அண்மையில் ஒன்றிய அரசின் சுரங்கத் துறை ஓர் ஏல அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் கிழக்கு சேத்தியாதோப்பு, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, வடசேரி உள்ளிட்ட டெல்டா விளை நிலங்களில் பழுப்பு நிலக்கரி தோண்டி எடுப்பதற்கான ஏல அறிவிப்பு அது.

இதனால் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் அழிக்கப்பட்டு விடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து மோடி அரசு தமிழ்நாடு அரசுடன் கருத்துக் கேட்கவோ, பேசவோ இல்லை என்பது இன்னொரு அதிர்ச்சி. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது.

அதுவும் இந்திய ஒன்றியத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா விளைநிலங்கள் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாகத் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட நிலப்பகுதிகள்.cauvery deltaதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாகப் பிரதமருக்கு மறுப்பு தெரிவித்துக் கடிதம் எழுதியிருக்கிறார்.

அதுமட்டும் இல்லாமல் சட்டமன்றத்தில் “நானும் டெல்டா காரன்தான் “ என்ற ஒரு சொல்லின் மூலம், நிலக்கரிச் சுரங்கம் தோண்டக் கடுமையாக மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பினால் மத்திய அரசு மறுபரிசீலனை செய்வதாக செய்தி வந்துள்ளதாகவும் நம் முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்மீதும், தமிழர்கள் மீதும் அக்கரை காட்டுவதாகச் சொல்லிக் கொள்ளும் பிரதமர் மோடியின் வேடம் மீண்டும் கலைந்து விட்டது.

தமிழர்களின் விளைநிலங்களை அழித்து, தமிழர்களின் வாழ்க்கையை அழிக்கும் நிலக்கரிச் சுரங்கம் தமிழ்நாட்டுக்குத் தேவை இல்லை.

உடனே இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். ஏல அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்.

ஆளுநர் பதவி விலக வேண்டும்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிகள், சட்டமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், திருத்தச் சட்டங்கள், அவசரச் சட்டங்களுக்குக் கையெழுத்திட வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆளுநருக்கு இருக்கிறது. அதை விட்டுவிட்டு (ரம்மிதடை) சட்டம் இயற்றும் அதிகாரம் மாநிலத்திற்கு இல்லை என்று சொல்வதும், சட்ட முன்வடிவுகளை கிடப்பில் போடுவதும் ஆளுநரின் வேலையில்லை. அண்மையில் ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி குடிமைப் பணி மாணவர்களிடம், சட்டத்தை கிடப்பில் போடுவது என்பது அதை நிராகரிப்பது என்பதன் பொருள் என்றும், ஸ்டெர்லைட் ஆலை குறித்தும் பேசியிருக்கிறார். இது ரகசியக் காப்பு உறுதி மொழியை மீறிய செயல் ஆகும். ஆளுநரின் இப்படிப்பட்ட பேச்சும், போக்கும் வன்மையான கண்டனத்திற்கு உரியது.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It