பாவம், தில்லையம்பல நடராசன் தன் நிம்மதி கெட்டு, அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறான் சிதம்பரம் கோயிலில்.

தில்லைக் கூத்தனின் நிம்மதி, தூக்கத்தை முதலில் கெடுத்தவர் வடலூர் இராமலிங்க அடிகளார்தான்.

தில்லையைவிட உயர்ந்த சைவத்தலம் வேறு எங்கும் இல்லை என்பத னால் அடிகளார் சிவனைத் தரிசிக்க அங்கே சென்றிருக் கிறார். கோயிலில் இருக்கும் லிங்கத்தைக் காட்டும்படி அவர், அங்குள்ள தீட்சதர் களிடம் கேட்டிருக்கிறார்.

இருந்தால் தானே காட்டுவதற்கு. இல்லாத லிங்கத்தை ஆகாச லிங்கம், ஆகாயத்தில் இருக்கிறது என்று சொல்லி மக்களை ஏமாற்றுவது போல, வடலூர் அடிகளாரை ஏமாற்றவா முடியும்.

அடிகளாரைக் கோயிலுக்குள் வராதே என்று தடுத்து நிறுத்தினார்கள்.

அதனால் சினம் கொண்ட செந்தமிழ் அருட்பா வேந்தர் வடலூர் இராமலிங்க அடிகளார், சிதம்பரத்திற்கு வடக்கே, பார்வதிபுரம் என்று சொல்லப்படும் உத்தரஞான சித்திபுரத்தில் ஒரு கோயிலைக் கட்டினார். அந்த ‘ஞான சபைக்கு’ உத்தரஞான சிதம்பரம் என்று பெயர்.

தில்லை பூர்வஞான சிதம்பரம் கோயிலுக்குப் போட்டியாக உத்தரஞான சிதம்பரம் கோயிலைக் கட்டியபிறகு, தில்லைக் கோயிலை ஒரு வழிபாட்டுத் தலமாகக்கூட வள்ளலார் கருதவில்லை. இது நடந்தது 1872 ஜனவரி 25ஆம் நாள். இப்பொழுது நடராசர் இருப்பது சிதம்பரத்திலா, வடலூர் சித்திபுரத்திலா, தெரியவில்லை.

அடுத்துச் சிதம்பரம் நடராசர் கோயில் தீட்சிதர்கள் இரண்டு பிரிவினராக மாறிக் கோயில் குத்தகைப் பணம் வசூல், பணியாளர்களுக்குச் சம்பளம், கோயிலைப் பழுது பார்ப்பது, விழா நடத்துவது போன்ற பணம் அல்லது சொத்து தொடர்பாகப் போட்டுக்கொண்ட குடுமிபிடிச் சண்டை 1883ஆம் ஆண்டு, தென்னாற்காடு மாவட்ட நீதிமன்ற வழக்குவரை போய்விட்டது.

பின்னர் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு வந்த இவ்வழக்கில் 1888ஆம் ஆண்டு, ஷெப்பர்ட் என்ற ஆங்கில நீதிபதி, திருவாரூர் டி. முத்துசாமி ஐயர் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம் தீர்ப்பை அளித்தது.

“முற்காலம் தொட்டே இக்கோயில் ஒரு பொது வழிபாட்டுக்குரிய இடமாக உபயோகப்பட்டு வந்து இருக்கிறது. இக்கோயில், தீட்சிதர்களுக்குச் சொந்தச் சொத்து என்பதற்குச் சிறுதுளியும் ஆதாரம் கிடையாது”.

தீட்சதர்களுக்கு நீதிமன்றம் மூலம் கிடைத்த முதல் அடி இது.

ஆக, தில்லை நடராசன் கோயிலைத் தீட்சிதர்கள் கட்டிப்பிடித்துக் கொண்டி ருப்பது, அக்கோயிலில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அம்பலத்தான் மீது இருக்கும் பக்தியால் அன்று. எல்லாம் பணம், சொத்து மீதுள்ள பக்தியால்தான். இதை வெளிச்சம் போட்டுக் காட்டு வதாகவே 1988ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.

கோயில் தனிச்சொத்துடைமை போல இருப்பதில் ஏற்படும் சீரழிவுகளைச் சீர் செய்ய, நீதிக்கட்சி பனகல் அரசர் ஆட்சியில் இந்து அறநிலையத் துறை உருவாக்கப்பட்டது.

இதன்படி எந்தக் கோயிலாக இருந்தாலும், அங்கு தவறுகள் நடைபெறு மானால், அதைக் கையகப்படுத்தி கணக்கு வழக்குகளை, நிர்வாகச் சீர்கேடுகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு இந்து அறநிலையத்துறைக்கு வந்தது.

இதையும் தீட்சதர்கள் எதிர்த்தபோது, இந்து அறநிலையத்துறை பாதுகாப்புக்குக் குழுத் தலைவராக இருந்த சதாசிவ ஐயர் அன்றே “தில்லை நடராசர் கோயிலுக்கு எந்தவித வரவு செலவுக் கணக்குகளையும் வைக்காமல், தீட்சிதர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்கள்” என்று எழுத்துப் பூர்வமாகச் சொன்னார். இன்றும் அந்த நம்பிக்கைத் துரோகம் தொடர் கிறது.

நட ராசர் கோயில் அற நிலையத் துறையின் கீழ் வருவ தற்கு முன்னர் கோயில் வருமானம் ஆண்டுக்கு 37,199 ரூபாய். இதில் செலவு 37,000. மீதம் இருப்பு 199 ரூபாய் என்று கணக்குக் காட்டியிருக்கிறார்கள்.

அதே கோயில் வருமானம், அறநிலையத் துறையின் கீழ் வந்தபிறகு (2010), ஒன்றரை ஆண்டில் ரூபாய் 25,12,485 என்பதாக உள்ளது. இதிலிருந்தே எவ்வளவு பெரிய மோசடி நடந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தின் ஆட்சியில் எம்.ஜி.ஆர் இருந்தபோது சிதம்பரம் கோயிலை அறநிலையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவர 1985ஆம் ஆண்டு முயன்றார். அது முடியாமல் போயிற்று.

பின்னர் தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க., அரசு அமைந்தபோது, இக்கோயில் தொடர்பான வழக்கில் நீதிபதி பானுமதி அளித்த தீர்ப்பின் அடிப்படையில் 2009ஆம் ஆண்டு சிதம்பரம் நடராசர் கோயில் இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இப்பொழுது மீண்டும் இக் கோயில் குறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டு நடந்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தில், 3000 தீட்சிதர்களுடன் சிவபெருமான் வலம்வந்து சேர்ந்த இடம் சிதம்பரம் கோயில் என்கிறார் சுப்பிரமணியன் சாமி. நீதிமன்றம் இதையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

‘பீரங்கி கொண்டடித்துச் சீரங்கநாதனைத் தகர்க்கும் நாள் எந்நாளோ?’ என்று கருணாநிதி பாடியிரு க்கிறார் என்றும் இந்த சு.சாமி.என்னும் ஞானசூனியம் உச்சநீதிமன்றத்திலே சொல்லி இருக்கிறார். இதைப்பாடியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்று பலர் முன்பு கூறிக்கொண்டிருந்தனர். அதுவும் உண்மையில்லை. அப்படிச் சில வரிகளை யார் பாடினார்கள் என்பதே இன்றுவரை தெரியவில்லை.

எதிர்த்தரப்பு வழக்குரைஞர்கள் வாதிட்ட போது, குறுக்கிட்ட நீதிபதிகள், “2000 ஆண்டுகளாக ஒரு கோயிலை நிர்வாகம் செய்பவர்களை நீங்கள் எப்படி வெளியேற்ற முடியும்” என்று கேட்டி ருக்கிறார்கள்.

சிதம்பரம் கோயில் பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலங்களில், கி.பி.8,9ஆம் நூற்றாண்டில்தான் கட்டப் பட்ட கோயில் என்பதைக்கூட அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றக் கவனத்திற்குக் கொண்டு செல்லவில்லை.

இதில் இன்னொரு செய்தியும் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் இருக்கும், தமிழர் களால் கட்டப்பட்ட கோயிலில், தேவாரம், திருவாசகம் கூடப் பாட முடியவில்லை. அதற்காக இன்றுவரை ஆறுமுகசாமி ஓதுவார் போராடிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் சமஸ்கிருத வழிமுறையில் மந்திரங்கள் சொல்லப்படுகின்றன. சம்பிரதாயக் கோயில் வழிபாட்டு முறையான ஆகம விதிகளை தீட்சிதர்கள் மீறிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஏனோதானோ என்று இளநிலை வழக்கறிஞர்களை நியமித்து வாதாடுகிறது. அவ்வாறல்லாமல், தேர்ந்த வழக்கறிஞர்கள் மூலம் வாதாட ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.

தில்லைக்கோயில் தனியார் சொத்தும் இல்லை, தீட்சிதர்கள் சொத்தும் இல்லை. அதன் நிர்வாகத்தில் இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

சிதம்பரம் நடராசர் கோயில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், அதன் நிர்வாகத்தில் வருவதுதான் மிகச்சரியான நடைமுறை.

நீதிமன்றம் இதற்கு வழி வகுக்கும் என்று நம்புவோம்.

Pin It