gurukula kalviதேசியக் கல்விக் கொள்கை குறித்து மாநில அரசின் நிலைப்பாடு கோரும் ஒன்றிய அரசின் மின்னஞ்சல் கடந்த 18ஆம் தேதி தமிழ்நாடு அரசிற்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அதுகுறித்தான மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் செய்தி குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது, “மத்திய அரசு அறிமுகப்படுத்த விரும்பும் புதிய கல்வி முறை, நீட் தேர்வு முறையை விடக் கொடுமையானது. 100 ஆண்டுகாலமாக உழைத்து உருவாக்கிய கல்வி அமைப்பையே சீர்குலைக்கும் செயல். இது ஏழை, விளிம்பு நிலை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்பதால் எதிர்க்கிறோம்” என்கிற அரசின் நிலைப்பாடு தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இதுக்குறித்தான அரசின் நிலைப்பாடு விரைவில் ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்கப்படும் என்று மாண்புமிகு அமைச்சர் ‌கூறியிருக்கிறார். தமிழ்நாடு அரசின் இந்தக் கொள்கை முடிவை நாம் முழுமையாக ‌வரவேற்கிறோம்.

புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் (2019), அதன் குழுத்தலைவர் கஸ்தூரிரங்கன் கூறுவதாவது:  “சுதந்திரத்திற்குப் பிறகான இத்தனை ஆண்டுகளில் கல்வியை எல்லோருக்கும் வழங்க வேண்டும் மற்றும் சமமாக வழங்க வேண்டும் என்கிற இலக்கை நிர்ணயித்துக் கொண்டதில் துரதிஷ்டவசமாகத் தரமான கல்வியை கோட்டை விட்டுவிட்டோம்”.

தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்த குழுவின் தலைவர் இவ்வாறு கூறி இருப்பது வருந்தத்தக்கது. இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதன் மூலம் கல்வியின் தரம் குறைந்து விட்டது என்கிற இவரின்   முன்முடிவு  நடைமுறையில் உள்ள சமூக நீதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையை ஒழிப்பதற்குத் துணை செய்யும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். எனவே நாம் இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது என்று அதை எதிர்க்கிறோம். மேலும் அவரே இலவச கட்டாய, அனைவருக்கும் கல்வி பற்றிக் கூறுகையில்,

“ஒரு சில வகையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தாலும் ஒரு மூளை மழுங்கிய ஓர்மைத் தன்மை இன்றைய கல்வி முறையில் நிலவி வருகிறது. எல்லோரையும் ஒரே மாதிரி அல்லது சமமாகப் பாவிப்பதால்  மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை வளர்க்கும் வாய்ப்புகள் இந்தக் கல்வி முறையில் இல்லை. இது நம்முடையப் பண்டைய பாரம்பரியத்திற்கு முழுவதும் எதிரானது” என்று கூறுகிறார்.

இந்த வரிகளிலிருந்து, அவர்களது நோக்கம் நம் பிள்ளைகளைப் படிக்க வைப்பது அல்ல, அவரவர் குலத்தொழிலை கற்றுக்கொள்ள  மறைமுகமாக ஊக்குவிக்கப்படும்  குலக்கல்வியை புகுத்துவதே என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களின் நோக்கம் தரமான கல்வியைக் கொடுப்பது அன்று. ஒருவருக்கு ஒருவர் வேறுபடும் தனிப்பட்ட திறனுக்கு ஏற்பக் குழந்தைகளை உருவாக்குவதாகும். இதனைத் தமிழ்நாடு எப்படி ஏற்றுக் கொள்ளும் என்று எண்ணுகிறார்கள்? நூறு ஆண்டுகளாய் உழைத்து உருவாக்கிய கல்வி அமைப்பைச் சீர்குலைக்கும் செயல்திட்டம் அல்லவா இது? சமூக நீதிக்கு எதிரான திட்டம் அல்லவா இது? இதை ஒருபோதும் தமிழ்நாடு அனுமதியாது.

தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை பார்வையில் பார்த்தால், மூன்றாம் மொழியைப் புகுத்தும் கொள்கையைப் பரிந்துரைக்கிறது இந்தப் புதிய தேசியக் கல்விக்கொள்கை. இவ்வரைவில் அத்தியாயம் 4இல்

“2 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்குப் பலமொழிகளைக் கற்றுக் கொள்வதற்கான மிக நெகிழ்வான ஆற்றல் இருக்கிறது. பல மொழிகளைக் கற்பதனால் கிடைக்கும் நன்மைகள் பல இருப்பினும் இந்தச் சமூக ஆற்றலை  இயன்ற அளவு நேர்வழிப் படுத்த வேண்டும்” என்று சொல்கிறது.

பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து குறைந்தபட்சம் மூன்று மொழிகளைக் கற்பிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது. பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படும் எந்த ஒரு கூடுதல் மொழியும் மாணவர்களுக்குச் சுமையே ஆகும். எனவே ஏற்கனவே இருமொழிக் கொள்கையை ஏற்றிருக்கும் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் அவர்களின் ஆதிக்க மனபான்மையைக் காட்டுகிறது. இது மாணவர்களின் கல்வி கற்றலின் ஆர்வத்தைக் குறைக்கும் என்பதனை உறுதியாக நம்புகிறோம். எனவேதான் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.

- பாலகுமார்

Pin It