இக்கட்டுரையினைப் படிக்கும் தோழர்களுக்கு இதன் தலைப்பு சற்று வித்தியாசமானதாக, ஏன் பொருத்தம் அற்றதாகக் கூடத் தோன்றலாம். தன்பாலின் ஈர்ப்புக்கும், மாநில சுயாட்சிக்கும் என்ன தொடர்பு என்று! அத்தொடர்பு என்ன என்பதை இக்கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கினை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள சான்றுறுதி ஆவணத்தில் (Affidavit), “தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று கோருவது வெறும் நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை. தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களை ஆதரிப்பதன்மூலம் ஒரு புதிய சமூகத்தை உருவாக்க நீதிமன்றம் முயலக் கூடாது. இந்தப் பணியை நாடாளுமன்றத்திடம் நீதிபதிகள் விட்டுவிட வேண்டும்” என்று கூறியிருக்கிறது. இதற்குப் பதிலளித்த உச்சநீதிமன்றம் ‘தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் கோருவது என்பது நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை என்பதற்கு எந்தவிதத் தரவுகளும் இல்லை என்று சொல்லியதோடு, நீதிமன்றத்தை எப்படி நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு சொல்லித் தர வேண்டாம்’ என்றும் கண்டித்துள்ளது.supreme court 379இவ்வழக்கில் ஒன்றிய அரசு மாநில உரிமை குறித்துப் பேசியது உச்சகட்ட நகைச்சுவை. அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள ‘திருமணம்’ என்னும் பொருளானது (subject) ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent list) உள்ளது என்றும், அதனால் இந்த விவகாரத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருத்தைக் கேட்டறிவது முக்கியமானது என்றும் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர்கள் பதிலளிக்கக் கோரி அனைத்து மாநிலங்களுக்கும் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

மாநிலங்களின் உரிமையைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு மாநில உரிமையைப் பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது என்று சொல்வதற்கு ஒப்பானது. கல்வியும் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள ஒரு கூறுதானே ? இன்னும் சொல்லப் போனால், மாநிலப் பட்டியலில் இருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஒரு பொருள். ஆனால், அதற்கு மட்டும் மாநிலங்களின் கருத்தைக் கேட்டறிவது முக்கியமில்லையா? நீட் தேர்வு, க்யூட் தேர்வு (CUET) என்று ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து கொண்டிருக்கிறதே ஒன்றிய அரசு! எல்லாவற்றையும் மாநிலங்களின் கருத்தைக் கேட்டுவிட்டுத்தான் செயல்படுகிறதா ? எனவே தனக்கு வேண்டிய நேரத்தில் வேண்டிய நிலைப்பாட்டினை எடுத்துக் கொள்ளும் ஒன்றிய அரசின் இரட்டை வேடமே இதில் தெரிய வருகிறது.

2017ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் ஒருவருடைய பால் விருப்பினைத் (Sexual orientation) தேர்வு செய்யும் உரிமை அவருக்கு இருக்கிறது என்று தீர்ப்பளித்துள்ளது. 2018இல் ஓரினச் சேர்க்கையைக் கிரிமினல் குற்றமாகக் கருதும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377 ஐ ரத்து செய்தது. தொடர்ச்சியாகத் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வரும் தன்பால் ஈர்ப்பாளர்களுக்குச் சொத்துரிமை, இழப்பீடு, காப்பீடு உள்ளிட்ட உரிமைகளைப் பெறுவதற்கான சட்ட அங்கீகாரத்தை அவர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதன் மூலமாகவே பெற முடியும். உலகில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தன்பால் ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நார்வே, ஸ்வீடன் ஆகிய வளர்ந்த நாடுகளும் இப்பட்டியலில் உள்ளன. எனவே தன்பால் ஈர்ப்பாளர்களுக்கான திருமண உரிமையை சட்டப்பூர்வமாக வழங்குவதே அவர்களும் சமத்துவமாக நடத்தப்படுவதற்கான உத்தரவாதத்தினை அளிக்கும்.

- வெற்றிச்செல்வன்

Pin It