அண்டை நாட்டிலிருந்து விரட்டப்பட்ட தமிழர்கள், இப்போது அட்டப்பாடியில் இருந்தும் விரட்டப்படுகின்றனர். இந்தியாவிற்குள்ளேயே தமிழர்களுக்கான உரிமையை அன்று மராட்டியம் மறுத்தது. இன்று மலையாள நாடும் மறுக்கிறது. பழங்குடி மக்களுக்கான நிலங்களைத் தமிழர்கள் கையகப்படுத்திக் கொண்டனர் என்று கூறி, அவற்றைவிட்டு உடனே வெளியேற வேண்டும் என்கிறது கேரள அரசு. இன்று நேற்று அன்று, பல ஆண்டுகளாக, பல தலைமுறைகளாகத் தமிழர்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். அங்கே வாழும் கேரள மக்களோடு இன்றுவரையில் எந்தப் பிணக்கும் இல்லை. இரு இன மக்களும் உடன்பிறந்தார் போலவே உறவாடி வருகின்றனர்.

இடையில் திடீரென்று அரசு உட்புகுந்து, தமிழர்களை வெளியேறச் சொல்லுவது, ஏதோ உள் நோக்கமுடையதாக இருக்கிறது. இந்தப்போக்கைக் கேரள அரசு உடனே மாற்றிக் கொள்ளவில்லை என்றால், அதனுடைய எதிர்விளைவுகள் விரும்பத்தகாதனவாக இருக்கும் என்பதை நாம் கூறவேண்டியதில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மலையாளிகள் எல்லோரும் மறுநிமிடமே தமிழ் மண்ணைவிட்டு வெளியேற வேண்டும் என்று கூறினால், நிலைமை என்னவாகும்?

இது இருமாநிலங்களோடு மட்டும் நின்றுவிடக்கூடியதில்லை. வெவ்வேறு மாநிலங்களிலும், இந்நிலை தொடரும். சில ஆண்டுகளுக்கு முன்பு, மராட்டியமும், பீகாரும் இப்படி மோதிக்கொண்டதை நாம் பார்த்தோம். ஒருமைப்பாடு பற்றி உரத்துப் பேசுகின்ற மத்திய அரசும், மற்ற கட்சிகளும் இதில் தலையிட்டுத் தமிழர்களுக்கு நியாயம் செய்ய வேண்டும். இல்லையேல் தங்களுக்கான நியாயத்தைத் தமிழர்களே தேடிக்கொள்ள வேண்டிவரும்.

தமிழைப்போற்றிய, தங்கள் நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கிய சிங்கப்பூரிலும் இன்று தமிழர்களுக்குப் புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. ‘லிட்டில் இந்தியா’ என்னும் பகுதியில் தனிப்பட்ட சிலருக்கு இடையில் ஏற்பட்ட மோதலும், அதனால் விளைந்த ஓர் உயிர் இழப்பும் இன்று பெரும் சிக்கலாக எழுந்து நிற்கின்றன.

தவறு செய்தவர்களைக் கண்டுபிடித்து அரசாங்கம் தண்டிப்பதை யாரும் தடுக்கப்போவதில்லை. ஆனால், அதனையே ஒரு சாக்காகக் கொண்டு, தமிழர்களுக்கு நுழைவிசைவு (விசா) வழங்குவதில் இனி சிங்கப்பூர் தயக்கம் காட்டும் என வரும் செய்திகள் வேதனை தருவனவாக உள்ளன. உணர்ச்சிகளால் உந்தப்பட்டு சிறு கலவரங்களில் ஈடுபட்ட தமிழர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்படும் என்னும் அறிவிப்பும் நம்மைக் கலங்கச் செய்கிறது. எப்போதும் தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் நேயம் காட்டும் சிங்கப்பூர் அரசு இப்போதும் அதனைத் தொடர வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் விருப்பமும் வேண்டுகோளும் ஆகும்.

வெளிமாநிலத்திற்கோ, வெளிநாட்டிற்கோ சென்ற தமிழர்களுக்குத்தான் இன்னல்கள் என்றில்லை. தமிழ்நாட்டிலேயே வாழும் தமிழக மீனவர்களும், அன்றாடம் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். அண்டை நாட்டு அரசான இலங்கை அரசு நம் மீனவர்களைக் கைது செய்வதையும், துன்பங்களுக்கு உள்ளாக்குவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது. மீனவர்களின் படகுகள், வலைகள், மீன்கள் அனைத்தும் தொடர்ந்து சேதப்படுத்தப்படுகின்றன.

கடந்த இருபது ஆண்டுகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஒருமுறை தமிழக எல்லைக்கு உள்ளேயே வந்து, பாம்பனுக்கு அருகில் இருக்கிற ஓலைக்குடா என்னும் கிராமத்தின் உட்புகுந்து நம் மீனவர்களை அவர்கள் சுட்டுக் கொன்ற கொடுமையை என்னென்று சொல்வது? இங்கே ஒரு அரசு இருக்கிறதா, இந்த அரசு நம்மைக் காப்பாற்றுமா என்று ஐயம் கொள்ளும் அளவிற்கு நிகழ்வுகள் நடந்துவருகின்றன.

இத்தனையையும் பார்த்தபடி, இந்திய அரசும், தமிழக அரசும் என்ன செய்து கொண்டுள்ளன? தமிழர்களின் பொறுமையைச் சோதித்துக் கொண்டுள்ளன.

Pin It