இயற்கை இயல்பாக இயன்றதை இந்த பூமி பந்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் அளித்து வருகிறது. ஆனால் அதிகரித்து வரும் மக்கள் பெருக்கம் இந்த இயற்கையின் இயல்பின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆதாயம் அடைகிறது. பெருகிவரும் மக்கள் தொகையினால் தேவைகளும் அதிகரிக்கிறது. இந்த இயற்கை இதுநாள் வரை பூமியில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ்வதற்கான இடத்தை, வாழ்வியல் தேவைகளை என ஜீவிப்பதற்கான அனைத்தையும் அளித்து வருகிறது. ஆனால் மனிதனின் தேவைகள் இந்த இயற்கையின் வளங்களை ஒட்டு மொத்தமாக உறிஞ்சி எடுப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவில் பசுமைப் புரட்சி (1965\-1980) தானிய உற்பத்தியில் தன்னிறவு என்ற முழக்கத்துடன் முன்வைக்கப்பட்டு அமல்படுத்தப்படும் காலகட்டத்தில் ஏராளமான அந்நிய ரக பொருட்கள் (வீரிய ரக விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிமருந்துகள் என) இந்த மண்ணிற்கு பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் மண்ணின் இயல்பு தன்மையை அன்றைய தினம் முதலே மாற்ற துவங்கி இன்று இயற்கை சமநிலையின் மீது தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கோதுமை களஞ்சியமான பஞ்சாபில் இன்று இந்த தாக்கம் பரவலாக உணரப்படுகிறது. பசுமைப் புரட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல உரங்கள், பூச்சி மருந்துகள் இன்று அதே மண்ணின் இயற்கை தன்மையை முற்றிலுமாக பாதித்து இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு கீரின்பிஸ் பஞ்சாபின் மக்ட்ஸர், பதின்டா, லூதியானா ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 கிராமங்களில் நடத்திய ஆய்வில், 20 சதவிதத்திற்கு மேலான குடிநீர் கிணறுகளில் நைட்ரேட் அளவு 50 சதம் உள்ளது என கண்டறிப்பட்டுள்ளது. இது சர்வதேச சுகாதார மையம் அனுமதித்த அளவை விட அதிகம். இந்த நைட்ரேட் மனிதனுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் ஆகும். செயற்கை நைட்ரேட் உரங்களின்தாக்கம் இந்த மண்ணையும், தண்ணீரையும் வெகுவாக நச்சாக்கியுள்ளது. இந்த மாவட்டங்களில் இந்த இரசாயனங்கள் மண்ணின் இயல்பு தன்மையை பயிர் உற்பத்திற்கு உதவும் அதன் குணத்தை பாதித்துள்ளது.

Sold soul of infinity life முடிவில்லா வாழ்க்கையின் உயிர் என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். இத்தகு மண் இயற்கை நமக்களித்த வாழ்க்கைக்கு அஸ்திவாரம் இயற்கையினால் நாம் உணவாக உட்கொள்ளும் அனைத்தும் இந்த மண் அளித்த மாற்று வடிவங்களே. இயற்கையை தவிர்த்து செயற்கையாக உண்டாக்கப்படும் உணவு வகைகள் இயற்கையின் தேர்வில் வாழும் மனிதனுக்கு பல உடற்கூறு தொந்தரவுகளை அளிக்கிறது.

இந்த பசுமைப்புரட்சி கால கட்டத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நெல்ரகங்கள் ஆரம்ப காலத்தில் நல்ல விளைச்சலை அளித்தது. இரசாயன உரங்கள், பூச்சிமருந்துகள் என விளைச்சலை அதிகரிக்கும் நோக்குவுடன் அரசு வேளாண் அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் தமிழகத்தின் மண்ணும் மாசுபட ஆரம்பித்து, இன்று அதன் பிரச்சனையை தமிழக விவசாயிகளும் உணர துவங்கியுள்ளார்கள். அதனால்தான் தமிழகத்தில் இன்று இரசாயனம் இல்லாத வேளாண்மை எனும் முறை வேகமாக விவசாயிகளிடத்தே பிரபலமாகி வருகிறது.

இந்த இயற்கை வேளாண்மை என்பது மீண்டும் நமது பாரம்பரிய வேளாண்மை முறைக்கு மாறுவது என்பதாகும். ஏராளமான இரசாயனங்களை இந்த மண்ணிற்கு ஊற்றி அதில் வாழ்ந்து வந்த விவசாயத்திற்கு உதவிய பல நுண்ணுயிரிகளை (சூடோமோனஸ், ப்ளேரசன்ஸ், டிரைகோடெர்மா விரிடி) நாம் இந்த இயற்கை சமநிலையில் இருந்து அகற்றினோம் இன்று மீண்டும் இந்த நன்மை செய்யும் நுண்ணுயிரிவுகளை இந்த மண்ணிற்கு அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த நுண்ணுயிரிகள் மண்ணின் இயல்பு தன்மையை அதை சார்ந்து வாழும் இன்னும் பல உயிரிகள் மண்புழுக்கள், ஓட்டுண்ணிகள் என அவற்றின் உயிரி-பன்முகத்தன்மை பாதுகாத்திட தேவைப்படுகின்றன.

நமது பாரம்பரிய விவசாய முறையில் விவசாயிகளிடத்தே ஒரு விவசாய சமநிலையை பாதுகாத்திடும் செயல்முறை இருந்து வந்தது. விவசாயிகள் கால்நடைகளை வளர்ப்பதும் அவற்றின் சாணங்களை எருவாக்கி அதில் நுண்ணுயிர்கள் பல வளர்ப்பதற்கு வாய்ப்பளித்து அதனை நிலத்திற்கு அடி உரமாக இடுவார்கள். நிலத்தில் விளையும் களைச் செடிகளை புல் மற்றும் கரும்பு சோலை ஆகியவற்றை கால்நடைகளுக்கு வழங்குவார்கள். இன்று இவையனைத்தும் பெரும்பாலும் வழக்கத்தில் இருந்து மாறியுள்ளது. அடியுரமாக இரசாயனத்தை இடுவது, பயிர் வளர்ச்சியுடன் அனைத்து படிகளிலும் இரசாயன உரங்களையே ஈடுவது என இந்த மண்ணின், நீரின் இயல்பு தன்மையை வெகுவாக மாற்றியுள்ளார்கள். இதனால் தேவைக்கு அதிகமாக நிலத்தில் தங்கும் உப்புகள் காரணமாக நிலம் கடினமாகிறது. அதனால் நிலத்தடி நீரும் மாசுபடுகிறது.

மனிதர்களின் இதுபோன்ற தொடர் தாக்குதல்களால் இயற்கையில் ஏற்படும் பல விளைவுகளை இந்த மனித இனம் இன்று பரவலாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இங்கு பிரடெரிக் எங்கெல்ஸ் வரிகளை குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மை பழிவாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்காத முற்றிலும் வேறுபட்ட பலன்களை அளிக்கிறது. இயற்கையுடன் இணைந்த வாழ்வு முறையும், வேளாண்மையும் இந்த மனித இனம் கைவிடாமல் வாழ வேண்டும் என்பதையே இன்றைய சூழல் நமக்கு உணர்த்துகிறது.

Pin It