KIRANBEDI MLA ARGUEஅண்மையில், 'பால் பாக்கெட்' புகழ் எஸ்.வி.சேகர், சமூக வலைத்தளம் ஒன்றில் (twitter), உமாநாதன் என்பவரின் பதிவு ஒன்றை மீள் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு இதுதான் --

"கிரண்பேடி புது தில்லி துணைநிலை ஆளுநர் ஆக நியமனம்..

அப்பறம் என்னப்பா.. பாண்டிச்சேரி காங்கிரஸ் ஆட்சிக்கு காரியம் பண்ண மாதிரி டெல்லி ஆம் ஆத்மி ஆட்சிக்கு தவசம் பண்ண கிளம்பிட்டாங்க.."

எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாக நினைத்துக் கொண்டு, ஆளுநர் பதவியையே இவர்கள் இழிவு படுத்துகின்றனர். கிரண் பேடி தில்லி ஆளுநராக நியமிக்கப்படுவாரா இல்லையா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், ஆளுநரின் வேலை இதுதானா என்ற கேவலமான நிலை இந்தியாவில் இப்போது ஏற்பட்டுள்ளது என்பதாகவே இந்தப் பதிவு சொல்கிறது!

புதுவையில் கிரண் பேடி துணைநிலை ஆளுநராக இருந்தபோது, அவர் நடந்துகொண்ட விதம், அந்த ஆட்சிக்கு முடிந்த வரையில் இடையூறு செய்வதாகவே இருந்தது. இதற்காகத்தான் ஆளுநர் பதவி என்றால், அப்படி ஒன்று தேவையில்லை என்றே தோன்றுகிறது.

இந்தியாவில் இப்போது பல மாநிலங்களில், ஒன்று, பாஜக நேரடியாக ஆட்சி செய்கிறது அல்லது, ஆளுநர்கள் மூலம் ஆட்சிக்குத் தொல்லை செய்கிறது. தமிழ்நாட்டிலோ இரண்டும் தேவைப் படவில்லை. அவர்ளின் எல்லா வேலைகளையும், முதலமைச்சர் பழனிச்சாமியே பார்த்துக் கொள்கிறார்.

அவர்கள் நேரடியாக ஆட்சி செய்யும் உ.பி., கர்நாடகா போன்ற மாநிலங்களில் சர்வாதிகாரம் முழுமையாகத் தலைவிரித்து ஆடுவதை நாம் பார்க்கிறோம். அண்மையில், கர்நாடாகாவில் அயோத்தி ராமர் கோயிலுக்கு வீடு வீடாகச் சென்று பணம் கேட்டுள்ளனர்.

தர மறுத்தவர்களின் வீட்டு வாசலில் ஓர் அடையாள ஸ்டிக்கரை ஒட்டிச் சென்றுள்ளனர். எந்த நேரமும் அந்த வீடு தாக்கப்படும் என்பதற்கான அறிகுறியே அது! அதனைக் கண்டித்த கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை இந்து மதத்திற்கு எதிரானவர் என்று பரப்புரை செய்கின்றனர். இந்த அராஜகங்களை எல்லாம் தமிழ்நாட்டில் செய்ய முடியவில்லையே என்பதுதான் பாஜகவின் இன்றைய கவலையாக உள்ளது.

செய்ய வேண்டிய வேலைகளை மத்திய, மாநில அரசுகள் செய்யவில்லை. குறிப்பாக எரிபொருள்களின் விலை - அது பெட்ரோல், தீசல், எரிவாயு என எதுவாயிருப்பினும் - மிகக் கடுமையான ஏற்றத்தில் உள்ளன.

இரண்டு நாள்களுக்கு முன் இந்திய எண்ணெய்க் கழகம் (Indian oil corporation) வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரம், இந்த எரிபொருள்களின் அடிப்படை விலை (basic prize) இன்றைய விற்பனை விலையில், வெறும் 41 சதவீதம்தான் என்றும், மத்திய, மாநில அரசுகளின் வரியும், விற்பனையாளரின் சிறு லாபமும் சேர்ந்து 59% என்றும் கூறுகின்றது.

இதனை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற எண்ணமாவது மத்திய அரசிடம் உள்ளதா? எடுத்துச்சொல்லும் துணிவு தமிழக அரசிடம் உள்ளதா? இரண்டுமே இல்லை என்பதுதானே விடை!

செய்ய வேண்டியவைகளை விட்டுவிட்டு, ஏதோ பெரிதாகச் செய்துவருவது போல ஒரு பாசாங்கு காட்டுகிறது தமிழக அரசு! இன்று முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள ஒரு கேலிக்கூத்தான அறிவிப்பு, "கொரானா ஊரடங்கு விதிகளை மீறியதாகப் பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் ரத்து" என்பதாகும்!

அந்த வழக்குகள் எல்லாம் என்ன பெரிய கொலை, குற்ற வழக்குகளா? உண்மையான கொலை வழக்கு சாத்தான் குளத்தில் நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்குதானே! போகிற போக்கில், அதனையும் ஊரடங்கு காலத்தில் விதியை மீறிய வழக்குப் பட்டியலில் சேர்த்து, ரத்து செய்தாலும் செய்து விடுவார்கள்!

ஒன்றை நினைவில் கொள்வோம்! வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஒரே ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெற்றுவிடக்கூடாது. அதிமுக கூட்டணியில் இருப்பதால், கட்டுத்தொகையை (டெபாசிட்) வேண்டுமானால் மீட்டுக் கொண்டு போய்த் தொலையட்டும்!

- சுப.வீரபாண்டியன்