காளையின் கொம்புகளில் சல்லி (காசு)களைத் துணியில் கட்டி அனுப்புவர். வாடிவாசலைத் தாண்டி வரும் காளைகளை அடக்கும் இளைஞர்கள், அந்தச் சல்லிக்கட்டை எடுத்துக் கொள்ளலாம். ‘சல்லிக்கட்டு’ என்னும் பழந்தமிழ் வீர விளையாட்டின் அடிப்படை இதுதான். வெறும் காசுக்காக அன்றி, வீரத்தை நிலைநாட்டவும், ஊரின் பெருமையை உரைக்கவும் உருவான விளையாட்டு இது!

இன்று நாம் அவ்விளையாட்டின் பெயரைக் கூட ‘ஜல்லிக்கட்டு’ என்று தவறாகக் கூறுகின்றோம். வேட்டியை, ‘வேஷ்டி’ என்று சொல்வது போல! புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், “தமிழன், ஆட்டுக்குட்டியைக் கூட, ஆஷ்டுக்குட்டி என்று சொல்லப்போகிறான்” என்பார் வேடிக்கையாக!

சல்லிக்கட்டு விளையாட்டிற்கு, இந்திய உச்சநீதிமன்றம் இப்போது தடை விதித்துள்ளது-. தமிழ்த் தேசிய இயக்கங்கள், முனைவர் தொ. பரமசிவன் போன்ற தமிழர்கள், தென் மாவட்ட மக்கள் எனப் பலரும் இத்தடைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மதுரை அலங்கா நல்லூர்ப் பகுதிகளில் கடையடைப்பு, பட்டினிப்போர் போன்றவைகளும் நடந்துள்ளன.

சல்லிக்கட்டு விளையாட்டு, நம் பழந்தமிழ் மரபோடு ஒன்றியது என்பதை யாரும் மறுப்பதற் கில்லை. ‘ஏறு தழுவுதல்’ என்னும் வீர மரபு குறித்து, சங்க இலக்கியப் பாடல்களிலேயே செய்திகள் இடம் பெற்றுள்ளன. அவ்வாறே, புலியைக் கொன்று அதன் பல்லையும், நகத்தையும் கொண்டு வருதல், இளவட்டக் கல்லைத் தூக்குதல் போன்ற பல மரபுகளும் தமிழர்களுக்கு உரியது!

எனினும், பழைய மரபுகள் அனைத்தையும் தொடர்ந்து பின்பற்ற முடியுமா, பின்பற்ற வேண்டுமா என்னும் கேள்விகள் எழவே செய்கின்றன.

மரபுகள் பற்றி சிந்தனைகளில், நாம் மூன்று நிலைகளை எண்ணிப் பார்க்கலாம்.

1. மரபுகளை அறிதல்

2. மரபுகளை ஆராய்தல்

3. மரபுகளைப் பின்பற்றுதல்

ஒவ்வொருவரும் தங்கள் இனத்தின் மரபுகளை அறிந்திருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவற்றுள் குறிப்பிடத்தக்கவைளைப் பாடநூலில் சேர்ப்பதும் கூடத் தேவையானது. எனினும் அந்த மரபுகளை இரண்டு வழிகளில் ஆராய்ந்திட வேண்டும். அவை பழைய நிலையிலேயே உள்ளனவா அல்லது அந்நியப் பண்பாட்டுப் படையெ டுப்புகளில் சிக்கிச் சிதைந்து போயுள்ள னவா என்று முதலில் ஆராய்ந்திட வேண்டும். நம் பழந்தமிழ் மரபுகள் பல, பார்ப்பனியப் பண்பாட்டுடன் கலந்து கிடப்பதை இன்று நாம் பார்க்கிறோம். சிறுவர்களுக்கு வில் - அம்புப் பயிற்சிக்காக உருவாக்கப்பட்ட விழா, இன்று பல ஊர்களில், ‘சாமி அம்பு விடுவதாக’ மாறியுள்ளது. பொங்கல் விழாவைக் கூட, ‘சங்கராந்தி’யாக மாற்ற முயலும் போக்குகளைக் காண்கின்றோம். பல விழாக்களுக்குள் புராணக் கதைகளின் இடைச்செருல்களைப் பார்க்க முடிகிறது. எனவே அதில் நம் கவனம் முதலில் பதிய வேண்டும்.

எந்தப் பண்பாட்டுச் சிதைவும் அற்ற நிலையில், நம் மரபு சார்ந்த விழாக்கள், விளையாட்டுகள் பல இன்றும் நம்மிடம் உள்ளன. அப்படிப்பட்டவற்றுள் ஒன்று தான் சல்லிக்கட்டு. ஆனால் அத்தகைய பண்பாட்டு அசைவுகளையும், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றதா, தேவையானதா என்று எண்ணிப் பார்த்திட வேண்டும்.

இளவட்டக் கல்லைத் தூக்குதல், காளையை அடக்குதல் போன்றவை, நம் உடல் வலிவையும், வீரத்தையும் காட்டுவனவே. இருப்பினும், இன்றைய நடைமுறைக்கு அவை எவ்வளவு தூரம் தேவை என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

விலங்குகளை வதை செய்யக்கூடாது என்னும் அடிப்படையில் உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் இங்கு விலங்குகள் வதை செய்யப்படுவதில்லை என்று மதுரை வட்டார மக்கள் கூறுவது உண்மைதான். இங்கே காளை மாடுகள் வதை செய்யப்படவில்லை என்றாலும், அம்மாடுகள் முட்டி, ஒவ்வோர் ஆண்டும் இளைஞர்கள் சிலர் உயிரிழப்பதை நாம் காண்கிறோம். ஒரு சிலருக்கு ஏற்படும் காயங்கள், அவர்களின் வாழ்நாள் முழுவ தும் தொடர்கிறது. இந்நிலையை நாம் தொடர வேண்டுமா?

எந்த விளையாட்டில்தான் ஆபத்து இல்லை என்று நண்பர்கள் சிலர் கேட்கின்றனர். எந்த விளையாட் டில் உயிருக்கு ஆபத்து இருந்தாலும், அது குறித்து மறுபார்வை செய்திட வேண்டும் என்பதே நம் கருத்து!

எனவே ‘ஏறு தழுவுதல்’ என்னும் மரபை நாம் போற்றலாம். தொடர்ந்து பின்பற்ற வேண்டியதில்லை. விலைமதிப்பற்ற உயிர்களை ஒவ்வோர் ஆண்டும் நாம் இழந்து விடக்கூடாது.

இது தொடர்பாக, எனக்கு வந்துள்ள மின் - அஞ்சல் ஒன்றினையும் இங்கு குறிப்பிடு வது தேவையானதாக உள்ளது.

“ஏறு தழுவுதல் என்பதைத் தமிழர் பண்பாடு என்று கூறுகின்றீர்களே... தலித் மக்களும் அவ்விளையாட்டில் இணைந்து கொள்ள அனுமதிப்பார்களா?” என்று அந்த மடல் வினவுகின்றது. எனக்கு அது குறித்த முழு விவரங்கள் தெரியவில்லை. ஒருவேளை, அப்படி அனைவரும் அனுமதிக் கப்பட மாட்டார்கள் என்பது உண்மையா னால், பிறகு அதனைத் தமிழர் பண்பாடு என்று கூறுவது உண்மையாகாது!

சல்லிக்கட்டைத் தாண்டி, இப்போது சேவல் சண்டைக்கும் தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்யுமாறு, தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதி மன்றக் கிளை பரிந்துரை செய்துள்ளது.

நீண்ட நெடுநாள்களாகச் சல்லிக்கட்டு, சேவல்சண்டை போன்றவைகளை, வெறும் பொழுதுபோக்காக மட்டுமின்றி, வாழ்வின் ஒரு பகுதியாகவே அவற்றைக் கொண்டுள்ள மக்கள் குமுறத் தொடங்கியுள்ளனர். நாங்களாகச் சேவல்களைச் சண்டைக்கு விடவில்லை. சண்டை போடும் குணம் அவற்றின் மரபு- அணுக்களிலேயே உள்ளன. அவற்றைச் சண்டை போட விடாமல் தடுப்பது, இயற்கைக்கே மாறானது என்று அந்தச் சேவல்களை வளர்ப்போர் கூறுகின்றனர்.

- சுப.வீரபாண்டியன்

Pin It