“காதில் குண்டலம் ஆட, கனத்த சாரீரம் பாட, காய்ச்சிய பால் தொண்டையில் ஓட, கண்கள் கதியற்றுக் கன்னியரை நாட....” இது வேலைக்காரி படத்தில் சாமியார்களைப் பற்றி அண்ணா எழுதிய உரையாடல். 61 ஆண்டுகளுக்குப் பிறகும் நிலைமை அப்படியேதான் இருக்கிறது. விதவிதமான சாமியார்களும், வகை வகையான ஏமாற்றுதல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பிடிபட்டவர்கள், இன்னும் பிடிபடாதவர்கள் என்று சாமியார்களில் இரண்டு வகை. இப்பொழுது சிக்கியிருப்பவர் நித்தியானந்தா.

வீட்டுக்கு வந்து ‘ஆசீர்வதித்தால்’ ஒரு இலட்சம் ரூபாய், நிறுவனங்களுக்கு வந்து ‘ஆசியுரை’ வழங்கினால் 11 இலட்சம் ரூபாய் என்று போட்டி போட்டுக் கொட்டிக் கொடுத்து, நித்தியானந்தாவைக் கோடிசுவரர் ஆக்கியவர்கள், அறியாமையில் திளைக்கும் நம் மக்கள்தான். அவர்கள்தான் இப்போது அவர் படத்தைக் கிழித்து, ஆசிரமத்தைத் தாக்கி வெகுண்டு எழுந்துள்ளனர்.

மக்களோடு மக்களாய்ச் சேர்ந்து கொண்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியினரும் நித்தியானந்தாவைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். இது ஒரு விதமான தற்காப்பு முயற்சி. மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மக்களை ஏமாற்றும் மோசடிக்காரர்களை மக்கள் புரிந்து கொண்டு கிளர்ந்து எழுந்துவிடாமல் தடுக்கும் முயற்சி. இவை எல்லாம் கடவுள் பக்தியாலோ, மதத்தினாலோ ஏற்பட்டுவிட்ட தவறுகள் இல்லை, சில தனி மனிதர்களின் பிழைதான் என்று காட்டும் முயற்சி.

இதிலும் கூட நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு கோணம் உள்ளது. நித்தியானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டதைப் போல, காஞ்சி சங்கராச்சாரியார் குறித்துப் பாலியல் குற்றச்சாட்டும், கொலைக் குற்றச்சாட்டும் எழுந்தபோது, சங்கரமடத்தின் மீது ஒரு சிறு கல் கூட வீசப்படவில்லை. அப்போது இந்து முன்னணியும், இந்து மக்கள் கட்சியும் வாயடைத்துப் போய்த்தான் இருந்தார்கள். மோசடி செய்வதற்குக் கூட மொத்தக் குத்தகை அவாளிடமே இருக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள் போலும்.

அண்மைக் காலமாக, யோகாசனம், தியானம் போன்றவைகள் பரபரப்பாக விளம்பரம் செய்யப்படுகின்றன. யோகா உடலுக்கும், தியானம் மனத்திற்கும் சில நன்மைகளைச் செய்யக்கூடும். எனினும் அவைதான் ‘சர்வரோக நிவாரணி’ என்பது போல ஒரு தோற்றம் இங்கே திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

இயந்திரமயமான வாழ்க்கையும், ஏராளமான எதிர்பார்ப்புகளும், அதனால் ஏற்படும் ஏமாற்றங்களும் மிக விரைவில் விரக்தியை மனிதர்களுக்கு ஏற்படுத்திவிடுகின்றன. விரக்தியடைந்த மனிதர்களும், ஆசை நிறைந்த மனிதர்களுமே, சாமியார்களின் மூலதனத்திற்கான கச்சாப் பொருளாக உள்ளனர்.

யோகா, தியானம் போன்றவைகள் இன்று முழுக்க முழுக்க வணிக மயமாகிக் கொண்டிருக்கின்றன. ‘ஸ்வாமிஜி’களும், ‘மகராஜ்’களும் உலகச் சந்தையில் யோகாவைப் பரப்பி, பணம் செய்து கொண்டுள்ளனர். சில ‘மகரி´’கள் சொந்த விமானமே வைத்துள்ளனர். ‘முற்றும் துறந்த’ இவர்கள் அமர்வது தங்க சிம்மாசனத்தில்; அருந்துவது பாதாம்பால்; அழைப்பது நடிகைகளை - அன்றாடம் உபதேசம் செய்வது மட்டும் பிரம்மசரியத்தை!

இந்துத்வா கோட்பாட்டிற்குத் தொடர்புபடுத்தி, இந்து மத வெறியை ஊட்டுவதற்கும் இவர்களுக்கு யோகா பயன்படுகிறது. ஆனால் யோகாவிற்கும், இந்துத்வாவிற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.

சித்தர்களில் ஒருவரான பதஞ்சலிதான், இவை குறித்து விளக்கமாகக் கூறியுள்ளவர். இமயம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகரம், தாரணி, தியானம், சமாதி என எட்டுவகை யோகங்களை அவர் எடுத்துக் கூறியுள்ளார்.

யோகாசனம் 20 வகைகள் என்று ஒரு சாராரும், 34 வகைகள் என்று இன்னொரு சாராரும் கூறுகின்றனர். இவை உடலுக்குச் சில பயிற்சிகளைத் தருகின்றன. நரம்புகளுக்கும், தசைகளுக்கும் சில புத்துணர்வைத் தருகின்றன. அவ்வளவே. அதனைத் தாண்டி இதற்கும், மதத்திற்கும் ஒட்டுறவு ஏதுமில்லை.

தியானம் என்பது மனக்கட்டுப்பாடு அல்லது மன ஒருமைப்பாட்டிற்குரிய பயிற்சி மட்டுமே. குண்டலினி சக்தியை எழுப்புதல், அட்டமா சித்திகளை அடைவது போன்றவைகளை அறிவியல் உலகம் இன்றுவரை ஏற்கவில்லை.

ஆணின் விந்து என்பது, உயிர் அணுக்களைக் கொண்ட திரவம். பெண்ணின் நாதம் என்பது, சினை முட்டைகளைக் கொண்ட திரவம். இவை ஒன்றுடன் ஒன்று சேரும்போது, மறு உற்பத்திக்கு வழி உண்டாகிறது. இவை இரண்டையும் (விந்து, நாதம்) கட்டுப்படுத்தி, ஒரு மையத்திலிருந்து, இன்னொரு மையத்திற்குக் கொண்டு செல்வதையே குண்டலினி சக்தியை எழுப்புதல் என்கின்றனர். இவை எல்லாம் ஏட்டளவில்தான் உள்ளன. குண்டலினி சக்தி உற்பத்தியாகும் மூலாதாரம், தொப்புளுக்குக் கீழே, சிறுநீர்த் துவாரங்களுக்கு மேலே உள்ளது என்பர். இக்கூற்றே அறிவியலுக்கு முரண்பட்டதாக உள்ளது. அறிவியலின்படி, ஆண்களுக்கு விந்து உற்பத்தியாகும் இடம் விதைப்பைகள்தான். பெண்களுக்கோ, அடிவயிற்றின் இரு புறங்களில் உள்ள சினைப்பைகளிலிருந்துதான் சினை முட்டைகள் உருவாகின்றன.

ஜீவ சமாதி அடைவதற்கு முன், எட்டுவகை யோகம் பயின்றவர்களுக்கு, எட்டு வகை ஆற்றல்கள் (அட்டமாசித்திகள்) வரும் என்பதும் மெய்ப்பிக்கப் படாத ஒன்றுதான். பெரியதைச் சிறியதாக்குவது, சிறியதைப் பெரியதாக்குவது, கனமானதை லேசாக்குவது, லேசானதைக் கனமாக்குவது, நீரிலே நடப்பது,வானிலே பறப்பது, கண்ணுக்குத் தெரியாமல் உலாவுவது, கூடுவிட்டுக் கூடு பாய்வது போன்றவை அனைத்தும் வெறும் அம்புலிமாமா கதைகள்.

இவற்றையயல்லாம் நம்பி, சாமியார்களைத் தேடிச் செல்லும் ஆயிரக்கணக்கான நம் மக்களே, ஆசிரமங்களின் அடித்தளங்கள்.

யோகா, தியானம் போன்றவைகள் கூட உடல் உழைப்பில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத் தேவை இல்லாதவைகளே. வைட்டமின் மாத்திரைகள் நல்லவை என்பதற்காக, எல்லோருக்கும் கொடுக்க வேண்டியதில்லை. தேவைக்கு ஏற்பத்தான் மருந்து, தேவைப்படுவோருக்கு மட்டும்தான் தியானம், யோகா எல்லாம்!

இந்தத் தெளிவு மக்களுக்கு ஏற்பட்டு விடுமானால், மோசடிச் சாமியார்களிடம் மோசம் போக வேண்டி இருக்காது.

இன்றைய சூழலுக்கு -

- யோகா, தியானம், பக்தி, கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் சாமியார்கள்

- பக்திப் பரவசத்தில் புத்தியை இழக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள்

- சாமியார்களின் ‘செக்ஸ்’ படங்களைத் திரும்பத் திரும்பக் காட்டி வணிகம் வளர்க்கும் ஊடகங்கள்

- அவற்றைப் பார்க்க, முண்டியடித்துக்கொண்டு குறுந்தட்டுகளை 500,600 ரூபாய் கொடுத்து வாங்கும் ரசிகப் பெருமக்கள்

என அனைவருமே காரணமாகின்றனர். “பக்தி வந்தால் புத்தி போகும். புத்தி வந்தால் பக்தி போகும்” என்பார் தந்தை பெரியார். பகுத்தறிவுக் கருத்துகள் முழுவீச்சில் பரப்பப்பட வேண்டும் என்பதே நம் முன்னால் இப்போது உள்ள கடமை !

- சுப.வீரபாண்டியன்

Pin It

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மக்களவை, சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சட்டத்திருத்த மசோதா, பெரும் போராட்டங்களுக்கிடையே நிறைவேற்றப்பட்டுள்ளது.

நூறாவது ஆண்டு மகளிர் நாளுக்கு அடுத்த நாள் மார்ச் 9 அன்று, நிறைவேறிய அம்மசோதாவுக்கு ஆதரவாக 189 உறுப்பினர்களும் எதிராக ஒருவரும் வாக்களித்துள்ளார்கள்.

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது, மாநிலங்கள் அவையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவர் லாலுபிரசாத் ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். இந்நிலையில் அம்மசோதாவைக் கிழித்து எறிந்து, அவை மரபுக்கு மாறாக ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த வீர்பால்சிங், நந்தகிஷோர்,அமீர் ஆலம்கான், கமல்அக்தர், சுபால் யாதவ், சபீர் அலி, லோக் ஜனசக்தி இஜாங்அலி ஆகிய 7 உறுப்பினர்கள் அவை இடைநீக்கம் செய்யப் பட்டார்கள்.

தொடக்கத்தில் இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த திரிணாமுல் கட்சி உறுப்பினர்களும், பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களும் வாக்கெடுப்பின் போது அவையைவிட்டு வெளி யேறிவிட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்விரு கட்சிகளின் தலைவர்கள் மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகிய இரு பெண்களும், பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேறுவதற்கு முகம் சுழித்திருக்கிறார்கள் என்பதுதான்.

நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு இப்படி ஓர் எதிர்ப்பு ஏன் எழவேண்டும்?

மகளிர் இடஒதுக்கீடு மசோதா இப்பொழுதுள்ள பொதுவான நிலையில் நிறைவேற்றப்பட்டால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த, இஸ்லாமியப் பெண்கள் பெரிதும் பின்தள்ளப் படுவார்கள். ஆகவே அவர்கள் முன் உரிமை பெறும் வகையில் உள் ஒதுக்கீடு செய்யவேண் டும். அவ்வாறு இல்லாமல் இம்மசோதா நிறைவேறக் கூடாது என்று லாலுபிரசாத் யாதவும், முலாயம்சிங் யாதவும் கூறுகிறார்கள்.

இவர்களின் கோரிக்கை நியாயமான கோரிக்கைதான். கட்டாயம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை.

இன்னொருபுறம் இம்மசோதா குறித்துத் தங்களிடம் கலந்து பேசவில்லை என்று ஒரு நொண்டிச் சாக்கைத் தூக்கிக் கொண்டு அலைகிறார்கள் மாயாவதியும், மம்தாவும்.

இங்கே ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய செய்திகளை இவர்கள் ஏன் சிந்திக்க மறந்து போனார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆரிய வர்ணாசிரமத்தாலும், ஆணாதிக்கத்தாலும், அழுத்தப் பட்டு, நொறுக்கப்பட்டு ஓர் அடிமைச் சமூகமாக இருக்கிறது பெண்சமூகம். வீட்டில் கணவனுக்குப் பணிவிடை செய்யும் வேலைக்காரியாகவும், சமூகத்தில் ‘பொட்டச்சிதானே அவள்’ என்று பேசுமளவுக்கும் இருப்பவர்கள் பெண்கள். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், சமூகத் தளங்களில் பெரிதும் புறக்கணிக்கப்பட்டவர்கள் பெண்கள். இதை ஊரறியும், நாடறியும், நாமும் அறிவோம்.

இப்படிப்பட்ட சமூக ஒடுக்கு முறைகளில் இருந்து, இன்று, பெண்கள் முன்னேறத் தொடங்கி இருக்கிறார்கள். பள்ளி, கல்லூரித் தேர்வு முடிவுகளில் பெண்களின் தேர்ச்சி, ஆண்களின் தேர்ச்சி விழுக்காட்டை விட அதிகம்.

அலுவலகங்களில் ஆண்களுக்கு இணையாக செயலாற்றுவதில் பெண்கள் சளைக்கவில்லை. தரையில் இருசக்கர வாகனம் ஓட்டுவதில் இருந்து, விண்வெளியில் பறக்கும் அளவுக்கு ஆற்றல் பெற்றவர் அப்படி அவர்களின் திறமைகளும், அறிவும், நுட்பமும் கண்கூடாகத் தெரிந்தும் கூட, ஆணாதிக்கம் அவர்களை விட்டு அகலுவதாக இல்லை. சமத்துவம் என்பது பேச்சளவில், எழுத்தளவில் -நடைமுறையில் இல்லை. அதனால் சமூகநீதி அடிப்படையில்கள் பெண்கள் என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் அவர்கள்.

அப்படி அவர்களின் திறமைகளும், அறிவும், நுட்பமும் கண்கூடாகத் தெரிந்தும் கூட, ஆணாதிக்கம் அவர்களை விட்டு அகலுவ தாக இல்லை. சமத்துவம் என்பது பேச்சளவில், எழுத்தளவில் -நடைமுறையில் இல்லை. அதனால் சமூகநீதி அடிப்படையில் பெண்களுக் கான உரிமைபற்றிப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.

அதன் விளைவாக 1974 ஆம் ஆண்டு, மத்திய கல்வி மற்றும் சமூகநலத்துறை அமைச் சகத்திடம், பெண்கள் நிலைகுறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு அளித்த அறிக்கையில், முதன் முதலாக நாடாளு மன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் பற்றிய பிரச்சினை எழுப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்தில் 73,74 ஆம் சட்டத்திருத்தங்கள் மூலம் ஊராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலையும் உருவானது.

பின்னர் 81 வது அரசமைப்புத் திருத்த மசோதாவாக முதன்முதலாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா செப்டம்பர் 12 ஆம் நாள் 1996 ஆம் ஆண்டு, 11 ஆம் மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட போது பிரதமர் தேவகவுடா. அன்று மகளிர் மசோதா நிறைவேறவில்லை.

அடுத்த மூன்று மாதங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு பரிந்துரையின்படி டிசம்பர் 6, 1996 ஆம் நாள் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 1998 ஜுலை 13 ஆம் நாள் 12 ஆம் மக்களவையில் மகளிர் மசோதா தாக்கல்செய்த போது, ராஷ்ட்ரிய ஜனதாதள உறுப்பினர் சுரேந்திரபிரசாத் யாதவ் மசோதாவைக் கிழித்தெறிந்தார்.

1999 ஆம் ஆண்டு 13 ஆம் மக்களவையிலும் எதிர்க்கட்சியினரின் அமளியால் இம்மசோதா நிறைவேறவில்லை.

2003 ஆம் ஆண்டு இருமுறை இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டபோதும் இதே நிலைதான் நீடித்தது.

2005 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அக்கட்சியின் உமாபாரதி உட்பட சிலரின் எதிர்ப்பால் அப்போதும் வழிஇல்லாமல் போயிற்று.

2009 ஆம் ஆண்டு சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இம்மசோதாவை நிறைவேற்றப் பரிந்துரை செய்திருந்தது. 2010 பிப்ரவரி 25இல் இம்மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இறுதியாக மார்ச் 8 ஆம்நாள் இம்மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவையில், மறுநாள் இம்மசோதா நிறைவேறியிருக்கிறது.

மகளிர் பிரதிநிதித்துவம் என்று முதன் முதலாகப்பேசப்பட்ட 1974 முதல் 36 ஆண்டுகளாக ; முதன் முதலாக இம்மசோதா தாக்கல் செய்யப்பட்ட 1996 ஆம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து எதிர்ப்பு எதிர்ப்பு என்று இம்மகளிர் மசோதா நிறைவேறாமலேயே போயிற்று என்பது பெரிய தலைகுனிவு. எதிர்க்கட்சியினர் சிலர் உள்ஒதுக்கீடு கேட்பது நியாயமானது. அதை அனைத்து அரசியல் கட்சியினரும் ஏற்று ஒருமனதாக நிறைவேற்றியிருக்க வேண்டும். அப்படிச் செய்யக் கட்சிகள் தயாராக இல்லை. ஆகவே இன்றைய நிலையில் பொது மசோதாவாக இது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையயல்லாம் பார்க்காமல், சிந்திக்கா மல் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிச் சொல்லி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேறாமல் பார்த்துக் கொள்ளுவது என்ன நியாயம்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் “பெண்களுக்கு இருந்த சமத்துவமற்ற நிலை மாறி, சமத்துவத்திற்கு வழி பிறந்திருக்கிறது” என்று இம்மசோதா நிறைவேறியதை வரவேற்றுச் சொல்லியிருப்பதைக் கவனிக்க வேண்டும். மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி இம்மசோதா எதிர்வரும் 15 அல்லது 16 ஆம் தேதிகளில் மக்களவையில் தாக்கல் செய்யப் படும் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் அடுத்து வரும் செய்திகள் சட்ட முன்மொழிவைத் தாக்கல் செய்வதில் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயத்தைக் கிளப்புகிறது. தடைபல கடந்தேனும் அச்சட்டம் நிறைவேறும் என்ற ஆவலோடு நாடு காத்திருக்கிறது.

- எழில்.இளங்கோவன்

Pin It

மார்ச் 1 ஆம் தேதி காலை, கலைஞர் தொலைக்காட்சியில் ‘ஒன்றே சொல் நன்றே சொல்’ பகுதியில் மாற்றுத் திறனாளிகள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினேன். பேசி முடிந்த சில நிமிடங்களில், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களிடமிருந்து தொலைபேசி வந்தது. “இன்றைக்கு நல்ல செய்தி ஒன்றைச் சொல்லியிருக்கிறாய் . உன் பேச்சு என் மனதைத் தொட்டது. உடல் ஊனமுற்ற அந்த மக்களுக்குக் கண்டிப்பாக நல்லது செய்கிறேன்” என்று அவர் சொன்னபோது வியப்பிலிருந்து விடுபட எனக்கு ஒரு நிமிடமாயிற்று.

அன்று மாலையே முதல்வரின் அறிக்கையைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். அந்த அறிக்கையில் -

“இன்று காலையில் ‘கலைஞர் தொலைக்காட்சியில்’ தம்பி சுப.வீரபாண்டியனின் ‘ஒரு சொல் கேளீர்’ எனும் சொற்சித்திரத்தைக் காணவும், கேட்கவுமான வாய்ப்பைப் பெற்றேன். உடல் ஊனமுற்றோருக்காக ஏதோ சொல்லப்போகிறார் என அறிந்தவுடன் முழுப் பேச்சையும் கேட்கலாம் என்று அமர்ந்தேன். உடல் ஊனமுற்றோருக்கான உதவிகள் செய்வதற்குத் தொண்டு நிறுவனங்கள் பல முன்வந்துள்ள நிலையிலும் - அரசினரும் அந்தப் பணியினை மேற்கொண்டுள்ள நிலையிலும், தம்பி சுப. வீரபாண்டியனின் இந்தக் கருத்துக் கோவை என்னை மிகவும் கவர்ந்தது.

மாற்றுத்திறன் உடையவர்களுக்கான பணிகள் தற்போது உரிமை அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது. இனியும் அவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுப்பது, தொண்டு இல்லத்தில் வைத்துப் பராமரிப்பது போன்ற பணிகளை மட்டுமே அரசோ, அரசு சாரா நிறுவனங்களோ செய்து கொண்டிருக்கக் கூடாது. அதையும் தாண்டி அவர்களின் உரிமைகளை நிலைநாட்டிட அனைத்துத் துறைகளிலும் அவர்களின் பங்களிப்பை உறுதி செய்யவும், அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கும் பாடுபடவேண்டும். அவர்கள் அரசிடமிருந்து எந்த இலவசங்களையும் எதிர்பார்க்கவில்லை.

அவர்களுக்கென இயற்றப்பட்டிருக்கும் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த சட்டத்தின் ஆட்சியின்படியே அவர் களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று கோருகிறார்கள் என்று அவர் சொல்லி முடித்ததும், அவர் அந்தப் பேச்சில் குறிப்பிட்ட Uஐஷ்மிed ஹிழிமிஷ்லிஐவி ளீலிஐஸeஐமிஷ்லிஐ யூஷ்ஆஜுமிவி க்ஷூலிr Perவிலிஐ ழஷ்மிஜு ம்ஷ்விழிணுஷ்யிஷ்ஷ்மிeவி புஉமி 2007ன் விவரங்களை வாங்கிப் படித்துப் பார்த்தேன். ஆம், அவ்வாறு ஒரு சட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டபோது, அந்தச் சட்டத்தை ஏற்றுக் கையயழுத்திட்ட நாடுகளில் ஏழாவது நாடாக இந்தியா இடம்பெற்றிருப்பதும் தெளிவாயிற்று” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஒரு செய்தியைக் கேள்விப்பட்ட 24 மணிநேரத்திற்குள் இவ்வளவு விரைவாய்ச் செயல்படும் முதல்வரின் சுறுசுறுப்பு வரலாற்றுச் சிறப்புடையது. அந்த அறிக்கையோடு நின்றுவிடாமல் திருச்சி, விழுப்புரம் ஆகிய நகரங்களில் நடைபெற்ற மாபெரும் கூட்டங்களிலும் மாற்றுத் திறனாளிகளைப் பற்றிக் குறிப்பிட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக, புதிய சட்டமன்றப் பேரவைத் திறப்பு விழாக் கூட்டத்தில், இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியாகாந்தியும் அமர்ந்திருந்த மேடையிலேயே, அவர் அந்தச் செய்தியை மீண்டும் வலியுறுத்தினார்.

அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ சொன்னால்தான் என்றில்லாமல், சாதாரணக் குடிமக்கள் சொல்லும் செய்தியிலிருந்தும் நல்லவைகளை எடுத்துக் கொண்டு செயலாற்றும் தமிழக முதல்வரின் தாயுள்ளத்தால், தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 20 இலட்சம் மக்கள் பயனடைய இருக்கின்றனர், எனும் செய்தி - இனிக்கிறது நெஞ்சமெல்லாம் !

- சுப.வீரபாண்டியன்

Pin It

தொகுப்பாசிரியர் : குயில்தாசன்

வெளியீடு : அற்புதம் குயில்தாசன், பேரறிவாளன் இல்லம்,

11,கே.கே.தங்கவேல் தெரு, சோலையார்ப் பேட்டை,

வேலூர் - 635 851(9445105527). விலை : ரூ.100/-

63 சான்றோர்கள் திருக்குறளால் பட்டுணர்ந்த, அறிந்த செய்திகளைக் கட்டுரையாக்கி நயம்படச் சொல்லியிருக்கிறார்கள். 63 கட்டுரைகளையும் தொகுத்து நூலாக்கியிருக்கிறார் குயில்தாசன். இந்நூலை வெளியிட்டிருப்பவர் அற்புதம் குயில்தாசன்.

“கடவுள் வாழ்த்து என்று குறளில் உள்ள ஒரு பிரிவுக்குத் தலைப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறதே என்றால், வள்ளுவர் தமது குறளில் எங்கேயாவது கடவுள் என்று குறிப்பிட்டிருக்கிறாரா? ஆனால்,சில நற்பண்பு கொண்ட மகனை வழிபடுக என்று கூறியிருக்கிறார். வழிபடு என்றால் பின்பற்றி நட என்பதுதானே” - 1948 இல் தந்தை பெரியாரின் இந்தக் கருத்துடன் நூல் தொடங்குகிறது என்பது இந்நூலின் செழுமைக்கு முதல் சான்று.

பாவேந்தர் பாரதிதாசனார், முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், சமூகநீதிப் பெரியார் வே.ஆனைமுத்து போன்றவர்களின் அழுத்தமான கருத்துகள், நாயன்மார்கள் - சைவர்களின் பாடல் கருத்துகள், மணக்குடவர், காளிங்கர், பரிப்பெருமாள், பரிமேலழகர் போன்ற குறள் உரையாசிரியர்களின் விளக்கங்கள் என இவைகளை உள்ளடக்கி வந்துள்ள அருமையான நூல் இது.

ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி ‘உருவுகண்டு எள்ளாமை வேண்டும்’ என்று கவிஞர் காசி ஆனந்தன் கூறும் போதும், ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற குறளை மேற்கோள்காட்டி, பால், இயல், அதிகாரம் என்று குறள் இருக்கும் இடத்தை வைத்துப் பொருள் கூறும் புதிய தெளிவைப் பேரா. சுப. வீரபாண்டியன் கூறும் போதும், ‘தீயள வன்றித் தெரியான்’ என்ற குறளை எடுத்து, தீ என்பது உணவின் கலோரி, இதன் அளவு மிகுந்தால் நோயால் துன்பம் விளையும் மரணம் ஏற்படும் என்று இன்றைய மருத்துவ விஞ்ஞானத்தை மருத்துவர் ச. மல்லிகேசன் கூறும்போதும் வியக்காமல் இருக்க முடியவில்லை. குறளில் எதுதான் இல்லை என்பதற்கு இந்நூல் சான்று. அனைத்துக் கட்டுரைகளும், தனித்தனிக் கோணம், தனித்தனிப்பார்வை, தனித்தனியாகச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமையப் பெற்றுள்ளன. ஒவ்வொருவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூலாக இந்நூல் அமையப் பெற்றிருக்கிறது.

Pin It

ஆயிரமாண்டுகாலத் தீண்டாமையை ஐந்தே நிமிடங்களில் குறுகத் தரித்த குறள்போலக் காட்சிப்படுத்துகிறது வறண்ட விழிகள் என்னும் குறும்படம்.

காக்கைகள் கரையும் ஒலியுடன், வேலிக்கருவை மரங்களுக் கிடையே ஆங்காங்கே தென்படுகின்றன சில குடிசைகள். அந்த முள்ளுக் காட்டுக்குள் நெளிந்து செல்லும் ஒற்றையடிப்பாதையில் செருப்பில்லாத கால்களுடன் ஓரு சிறுமி தண்ணீர்க் குடம் சுமந்துகொண்டு போகிறாள். பள்ளிக் கூடம் முடிந்து வந்து, வீட்டுக்குத் தேவையான தண்ணீரை எடுக்கிறாள் என்பது அவள் அணிந்திருக்கும் பாதிச் சீருடையில் தெரிகிறது.கொண்டுவந்த தண்ணீரைக குடிசைக்கு வெளியில் இருக்கும் ஒரு பாத்திரத் தில் ஊற்றி, கொஞ்சம் பாத்திரங்களை விளக்கிக் கழுவி வைத்துவிட்டு, காலியான குடத்துடன் மீண்டும் தண்ணீர் எடுக்கச் செல்கிறாள். குடிசையின் வாசலில் வயதான பெரியவர், ஆண்டைமார்களின் துணிமணிகளுக்குப் பெட்டிபோட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் அழுக்கு மூட்டையைச் சுமந்து வருகிறார். இந்தக் காட்சிகளே அவர்களின் சமூகப்படிநிலையைப் படம் பார்த்துக் கொண்டிருப் பவர்கள் புரிந்து கொள்ள, போதுமான வைகளாக உள்ளன.

தண்ணீர் எடுக்கச் செல்லும் அந்தச் சிறுமி, குடத்தைத் தூக்கிப் போட்டுப் பிடித்தும், குடத்தைக் கொண்டு, இருபுறமும் வளர்ந்துள்ள வேலிக்கருவைச் செடிகளை அடித்து விளையாடிக் கொண்டும் நடக்கிறாள். துருதுருவென்று துள்ளல் நடைபோட்ட அவளுடைய கால்களின் வேகம் திடீரென்று குறைகிறது. அய்யோ கொடிய வி­ப்பாம்பு ஏதேனும் வழியில் குறுக்கிட்டுவிட்டதோ என்று நாம் பதறுகின்றபோதே, பெரியபெரிய வீடுகள் இருக்கின்ற ஊரின் தெருவுக்குள் இரண்டு பக்கமும் பார்த்துக் கொண்டே தயங்கித் தயங்கி நுழைகிறாள். முள்ளுக்காட்டிற்குள்கூடத் துள்ளிக் கொண்டுவந்த பிள்ளை, ஊருக்குள் நுழைய அச்சப்படுகின்ற நிலை.

தயங்கித் தயங்கி குழாயடியில் வந்து குடத்தைத் தன் உடலுடன் இறுக்கிப் பிடித்தபடி நிற்கிறாள். ஒரு குடத்தில் தண்ணீர் விழுந்துகொண்டிருக்கிறது. அருகில் யாரும் இல்லை. இதோ நிறைந்தும் விட்டது. யாராவது குடத்தை எடுக்க வருகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்க்கிறாள். எவரும் வருவதாகத் தெரியவில்லை. தண்ணீர் நிறைந்து வழிந்துகொண்டே இருக்கிறது. வெறித்த கண்களுடன் வழிந்தோடும் தண்ணீரைப் பார்த்துக்கொண்டே இருக்கிறாள் அந்தச் சிறுமி.

வறண்ட விழிகளுடன், கனத்த இதயத்துடன் காத்திருக்கிறோம்.... என்ற வரிகள் திரையில் தோன்ற படம் முடிகிறது.

சாதிகள் இல்லையடி பாப்பா எனச் சொல்லிவிட்டு, சாதிக்கொடுமைகளை மட்டுமே பரிசளிக்கிறீர்களே !

தீண்டாமை ஒரு பாவச் செயல் எனச் சொல்லிவிட்டு, தீயைவிடக் கொடூரமாய்த் தீண்டாமையால் சுடுகிறீர்களே!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனச் சொல்லிவிட்டு, பிறப்பில் பேதம் காட்டிப் பிஞ்சுகளை வெம்பச் செய்கிறீர்களே!

இது நியாம்தானா எனக் கேட்பதுபோலத் தோன்றுகிறது அந்தச் சீருடைச் சிறுமியின் வெறித்த “வறண்ட விழிகள்”.

சிறுமி யாழினியின் மிகைப்படுத்தல் இல்லாத இயல்பான நடிப்புக்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். காட்சிகளே கதை சொல்லும் சாட்சிகளாகக் காட்டியிருக்கும் இயக்குனருக்கு நம்முடைய சிறப்பான பாராட்டுக்கள்.

Pin It