அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சபர்மதி விரைவு இரயில் குஜராத் மாநிலம், கோத்ராவில் 27-02-2002 அன்று தீயிட்டு எரிக்கப்பட்டது வன்முறைக் கும்பலால்.

இதில் 14 குழந்தைகள் உள்பட, 57 பேர் கொல்லப்பட்டனர். பில்கிஸ் என்ற கர்ப்பிணிப் பெண்ணை 11 பேர் பாலியல் வன்கொடுமைச் செய்ததோடு, அப்பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொலை செய்தனர்.

இந்தப் பெரும் கொடுமை வழக்கு 15 ஆண்டு காலம் நடைபெற்றுக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். அவர்களில் இந்த 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தக் குற்றவாளிகளின் தண்டனைக் குறைப்புக் குறித்துப் ‘பரிசீலிக்குமாறு’ குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைச் சாக்காக வைத்துக் கொண்டு குஜராத் மாநில அரசு, தண்டனைக் குறைப்பே இல்லாமல், மிகச் சாதாரணமாக 11 குற்றவாளிகளையும் விடுதலை செய்து உத்தரவிட்டு, அவர்களும் வெளியே வந்து விட்டனர்.

இதுகுறித்து அம்மாநில பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சி.கே.ராவ்ஜி சொல்கிறார் அந்த 11 பேரும் பிராமணர்களாம். நல்ல பழக்க வழக்கம் கொண்டுள்ள அவர்கள் பிராமணத் தூய்மை உடையவர்களாம். சிலரின் தூண்டுதலின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டார்களாம்.

இப்படிச் சொல்பவர் ஆளும் பா.ஜ.கவின் சட்டமன்ற உறுப்பினர் என்பதை மீண்டும் நினைவு படுத்துவது அவசியம் ஆகிறது. ஏனென்றால் சில நாட்களுக்கு முன்னர் 75ஆம் சுதந்திர நாளில் பா.ஜ.க தலைவருள் ஒருவரான பிரதமர் மோடி டில்லியில், பெண்களின் பாதுகாப்பு, முன்னேற்றம் என்றெல்லாம் பேசி புளங்காகிதம் ஆனார்.

அவர் பேசி முடித்ததும் அவரின் சொந்த மாநிலமான குஜராத்தின் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரின் குரல் பெண்களுக்கு எதிராக வன்முறையாளர்களுக்கு ஆதரவாக அல்லவா இருக்கிறது.

பா.ஜ.கவின் இரட்டை வேடமும், 11 குற்றவாளிகளின் விடுதலையும் கடும் கண்டனத்திற்கு உரியது.