“தமிழும் நானும் மெய்யாய் ‘உடலுயிர்’ கண்டீர்” என்றார் புரட்சிக் கவிவேந்தர் பாரதிதாசனார்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்கம் வைத்துத் தமிழாட்சி செய்தவர்கள் தமிழர்கள்.தமிழ் இம்மண்ணின் நிலை மொழியேயன்றி, வந்தேறிய மொழியன்று.

குடியரசு நாளன்று சென்னை ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் சிலர், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் போது எழுந்து நிற்கவில்லை. தமிழை அவமானப்படுத்தும் விதமாக, ஏளனமாக அமர்ந்து இருந்திருக்கிறார்கள்.

பத்திரிகையாளர்கள் அதைச் சுட்டிக்காட்டிய போது, அப்படியெல்லாம் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அரசாணையோ, நீதிமன்றமோ அப்படி ஏதும் சொல்லவில்லை என்றும் ஏகடியம் பேசியிருக்கிறார்கள் அவர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாட வேண்டும் என்று அரசுப் பொதுத் துறையின் சார்பில் 23-11-1970 அன்று அரசாணையாக வெளியிட்டார் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள்.

சென்ற ஆண்டு 17-12-2021 அன்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநிலப் பாடலாக அறிவித்ததோடு, அரசு நிகழ்வுகளில் அப்பாடல் பாடும்போது கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் - மாற்றுத்திறனாளிகள் தவிர என்ற அரசாணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறப்பித்திருந்தார்.

நாடாளுமன்ற தி.மு.கழக உறுப்பினர் கனிமொழி சொன்னது போல, ஒரு மாநிலத்தின் அரசாணையைக் கூடத் தெரிந்து கொள்ளாமலா ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இருக்கிறார்கள்?

தமிழ் நாட்டில், தமிழ் மண்ணில் வேலை பார்க்கும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழைப் பழிக்கிறார்கள் என்பது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் அவமதிக்கிறார்கள் என்று பொருள்.

இப்பொழுது அதற்காக வருத்தம் தெரிவிப்பதைப் போல பாவனை செய்கிறார்கள். இந்த இடத்தில் சாவர்க்கரை நினைக்க வேண்டி இருக்கிறது.

“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”, தமிழைப் பழித்தால் தாய் தடுத்தாலும் விட மாட்டோம் என்று எச்சரிக்கிறார் எங்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It