செப்டம்பர் - 8 உலக எழுத்தறிவு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றை தினம், எழுத்தறிவு குறித்த பல்வேறு கருத்தரங்குகள் நாடுமுழுவதும் நடந்தன. நாளேடுகளிலும் அது குறித்த புள்ளிவிவரக் கட்டுரைகள் பல வெளிவந்தன. தொலைக்காட்சிகளில் விவாதங்களும் இடம் பெற்றன.

எல்லாவற்றிலும் முன்வைக்கப்பட்ட செய்தி ஒன்றுதான். உலகிலேயே எழுத்தறிவற்றவர்கள் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பதுதான் அது.

விடுதலை அடைந்து, 67 ஆண்டுகளாகியும் எழுத்தறிவில் இந்தியா பின்தங்கி இருக்க என்ன காரணம்? யுனெஸ்கோ சொல்கிறது, “இந்திய நகரங்களில் உள்ள 6 லட்சம் குடிசைப் பகுதிகளில் பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிகின்றனர். குடிநீர், கழிப்பறை, வகுப்பறை போன்றவை இல்லாததும் ஒரு காரணம்.

இந்தியாவில் ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரம் 1:42 என்ற நிலையில் இருக்கிறது. இது வகுப்பறையை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள உதவாது. மேலும், 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களில் சுமார் 6 கோடிக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை”

நம் நாட்டின் பள்ளிக்கூடங்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கின்றன என்பதை யுனெஸ்கோவின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ‘சர்வ சிக்ஷ அபியான்’ எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம், நாட்டின் கல்வியறிவு விகிதாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது.

ஆனாலும், குழந்தைகளுக்குச் சுமையாகிப் போன பாடப்புத்தகங்கள், அவர்களின் நடைமுறை வாழ்க்கைச் சூழலில் இருந்து விலகிச் செல்லும் பாடத்திட்டங்கள், மதிப்பெண்களை நோக்கிக் குழந்தைகளைத் தள்ளும் கல்வி முறை - என அடிப்படையிலேயே பல கோளாறுகள் இருக்கின்றன.

சான்றாக, ஒவ்வோர் ஆண்டும், தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரும்போதும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைப் பார்த்து வியப்படைகிறோம். இது ஒட்டு மொத்தக் கல்வி நிலையும் மேம்பட்டுவிட்டதான தோற்றத்தைத் தருகிறது இல்லையா? ஆனால் உண்மை அப்படியில்லை.

5ஆம் வகுப்பு மாணவர்களில் 53 விழுக்காட்டினர் இரட்டை இலக்க வகுத்தல் கணக்குப் போடமுடியாதவர்களாக இருக்கின்றனர். எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் கூட, தமிழை வாசிக்கத் திணறுகின்றனர். சாதாரணக் கூட்டல், கழித்தல் கணக்குகளுக்கு விடை எழுத இயலாதவர்களாக உள்ளனர் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் பள்ளி இடைநிற்றல் அதிகரித்துள்ளது. தொடக்கக் கல்வி நிலையிலேயே 59 விழுக்காட்டுக் குழந்தைகள் பாதியில் படிப்பை விடுகின்றனர். அவர்களில் 80 விழுக்காட்டினர் சிறார் தொழிலாளர்களாக மாறிவிடுகின்றனர்.

கல்வி மேலும் மேலும் கற்கத் தூண்டுவதாக அமைய வேண்டுமே அல்லாமல், படிப்பதை அப்படியே வெளியில் துப்புவதாக இருக்கக் கூடாது. இல்லாத வேதிக் கணக்கைக் கொண்டுவருவதாலோ, குரு உத்சவ் என்று பெயர் மாற்றம் செய்துவிடுவதாலோ கல்வித்தரம் - எழுத்தறிவு விகிதம் உயர்ந்துவிடாது. அரசியல் பரபரப்புக்காக எதையும் செய்வதை விடுத்து, மத்திய அரசும், மாநில அரசுகளும் உண்மைத் தன்மையோடு செயல்பட்டால் மட்டுமே இந்நிலை மாறும்.

ஒரு நாட்டின் பெருமை அந்நாட்டிலுள்ள வளங்களில், பொருளாதார வளர்ச்சியில் உள்ளது. அவற்றைக் காட்டிலும் ஒரு நாட்டுக்குக் கல்வி அழகே அழகு என்பதை உணரவேண்டும்.

Pin It