட்பார்கள்!
இவர்கள் ஆன்ட்டி - இந்தியன் மட்டுமில்லை, தமிழ்த் தேசியப் பேராசான்கள் நடத்தும் பரிசோதனைக் கூடங்களில், ஆன்ட்டி தமிழர்கள் என்றும் கண்டுபிடிக்கப் பட்டவர்கள்.
கவனம், தமிழர்களே கவனம்!
ஆன்ட்டி - இந்தியனாகவும், ஆன்ட்டிN - தமிழனாகவும் ஆகிவிடாதீர்கள்! ஜெய் ஸ்ரீராம் என்று N உரத்து முழங்கும் தேஷ பக்தர்களாகவும், தமிழ்த் தேசியம் பேசும் தம்பிகளாகவும் எப்போதும் இருந்திட முயற்சி செய்யவும்!