பெரும்பாலான உலக நாடுகளில், கடவுளின் பெயரால் உறுதிமொழி கூறித்தான் பதவி ஏற்பு நிகழ்வுகள் நடந்து வருகின்றன. தொடக்க காலங்களில் இருந்ததைப் போன்று அரசியலில் மதத்தின் தலையீடு இப்போது இல்லை. ஆனாலும், கிறித்தவ நாடுகளில் பைபிளின் பெயரால், இசுலாமிய நாடுகளில் குரானின் பெயரால், இந்தியாவில் கடவுளின் பெயரால் பதவி ஏற்பது வழக்கமாக இருந்து வருகிறது.

juvaஅண்மையில் கனடாவில் திருக்குறளின் பெயரால் பதவி ஏற்பு நடந்திருக்கிறது. 2010 க்கான கனடா நகர்மன்றத் தேர்தலில், யுணிற்றா நாதன் என்னும் கனடியத் தமிழ்ப்பெண்மணி 60% வாக்குகளுடன் நகர்மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். டிசம்பர் 7 ஆம் நாள் நடைபெற்ற பதவிஏற்பு விழாவில், யுணிற்றா நாதன் கைகளில் திருக்குறள் நூலை ஏந்திப்பிடித்து, குறளின் பேரால் உறுதி மொழி கூறிப் பதவி ஏற்றிருக்கிறார். களவியல் , கற்பியல் என்று அக வாழ்க்கை யையும், அரசியல், அமைச்சியல், படையியல் என்று புற வாழ்க்கையையும் நெறிப்படுத்துகின்ற வாழ்வியல் நூலான திருக்குறளின் பெயரால் பதவி ஏற்பது எல்லாவிதத்திலும் மிகவும் பொருத்தமானது.

1967 க்கு முன்பு வரை, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் கடவுளின் பெயரால்தான் பதவி ஏற்புகள் நடந்தன. 67 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் ஆனபோது, அவரும், அவருடன் பதவிஏற்ற அவருடைய தம்பிகள் அனைவரும் மனசாட்சியின் பெயரால் உறுதிகூறி பதவிப் ஏற்றுக்கொண்டனர். அன்றிலிருந்து இன்றுவரை,  திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள்  பதவி ஏற்கும் போது அதே முறையைத்தான் பின்பற்றுகின்றனர். அண்ணா பெயரை ஒட்டவைத்துக் கொண்ட, புரட்சிகரமான தலைவர்களைக் கொண்ட கட்சியினர் இன்னும் கடவுளின் பெயரால்தான் பதவி ஏற்று வருகின்றனர்.  திருக்குறளின் பெயரால் பதவி ஏற்ற யுணிற்றா நாதனைப் பெருமையோடு பாராட்டுகிறோம்.

 

Pin It