கொத்துகொத்தாய் எம்மினத்தைக் கொன்ற ழித்த
கொடியமகன் ராஜபக்சே கொடுமை தன்னை
திக்கெட்டும் தெரிந்துகொண்டு காரித் துப்ப
திகைக்கிறது இலங்கையது; குற்றம் செய்து
இக்கட்டில் இருக்குமந்த இழிநாட் டிற்கு
இராணுவப்ப யிற்சியிங்கு அளிக்கின் றாயே
மக்கட்டை மன்மோகன் சிங்கே எம்மேல்
மாறாத வன்மத்தை வைத்தாய் இங்கே
முள்ளிவாய்க்கால் வேதனையோ மறக்க வில்லை
முள்வேலிக் கம்பியின்னும் அறுக்க வில்லை
கொள்ளிவைத்து எம்மினத்தைப் பொசுக்கிப் போட்ட
கொடுங்காட்சி கண்ணைவிட்டு மறைய வில்லை
பள்ளியென்றும் பச்சையிளங் குழந்தை என்றும்
பாராமல் குண்டுமழை போட்டார்; அந்தோ
அள்ளியெடுத் தழுவதற்கும் ஆளில் லாமல்
அடியோடு அழித்தவர்க்கா பயிற்சி இங்கே.
இழவுவீட்டுச் சோற்றுக்கே அலையும் அந்த
இத்தாலிச் சோனியாவுக்(கு) இரும்பு நெஞ்சம்
தமிழ்நாட்டை ஆளுகின்ற அம்மா நீயும்
தயக்கத்தைக் காட்டுவதால் என்ன மிஞ்சும்?
இனமானம் காப்பதற்கே ஆட்சி என்றே
ஏய்த்தவரால் இன்னல்தான் நேர்ந்த தென்றால்
தனிநாடே தீர்வென்று சொன்னா யேநீ!
தமிழ்நாட்டில் சிங்களர்க்குப் பயிற்சி ஏன்சொல்?
விழவிழத்தான் எழுவதற்கு முயலு கின்றோம்
வீணான தலைமைகளை நம்பிக் கெட்டோம்
இழப்புகளில் ஒவ்வொன்றாய் மீண்டும் கற்போம்
இல்லையெனில் நடுத்தெருவில் தானே நிற்போம்
பழகிவிட்ட தமிழுணர்வை நிறுத்த மாட்டோம்
பங்காளி துடிதுடிக்க சிரிக்க மாட்டோம்
அழுகிவிட்ட பழமான இந்தி யத்தில்
அடிமைகளாய் எப்போதும் இருக்க மாட்டோம்.
- பாவலர் வையவன்