“தரணியாண்ட தமிழருக்குத் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

‘முன் காலத்தில் வருடப்பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் வருடப்பிறப்பாக பெரியோர்கள் கொண்டாடினார்கள்’ என்றார் அறிஞர் மு. வரதராசனார்.

 ‘கி.பி.78 ஆம் ஆண்டில் வடபுலத்து வேந்தன் சாலிவாகனன் என்பான் உருவாக்கியதுதான் 60 ஆண்டு காலண்டர்’ என்றும், ‘அந்த காலண்டரில் முதல் மாதம்தான் சித்திரை’ என்றும் பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியன் விவரித்துக் கூறியிருக்கிறார். இந்த அறுபதாண்டு காலண்டரில் வரும் ஆண்டுகளின் பெயர்கள் பிறந்தக் கதையைக் கேட்டால் அறிஞர் உலகம் சிரிக்கும்.

“பிரபவ, விபவ எனும் பெயர்களில் ஒன்றேனும்/

அருந்தமிழ்ப் பெயரிலுண்டா? அறுபதெனும் ஆண்டுச்/

சிறப்பின் சரித்திரமோ பேசினால் பெரு விரசம்!/

கோபியரின் வீடெல்லாம் குழல் கண்ணன் போய்நுழைந்துத்/ தாபமெல்லாம் தணிப்பதனைத் தான்கண்ட நாரதனும் /

ஆரணங்கின் வடிவெடுத்தே அக்கண்ணன் தனைக்கூடிப்/ பெற்றெடுத்த பிள்ளைகளின் பேர் இவையாம்; பெரும் வெட்கம்!”

- இவ்வாறு பாடியிருக்கிறார் கவிஞர் கா.வேழவேந்தன்

தமிழ் ஆண்டுகள் என்று கூறப்படும் 60 ஆண்டுகள் என்பன இடையில் ஆரியர்களின் புராணச் செருகல் ஆகும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மிக அழகாக ஓவியம் தீட்டினார்.

“பத்தன்று; நூறன்று; பன்னூறன்று; பல்லாயிரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில் புத்தாண்டு தை முதல் நாள் பொங்கல் நன்னாள்” என்றார் அவர்.

‘தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு- தமிழர் திருவிழா’ என்று சொன்னால், தங்களைத் தமிழர்கள் என்று எண்ணுவார்களேயானால், அதனை எதிர்ப்பார்களா? ஆரியர்-திராவிடர் போராட்டம் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இதனை அறிஞர் அண்ணா அவர்கள் மிக அழகாகப் படம் பிடித்துத் தந்துள்ளார்.

“தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும் தமிழர் என சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதர் என்ற பட்டம் பெற்றாலும் சங்கநூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்புக் கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை.அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீதுதான்.’’ (திராவிடநாடு, 2.11 1947, பக்கம் 18)

தமிழர் திருநாளில் இந்தச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு புத்தாண்டை வரவேற்போம். பொங்கட்டும் உரத்த சிந்தனை! அனைவருக்கும் அன்பான தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்!

- ஜனனி

Pin It