காட்டுமன்னார்குடியில் 1946 ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர் நலச் சங்கம் என்ற அமைப்பினை உருவாக்கி சுற்றியுள்ள பகுதிகளில் தன்னுடைய சமூகப் பணியைத் தொடங்கினார் பெரியவர் எல்.இளையபெருமாள் அவர்கள். இச்சங்கத்தின் பொங்கல் விழா மாநாடு ஒன்றில் (1947) பங்கேற்ற ஆதி திராவிட மக்கள் இளைய பெருமாளை தங்களின் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அன்று முதல் தென்னாற்காடு மாவட்டத்தில் குறிப்பாக சிதம்பரம் காட்டுமன்னார்குடி பகுதியில் தலைவர் என்று சொன்னால் அது இளையபெருமாள் அவர்களைத்தான் குறிக்கும்.
ஆதி திராவிட மக்களின் உரிமைகளுக்காக குறிப்பாக, கூலி உயர்வுக்காகவும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.
1950களில் பறையடிப்பது என்பது இழிவானதாகப் பார்க்கப்பட்டது. இறப்பு நிகழ்ச்சிகளில் ஆதிதிராவிடர்கள் பறை அடிப்பது வழக்கமாக இருந்தது. இதனால் ஆதி திராவிடர்கள் இழிவாகக் கருதப்பட்டு, நடத்தப்பட்டு வந்தனர். எனவே, பறையடிக்கும் வழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று இளையபெருமாள் முடிவெடுத்து, அதற்கென ஒரு இயக்கமே நடத்தினார்.
கீழ்வெண்மணியில், 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி கூலி உயர்வு கேட்ட விவசாயக் கூலிகள் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 தலித்துகளை, சாதி இந்து நில உடமைக்காரர்கள் ஒரே குடிசையில் வைத்து எரித்து சாம்பல் ஆக்கினார்கள். இந்தச்சம்பவத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கைதானார்கள். பெரும் நில உடமைக்காரர்கள், தலித்துகள் வசிக்கின்ற இடங்களுக்குச் சென்று அவர்களே தீ வைத்தார்கள் என்பது நம்ப முடியாததாக இருக்கிறது. ஆகவே அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று ஐந்தாண்டுகளுக்குப் (1973)பிறகு உயர் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். 1978 இல் விழுப்புரத்தில் நடந்த சாதி வன்கொடுமையில் 12 தலித்துகள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
இது போன்ற கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நின்று அவர்களுக்கு நீதி கிடைத்திட இளையபெருமாள் பெரும்பங்காற்றினார்.
இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராக (1952) கடலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரானார். இரண்டாவது(1957) மற்றும் மூன்றாவது(1962) நாடாளுமன்ற பொது தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியினுடைய உறுப்பினராக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று 15 ஆண்டுகள் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பெரும் பணி ஆற்றினார். நான்காவது முறையாக 1967இல் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினுடைய வேட்பாளராகக் களமிறங்கி, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் மாயவன் அவர்களிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். 1980 சட்டமன்றத் தேர்தலில் சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திலும் சிறப்பான பங்காற்றினார்.
இந்திய அரசியல் சாசனம் மூலம் தீண்டாமை ஒழிக்கப்பட்டு, 1955இல் தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்த பின்னரும் கூட தீண்டாமைக் கொடுமை நாடெங்கிலும் காணப்படுவதைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு 1965 ஆம் ஆண்டு, இளைய பெருமாள் தலைமையில் 8 உறுப்பினர்கள் கொண்ட”இளையபெருமாள் தீண்டாமை ஒழிப்பு கமிட்டி” யை நியமித்தது.
இக்குழுவின் பரிந்துரைகளை 431 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக 1969 சனவரி 30 அன்று பிரதமர் இந்திரா காந்தி அரசிடம் சமர்ப்பித்தது, இளையபெருமாள் குழு.
இந்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்பதற்கு முதல் நாள் இரவு அவரது அறை தாக்கப்பட்டு அறிக்கை சில விஷமிகளால் களவாடப்பட்டு விட்டது. இதை முன்கூட்டியே எதிர்பார்த்த இளையபெருமாள் அறிக்கையின் ஒரு பிரதியை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியன் அவர்களிடம் கொடுத்து வைத்து அந்த அறிக்கையைத் தான் அரசிடம் சமர்ப்பித்தார்.
1976 முதல் தமிழ் நாடு காங்கிரசின் ‘அரிஜன செல்’ தலைவர் பதவி வகித்து 1979 இல் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவரானார் எல்.இளையபெருமாள். பிறகு, காங்கிரசில் இருந்து வெளியேறி 1989 இல் இந்திய மனித உரிமைக் கட்சியைத் தொடங்கியவர், 2003இல் மீண்டும் காங்கிரசில் இணைந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பினும், பெரியவர் எல்.இளையபெருமாள் அவர்கள் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும், ஒருமைப்பாட்டிற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும், குறிப்பாக ஆதி திராவிட மக்களின் முன்னேற்றத்திற்கும் ஆற்றிய பெரும் பணிகளுக்கு அங்கீகாரம் வழங்கிப் போற்றும் வகையில் 1998 இல் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு அவருக்கு முதன் முறையாக “அண்ணல் அம்பேத்கர் விருது” அளித்து கௌரவித்தது.
சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 08.9.2005 அன்று அந்த மாபெரும் தலைவர் இளையபெருமாள் மறைவெய்தினார்.
பெரியவர் இளையபெருமாள் வழியில் சுயமரியாதைச் சமதர்ம சமூகத்தை அமைப்போம் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 18-04-2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், விதி 110 இன் கீழ் அறிவித்து பெரியவர் எல். இளையபெருமாள் அவர்களின் புகழுக்கு புகழ் சேர்த்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார்.
- பேரா.சுவாமிநாதன் தேவதாஸ், சமூகநீதி கண்காணிப்புக் குழு உறுப்பினர்