உலகம் போற்றும் அறிவியல் அறிஞரான ஸ்டீபன் ஹாக்கிங் எழுதியுள்ள ‘Brief answers to the big questions’ என்னும் அவருடைய நூல் குறித்த அறிமுகமாகத் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீ அவர்களின் அறிவுத்தேடல் கூட்டத்தின் உரை வடிவமே இந்நூல். கடவுள் உண்டா என்கிற கேள்விக்கு விடை தேடிய ஸ்டீபன் ஹாக்கிங் பயணத்தின் முடிவில் தத்துவம், மதக் கோட்பாட்டை புறம்தள்ளி அறிவியலின் பாதையில் பயணித்து விடை காணுகிறார்.

stephen book 600"கடவுள் இல்லை" என்று.அவரின் முடிவிற்கு வலுசேர்க்கும் விதமாக பல்வேறு அறிவியல் அறிஞர்களின் கூற்றுகளையும், அறிவியல் சார்ந்த தர்க்கத்தையும் முன்வைக்கிறார். முதல் இயலின் தலைப்பே கடவுள் இருக்கிறாரா என்கிற கேள்வியோடு புத்தகம் தொடங்குகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருகிற செய்திதான் "கடவுள் இருக்கிறார், இல்லை" என்பது. இந்த விவாதம் நாடுகள் கடந்து, வயது வரம்புகள் அற்று, எல்லாத் தளங்களிலும் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பாரபட்சம் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. இது வரை இந்த விவாதத்திற்குத் தத்துவ அறிஞர்களும், மதப்போதகர்களுமே விடை தேடிக்கொண்டு இருந்தார்கள்.

ஆனால் இந்த 21ஆம் நூற்றாண்டில் அறிவியல் சார்ந்த முடிவை முதல் முறையாக முன் வைத்திருக்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங். இவருக்கு முன்பு பல்வேறு அறிவியல் அறிஞர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் யாரும் இவரைப்போல் தன் முடிவில் உறுதியும் தன்னம்பிக்கையும் உடையவர்களாக இருந்திருக்கவில்லை. ஐசக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ரிச்சர்ட் டாக்கின்ஸ், அரிஸ்டார்கஸ் என்று பல்வேறு அறிஞர்களின் மதக்கோட்பாட்டையும் கடவுள் பற்றிய அவர்களின் முடிவு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல். 

ஸ்டீபன் ஹாக்கிங் மொழியில் சொல்ல வேண்டுமானால், “கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை மெய்ப்பிப்பது எல்லாம் என் நோக்கமோ, வேலையோ இல்லை நான் அதற்காகவெல்லாம் இந்தப்புத்தகத்தை எழுதவில்லை. ஆனால் என் அறிவியல் எனக்கு என்ன சொல்கிறதோ அதை உலகிற்குச் சொல்லாமல் போகக்கூடாது என்பதற்காக இதை எழுதுகிறேன்” என்கிறார். அவர் அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் இயற்கையை விஞ்சிய ஒன்று கிடையாது என்று முடிவு செய்கிறார். “இயற்கைதான் கடவுள் என்பது உங்கள் விருப்பமாக இருக்கலாம். அப்படி எதுவுமில்லை.

கடவுள் என்று ஒருவர் உட்கார்ந்து கொண்டு இதையெல்லாம் செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை” என்கிறார். மேலும் அந்தப் புத்தகத்தில், “நான் போன பிறகு இந்த ஆய்வுகள் காலகாலத்திற்கும் நீடிக்கும். எதனையும் மீண்டும் மீண்டும் சோதனைக்கு உள்ளாக்குவது தான் அறிவியல். எதைச்சொன்னாலும் அப்படியே நம்பிக் கொள்வது மதம். நான் அறிவியல் சார்ந்தவன்” என்கிறார். 

இந்நூல் ஒரு பெரும் கடலை ஒரு செம்புக்குள் அடைத்துக் கொடுத்துள்ளது. யாவரும் வாங்கிப் படியுங்கள் அறிவியல், முற்போக்கு சிந்தனை மிக்க வாழ்க்கையை வாழுங்கள்.