இராஜீவ்காந்தி கொலை வழக்கில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு முக்கியமான திருப்பம் நிகழ்ந்திருக்கிறது. இக்கொலைவழக்கின் விசாரணை அதிகாரிகளுள் ஒருவரான, திரு தியாகராஜன் இப்போது வெளிப்படுத்தி இருக்கும் செய்தி, வழக்கின் தன்மையைத் தலைகீழாகப் புரட்டிப்போடக் கூடியதாக உள்ளது. இவர்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்த அதிகாரி.

இப்போது அவரே ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்திருக்கிறார். மரண தண்டனைக்கெதிரான ‘உயிர்வலி’ ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள அவரின் வாக்குமூலம் இதோ...

“பேரறிவாளனின் வாக்குமூலம் வரிக்குவரி அப்படியே பதிவு செய்யப்படவில்லை......

....9 வோல்ட் திறன் கொண்ட 2 கோல்டன் பவர் பேட்டரிகளை வாங்கி, சிவராசனிடம் கொடுத்தேன். அவற்றை வெடிகுண்டுகளில் சிவராசன் பயன்படுத்தினார் என்று பேரறிவாளன் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தான் வாங்கிய பேட்டரி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொலை செய்வதற்காகப் பயன்படுத்தப் பட்ட வெடிகுண்டில் பயன்படுத்தப்பட உள்ளது என்பது தெரியும் என்று பேரறிவாளன் கூறவே இல்லை.

அவரிடம் வாக்குமூலம் பெற்ற போது, ‘நான் பேட்டரியை வாங்கிக் கொடுத்தது உண்மை. ஆனால், எதற்காக சிவராசன் அதைக் கேட்டார் என்று தெரியவில்லை’ என்றுதான் பேரறிவாளன் கூறினார். ஆனால் அதனை அவர் வாக்குமூலத்தில் நான் எழுதவில்லை. அதாவது அவரது ஒப்புதல் இல்லாமல், பேரறிவாளனின் வாக்குமூலத்தில் ஒரு பகுதியை நீக்கி விட்டு, என் கருத்தை நான் சேர்த்துக் கொண்டேன். இதற்காக நான் வருந்துகிறேன். எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருந்தால், அதை நிச்சயம் மாற்றி இருந்திருப்பேன்....”

தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கைப் பொறுத்தவரை, காவல்துறை அதிகாரி களால் வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம்தான் முகாமையான அடிப்படைச் சான்றாக எடுத்துக் கொள்ளப்படும். அதன் அடிப்படையில்தான் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்டோ ருக்குத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இப்போது “ சிவராசன் புலிகளின் தலைமையிடத்துக்கு அனுப்பிய வயர்லெஸ் செய்தியில், ராஜீவ் கொலை பற்றிய செய்தியை இதுவரைக்கும் நாங்கள் யாருக்கும் சொல்லவில்லை என்று பதிவாகியுள்ளது......ஆகவே சந்தேகத்தின் பயனை... ஏன்? ஏன் சந்தேகத்தின் பலன்... தெளிவாகத் தெரிகிறது, அறிவுக்கு ராஜீவ்கொலை பற்றி முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை....சதித்திட்டம் பற்றியே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்னும் போது, சதியில் அவருக்கு எப்படிப் பங்கு இருக்க முடியும்? எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தூக்கிலிட்டால், அது மிகக்கொடுமையான நீதிப் பிழையாகும்” என்று வாக்குமூலங்களைப் பதிவு செய்த அதிகாரி, தியாகராஜனே கூறுகிறார். அறிவைப் பற்றிச் சொல்லும்போது, “குற்றமற்ற ஓர் உயிர்... அதில் எந்தக் காரணத்திற்காகவும் அறம் தப்பக் கூடாது” என்று குற்ற உணர்ச்சி மேலிட தெரிவிக்கிறார்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகாவது அவருடைய நெஞ்சு சுட்டு உண்மை வெளிப்பட்டதில் மகிழ்ச்சியே! ஆனால் ஒவ்வொரு வழக்கிலும், ஏதேனும் ஓர் அதிகாரியின் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தால்தான் அப்பாவி களுக்கு நீதி கிடைக்கும் என்னும் நிலைமை உருவாகிவிட்டால், நீதி மன்றங்களின் மதிப்பு என்னாகும் என்ற எண்ணமும் எழுகிறது.

சிபிஐயின் முன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராஜனின் வாக்குமூலம், ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட் டுள்ளவர்களின் மீது சுமத்தப்பட் டுள்ளவை பொய்யான குற்றச்சாட்டு கள்தான் என்கிற உண்மையை உடைத்துச் சொல்கிறது, உரக்கச் சொல்கிறது. எனவே நாம் வைக்கின்ற கோரிக்கைகள் இரண்டு மட்டுமே. ஒன்று, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இரண்டாவதாக, மீண்டும் இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும். தி.மு-.க. தலைவர் கலைஞர் உள்பட ஜனநாயக அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், தமிழ் உணர் வாளர்கள் ஆகியோரின் ஒருமித்த கோரிக்கை மறுவிசாரணை வேண்டும் என்பதே! இதை வலியுறுத்தி தமிழக வழக்கறிஞர்கள் சார்பில், உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘மறுவிசாரணை செய்வது என்றால் உங்களுக்கு விளையாட் டாகத் தெரிகிறதா’ என்கிறார், இவ்வழக்கின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் இயக்குனரான கார்த்திகேயன். யார் விளையாடுகிறார்கள்? வாக்கு மூலங்களில் கற்பனையைக் கலந்து, அப்பாவிகளின் உயிர்களோடு விளை யாடுவது நீங்களா? நாங்களா? மனித அறத்திலிருந்து விலகி, அரசியல் சட்டம் வழங்கியுள்ள உயிர் வாழும் அடிப்படை உரிமையைப் பறித்து, பேரறிவாளன் உள்ளிட்ட இளைஞர் களைத் தூக்கு மேடையில் நிற்க வைத்து அதிகார விளையாட்டு விளையாடுவது நீங்களா, நாங்களா?

ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம், இத்தனை ஆண்டுகள் கழித்தாவது நீதி காப்பாற்றப்பட்டதே என்று மகிழாமல், இதனால் நீதிமன்றங்களின் முறைமைகள் என்னாகுமோ என்று கவலைப்படு கிறார். தியாகராஜனுக்குத் தாமதமாக வேணும் மனச்சான்று விழித்துக் கொண்டது, ஆனால் இவர்களைப் போன்றவர்களுக்கு மனச்சான்று செத்தே போய்விட்டது போலிருக்கிறது.

நீதிமன்றங்களின் மதிப்பும், மரியாதையும் நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளின் நீதியில் இருக்கின்றன. அந்த நீதி, நீதிபதிகளின் நேர்மையில் வாழ்கிறது. ஆனால் அண்மைக் காலமாக நீதிபதிகளே குற்றச்சாட்டு களுக்கு உள்ளாகும் நிலையை நாடு பார்க்கிறது. தில்லி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் மீது, பெண் வழக்குரைஞர் ஒருவர் பாலியல் குற்றம் சாட்டியிருக்கிறார். விசாரணை ரகசியமாக நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சாந்தி பூஷன், “இந்தியாவின் கடைசித் தலைமை நீதிபதிகள் 16 பேரில், எட்டு பேர் லஞ்ச ஊழல் கறை படிந்தவர்கள். 6 பேர் நேர்மையானவர்கள். மீதம் இருக்கிற 2 பேரைப் பற்றி எந்தவித முடிவுக்கும் வரமுடியவில்லை” (eight of the last 16 Chief Justice were definitely corrupt. Six were definitely honest and about the remaining two, a definite opinion cannot be expressed whether they were honest or corrupt) என்று, 2010 செப்டம்பரில், தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியாவிற்கு அனுப்பிய மனுவில், 16 நீதிபதிகளின் பெயர்களோடு குறிப்பிட்டிருந்ததை நாம் அறிவோம்.

நீதிமன்றங்களின் முறைமைகளைக் கேள்விக்குள்ளாக்குவது யார் என்பதை இதற்குமேலும் விளக்க வேண்டுமா?

குற்றங்களை விசாரிக்கின்ற விசாரணை அமைப்புகளும், அந்த விசாரணைகளின் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்குகின்ற நீதி அமைப்பும், தங்களைப் பற்றிய பெருமிதத்தையே பெரிதாக எண்ணுகின்றன. தங்களுக்குள் இருக்கின்ற நீ பெரியவனா, நான் பெரிய வனா என்ற மோதலில் நீதி சாகடிக்கப் படுவதையோ, அப்பாவிகள் தண்டிக்கப் படுவதையோ உணர மறுக்கின்றனர். முதலில் இவர்களுக்கு மனித உயிர் களின் மதிப்பையும், அறத்தின் வலிமை யையும் அடிப்படையாக மனத்தில் பதிய வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று மனசாட்சியின் உறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட ஒரு காவல் ஆய்வாளரின் கடிதம்தான், ஆறுமுகம் என்ற அப்பாவியை, 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என்று விடுதலை செய்ய உதவியது. தமிழரான ஆறுமுகம் பொய்க் குற்றச்சாட்டில் தண்டிக்கப் பட்டது, மும்பை ஓசிவாராவில். ஆயுள் தண்டனை என்பதால் ஆறுமுகம் அரைகுறையாகவாவது தப்பினார், ஒரு வேளை தூக்கிலிடப்பட்டிருந்தால்...? இதுபோன்று நீதி பிறழும் இடங்கள் தான் நீதிமன்றங்களின் முறைமைகள் கேள்விக் குள்ளாக்குகின்றன என்பதை ‘நீதியரசர்கள்’ மறுக்கமாட்டார்கள் என்று நம்புகிறோம்.

காரணம், இந்தியாவில் மட்டும் 500க்கும் மேற்பட்டவர்கள் தூக்குமேடையில் நிறுத்தப்பட்டுள்ள னர். உலகம் முழுமைக்கும் ஏறத்தாழ 20,000 பேர்களுக்கு நீதியின் பெயரால் கல்லறைகள் தயாராக உள்ளன. ராஜீவ் கொலை வழக்கில் உயிரூட்டப்பட இருக்கின்ற நீதியானது, ஒட்டுமொத்த மரணதண்டனைக்கும் சாவு மணியாக இருக்கவேண்டும்.

அதற்கு ஜெயின் கமிஷன் சுட்டிக்காட்டிய சந்தேகத்திற் குரியோர் பட்டியலில் முதலாவதாக உள்ள சந்திராசாமியும், இரண்டாவது இடத்தில் உள்ள சுப்பிரமணியன் சாமியும் தீர விசாரிக்கப்பட வேண்டும். தங்கள் தலைவரின் சாவுக்கு நீதி வேண்டும் என்று காங்கிரசாரும், ராஜீவ் குடும்பத்தாரும் விரும்புவது உண்மையெனில், தண்டிக்கப்பட்ட நிரபராதிகளை உடனே விடுதலை செய்யவும், ‘சாமி’களின் மீது விசாரணை தொடங்கவும் வலியுறுத்த வேண்டும்.

வழக்கு விசாரணை முடிவதற் குள்ளாகவே தண்டனை வழங்கியது எப்படிச் சரியாகும் என்கிற கேள்வியை நாம் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம். இதற்கு மேலும் வலுசேர்ப் பதுபோல, தியாகராஜனின் வாக்கு மூலம் அமைந்துள்ளது.

தூக்குத் தண்டனை வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான, ஓய்வு பெற்ற நீதிபதி கே.டி.தாமஸ், “இது ஒரு நீதிக்கொலை (It is a Judicial murder) அவர்களை விடுதலை செய்யும் நேரம் வந்துவிட்டது.” என்-று சொல்கிறார். வாக்குமூலம் வாங்கிய அதிகாரியே, “சிபிஐயிடம் இருக்கும் மற்ற ஆதா ரங்களின்படி பார்த்தாலும், அறிவுக்கு ராஜீவ் கொலை பற்றி முன்பே தெரிந்திருக்கவில்லை...This is a very solid, uncontested, unchallenged and unchallengable evidence” என்று சொல்கிறார். அன்று புனையப்பட்ட ஆதாரங்களை அவர்கள் கொடுத்த போது ஏற்றுக்கொண்ட - தியாக ராஜன் சொல்வதுபோல, “வாக்குமூலத் தில் இல்லாத ஒன்றை தன்னிச்சையாக அர்த்தப்படுத்திக்கொண்ட” - உச்சநீதி மன்றம், இன்று உண்மையைச் சொல்லும் அவருடைய வாக்குமூலத் தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குற்றத்தை ஒப்புக்கொண்டு வழங்கப்படுவதுதான் ஒப்புதல் வாக்கு மூலம். ‘தனக்கு எதுவும் தெரியாது’ என்று அறிவு சொன்னது வெறும் வாக்குமூலம்தானே தவிர ஒப்புதல் வாக்குமூலம் அன்று.

22 ஆண்டுகளாக, தங்கள் இளமைக் காலம் முழுவதையும் சிறையில் கழித்த அப்பாவிகளின் மன உளைச்சல்களுக் கும், ஒவ்வொரு நாளும் காற்றில் ஆடும் தூக்குக் கயிறு கண்களை உறுத்த, உறக்க மின்றி தவித்த அவர்களின் வயதான பெற்றோர்கள் அடைந்த வேதனை களுக்கும், வடித்த கண்ணீருக்கும் நீதி பிறழ்ந்த இந்நாட்டின் நீதி அமைப்பு என்ன பதில் சொல்லப்போகிறது?

Pin It

அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஒரு மொழியையும் அந்த மொழியுடன் தொடர்புடைய கலைச் செல்வங்களையும் அழித்துவிட்டால் அந்த இனம் வேரற்றுப் போகும் என்பது அவர்களுக்குத் தெளிவாகவே தெரியும். சமச்சீர் கல்வியைத் தடுக்க நினைத்த வர்கள் அவர்கள். அது முடியாமல் போனதும், ஆரம்பப் பள்ளி முதல் ஆங்கில வழிக்கல்வி என்ற கவர்ச்சிகர மான புதுப்பாதையில் தாய்மொழியை அழிக்கும் பணிகள் கச்சிதமாகத் தொடங் கப்பட்டுவிட்டன. அடுத்த இலக்கு, கலைச்செல்வங்கள்தான். அதன் ஒரு வெளிப்பாடுதான் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவது என்ற பெயரிலான அழிப்பு முயற்சி. இது ஒன்றும் இந்த அரசுக்குப் புதிதன்று.

                2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது ஜெயலலிதா அரசு, சென்னை கடற்கரையில் நின்ற கண்ணகி சிலையை அகற்றியது. நள்ளிரவில் ஏதோ ஒரு லாரி இடித்துத் தள்ளிவிட்டதாகவும், போக்கு வரத்துக்கு இடையூறாக இருப்பதால் அதனை நிறுவப்போவதில்லை என்றும் காரணம் சொன்னது. சோதிடப்பலன் களின் அடிப்படையில்தான் இந்தச் சிலை அகற்றம் என அப்போதே செய்தி கசிந்தது. அது அவர்களின் நம்பிக்கை. ஆனால், அகற்றப்பட்ட கண்ணகியைக் கொண்டுபோய் அருங்காட்சியகத்தில் கொடுங்கோலன் நீலன் சிலைக்குப் பக்கத்திலே கிடத்திவிட்டார்கள். ஏன் இந்த அவலம்?

                கண்ணகி கதாபாத்திரம் குறித்து பகுத்தறிவான-முற்போக்கான பார்வையில் மாறுபாடுகள் பல உண்டு. எனினும், தமிழின் ஐம்பெருங்காப் பியங்களில் ஒன்றான சிலப்பதி காரத்தின் நாயகி. மன்னனைப் பாடாமல் மக்களைப் பாடிய அந்தக் காப்பியத்தில் அன்றைய தமிழ் மக்களின் வரலாறு ஓரளவு பதிவாகி யிருக்கிறது. அன்றிருந்த பண்பாட்டின் நினைவுச் சின்னமாக கண்ணகிக்கு அறிஞர் அண்ணா முன்னின்று நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது கடற்கரையில் சிலை வைக்கப்பட்டது. அந்த பண்பாட்டுச் சின்னத்தை மறைமுகக் காரணங்கள் கூறி அகற்றியது அன்றைய ஜெயலலிதா அரசு. அதே ஜெயலலிதா அரசு, அதே கடற்கரையில் உள்ள நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் சிலையைப் போக்கு வரத்துக் காரணத்தைக் காட்டி அகற்ற ஆயத்தமாகிவிட்டது.

நவீனக் கலைவடிவமான திரைப்படத்தில் உலகப்புகழ் பெற்ற கலைஞர்களுக்கு ஈடாக முத்திரை பதித்த தமிழ்க் கலைஞர் சிவாஜி கணேசன். இன்றைய நடிகர்களுக்கும் அவர்தான் பல்கலைக்கழகம். முத்தமிழறிஞர் கலைஞர் வசனத்தில் சிவாஜி பேசிய வசனங்களைப் பேசித்தான் இன்றைய சூப்பர் ஸ்டார்களும் திரைப்பட வாய்ப்பைப் பெற்றனர். தமிழர்களின் கலை அடையாளமாக விளங்கும் சிவாஜி சிலையாக நிற்கலாமா? சினிமா நூற்றாண்டு விழாவில் தன்னைத் தவிர வேறு யாருக்கும் முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது என்று கண்ணும் கருத்து மாக இருந்த ஒரு முதலமைச்சர் ஆளும் மாநிலத்தில், சிவாஜி என்ற மகாகலைஞனை சிலை வடிப்பதே குற்றமல்லவா! அதனால் போக்கு வரத்துக்கு இடையூறு என்று காரணம் காட்டப்படுகிறது.

கடற்கரைச் சாலையில் சிவாஜி சிலையிலிருந்து வலப்புறமாகத் திரும்புவதற்கு வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள் என்றும், அந்த இடத்தில் கடந்த இரண்டாண்டுகளில் விபத்துகள் நடந்துள்ளன என்றும் அரசு சார்பில் நீதிமன்றத்தில் புள்ளிவிவரம் காட்டப்பட்டுள்ளது. சிவாஜி சிலை நிறுவப்பட்ட 2006ஆம் ஆண்டுக்கு முன்பாக அந்த இடத்தில் விபத்தே நடக்கவில்லையா? ஒவ்வோர் ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைச் சென்னை இளைஞர்கள் கொண்டாடுவது அந்த இடத்தில்தான். மறுநாள் காலையில் அந்த இடத்தில் மோட்டார் வாகன விபத்துகள் நடந்த செய்தி வருவது வழக்கம். சிவாஜி சிலை நிறுவப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இப்படிப் பட்ட விபத்துகள் நடந்துள்ளன என்பதே உண்மை. சிவாஜி சிலையிலிருந்து வலப்புறம் திரும்பினால் வருவது டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை. அண்மையில் அந்த சாலையில் உள்ள ஓர் உயரமான கட்டடத்திலிருந்து இளம்பெண் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டாரே, அதற்காகச் சென்னையில் உள்ள உயரமான கட்டடங்களையெல்லாம் இடித்துத் தள்ளிவிடலாமா?

பழனி அருகே நடந்த ஒரு சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகத் தொலைக்காட்சிகளில் செய்திகள் ஓடுகின்றன. இதற்காக, பழனியில் முருகன் அமர்ந்துள்ள மலையையே இடம் பெயர்த்துவிடவேண்டும் என்று ஆட்சி யாளர்கள் உத்தரவிடுவார்களா? நெடுஞ்சாலைகள் இன்று நான்கு வழி,-ஆறு வழிப் பாதைகளாக மாற்றப்பட்டும் தமிழகத்தில் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன. இதற்குக் காரணம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதுதான் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசு உடனடியாக டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு முன்வருமா?

கண்ணகி தமிழர்களின் இலக்கிய அடையாளம். சிவாஜி தமிழர்களின் கலை அடையாளம். இந்த இரண்டையும் சிதைக்கவேண்டும் என்பதுதான் இரண்டு சிலைகள் மீதான அரசாங்கத்தின் முடிவுக்குக் காரணம். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி, கண்ணகி சிலையும் சிவாஜி சிலையும் தம் பீடங்களில் கலைஞர் மு. கருணாநிதி என்ற பெயரைத் தாங்கி நிற்கின்றன. உண்மைக்காரணம், அதுதான்.. அதுவேதான். போக்குவரத்து என்பது போலிக்காரணமே.

Pin It

2004ஆம் ஆண்டு, காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன், கோயில் வளாகத்திலேயே பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்டார். அந்த வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின், புதுவை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 27.11.2013 அன்று வழங்கப்பட்ட அத்தீர்ப்பின்படி, குற்றம் சாற்றப்பெற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, சங்கரராமன் தன்னைத் தானே அரிவாளால் பலமுறை வெட்டிக் கொண்டு, தற்கொலை செய்துகொண்டு விட்டார் போலும் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

 காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரேம்குமார், ஜெயேந்திரர், விஜயேந்திரர் என்னும் இரண்டு சங்கரன்களின் தூண்டுதலில், அப்பு, ரவிசுப்பிரமணியம், கதிரவன் ஆகியோர் கூலிப்படைகளின் மூலம், சங்கரராமனைக் கொலை செய்துள்ளனர் என்று வழக்கைப் பதிவு செய்து, அதன் அடிப்படையில் 11.11.2004 அன்று, ஐதராபாத் மெஹபூப் நகரில் இருந்த சங்கராச்சாரியைக் கைது செய்தார். வழக்கு சூடு பிடித்தது. பிரேம்குமாரின் திறமையையும், துணிவையும் நாடே போற்றியது. அன்றைய ஜெயலலிதா அரசுக்கும் ஒரு பாராட்டுக் கிடைத்தது.

அந்த மாவட்டக் கண்காணிப்பாளர் பிரேம்குமாரைதான், இன்றைய புதுவை நீதிமன்றம் கண்டித்துள்ளது. அவர் விசாரணையில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் கூறிக் கண்டனம் செய்துள்ளது!

கைது செய்யப்பட்ட சங்கராச்சாரி, சிறையில் இருந்தபடி ஏராளமான ஒப்புதல் வாக்குமூலங்களை அள்ளிக் கொட்டினார். அவற்றை ஆதாரங்களுடன் நக்கீரன் வார இதழ் வெளியிட்டது.

ஆனாலும், காலப்போக்கில் வழக்கின் தன்மைகள் மாறின. கடந்த ஒன்பது ஆண்டுகளாக அந்த வழக்கு இழுத்தடிக்கப் பட்டது. இடையில் 2010ஆம் ஆண்டு, குற்றப்பத்திரிகை தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், கண்காணிப்பாளர் பிரேம்குமார் இறந்து போய்விட்டார்.

எல்லாவற்றையும் தாண்டி, ஒப்புதல் வாக்குமூலம் (அப்ரூவர்) அளித்த ரவி சுப்பிரமணியன் உட்படப் பலர் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டனர். நூற்றுக் கும் மேற்பட்ட அரசு சாட்சியங்களில் 83பேர் பிறழ் சாட்சிகளாகமாறிவிட்டனர். இதற்கிடையே, ஒரு நீதிபதியுடன், சங்கராச்சாரி பணப்பரிமாற்றம் குறித்துத் தொலைபேசியில் உரையாடல் நடத்தியதை ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆனால் அது குறித்த உண்மைகள் பிறகு சட்டென்று அமிழ்ந்து போயின.

இப்போது பிறழ் சாட்சி களின் அடிப்படையில்தான் தீர்ப்பு அமைந்துள்ளது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அவற்றுள்ளும், அரசுக்குச் சார்பாக மாறிய ஒரு பிறழ் சாட்சியை நீதிமன்றம் ஏற்கவில்லை. அரசு சாட்சிகள் சிலவற்றையும் கூட நீதிபதி ஏற்கவில்லை. அப்போது தலைமைக் காவலராக இருந்து, இப்போது சார்பு ஆய்வாளராக இருக்கும் கண்ணன் மற்றும் கதிரவன், சின்னா ஆகியோரின் சாட்சிகள், சங்கராச்சாரிக்கு எதிராக இருந்தன. அவையெல்லாம், காவல்துறையின் அச்சுறுத்தலின் விளைவுகளாக இருக்கலாம் என்று நீதிபதி கூறியுள்ளார்.

சங்கராச்சாரிக்கு ஆதரவாக மாறியுள்ள சாட்சிகள் எவரையும் நீதிமன்றம் சந்தேகப் படவில்லை. ஆசை காட்டியோ, அச்சுறுத்தியோ அவர்கள் மாற்றப்பட்டிருக்கக் கூடும் என்னும் ஐயத்திற்கே, மேதகு நீதிபதி அவர்கள் இட மளிக்கவில்லை.

சங்கரராமனின் மகன் ஆனந்த சர்மா, நாங்கள் அச்சுறுத்தப்பட்டதால்தான் பிறழ் சாட்சியாக மாறினோம் என்றும், கொலை யாளிகளை நீதிமன்றத்தில் அடையாளம் காட்ட அஞ்சினோம் என்றும் கூறுகின் றார். சங்கரராமனின் மனைவியிடம், “புருஷனை இழந்த மாதிரி, மகனையும் பலி குடுக்கணுமா?” என்று கேட்டுத் தொலைபேசியில் மிரட்டியதை ஆனந்த சர்மா ஒரு தொலைக்காட்சியில் கூறினார்.

இன்னொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், புகழ்வாய்ந்த, பெருமை மிகுந்த சங்கரமடத்தைப் பார்த்து ‘மிரட்டினார்கள்’ என்று எப்படிச் சொல்லலாம் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கேட்க, எதிரிலிருந்த அய்யநாதன் என்பவர், “தவறுதலாகச் சொல்லிவிட்டதாகவும், செல்வாக்குச் செலுத்தியுள்ளனர் என்று சொல்ல வந்து, மிரட்டினர் என்று சொல்லிவிட்டதாகவும் கூறிப் பதுங்கினார்.

ஏன்... சங்கர மடத்திற்கு மிரட்டல் பழக்கமில்லாத ஒன்றா? மாலி என்பவர் நடத்திய நாடகத்தின் இறுதிக்காட்சியில், தாழ்த்தப்பட்ட ஒருவர் சங்கராச்சாரியாக ஆக்கப்படுவதை இதே எஸ்.வி.சேகர் மூலம் கேள்விப்பட்டு, அந்த மாலியைச் சங்கரமடம் மிரட்டியதாக மாலியே குறிப்பிட்டுள்ளார். இவ்வளவுக்கும் அந்த மாலியும் பார்ப்பனர்தான்.

இப்போதிருக்கிற சங்கராச்சாரி, மடத்தின் மரபுகளை மதித்தவருமில்லை. கையில் உள்ள தண்டத்தைக் கீழே வைத்துவிட்டு, சங்கராச்சாரிகள் மடத்திற்கு வெளியிலேயே வரக்கூடாது என்பது மரபு. ஆனால் இவரோ, தண்டத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, யாரிடமும் சொல்லாமல், மடத்தை விட்டே போய்விட்டார். அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதே பெரும்பாடாகிவிட்டது. குடியரசுத் தலைவராக இருந்த வெங்கட்ராமன், தன் வேலைகளை யெல்லாம் ஒதுக்கிவிட்டு, ஓடிப்போனவரைத் தேடிப்பிடிப்பதிலேயே குறியாக இருந்தார். இறுதியில் நேபாளத்தில், கங்கைக் கரையோரம், ஒரு பெண்ணுடன் அவர் இருப்பதைக் கண்டறிந்தார்கள். அனைத்துச் சங்கரமட மரபுகளையும் மீறி, மீண்டும் அவர் சங்கர மட அதிபராக ஆக்கப்பட்டார்.

புகழ்பெற்ற தமிழ்ச் சிறுகதை, நாவல் எழுத்தாளர் அனுராதா ரமணன், தன்னிடம் அவர் எவ்வாறு தவறாக நடக்க முயன்றார் என்பதை ஓர் இதழிலேயே வெளிப்படையாக எழுதியிருந்தார்.

எனவே, இந்தப் பின்புலங்களை யெல்லாம் கூட, நீதிமன்றம் கணக்கில் கொண்டதா என்று தெரியவில்லை. பிறழ் சாட்சியங்களை மீறியும் பல உண்மையான தீர்ப்புகள் இதற்கு முன்னால் வழங்கப்பட்டுள்ளன. பிரேமானந்தா வழக்கிலும், ஏராளமான பிறழ் சாட்சியங்கள் இருந்தன. ஆனால் அவ்வழக்கின் நீதிபதி பானுமதி அவற்றைக் கணக்கில் கொள்ள மறுத்து, அவருக்குத் தண்டனை வழங்கினார்.

கொலைக்கான நோக்கம் தெளிவாக இல்லை என்றும் தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது. அதுவும் ஏற்கத்தக்கதாக இல்லை.

2001ஆம் ஆண்டிலிருந்தே, கொலையுண்ட சங்கரராமனுக்கும், சங்கராச்சாரிக்குமிடையே மோதல்கள் இருந்துள்ளன. கடல் தாண்டிச் சங்கராச்சாரிகள் போகக்கூடாது என்னும் மரபை மீறி, சீனாவிற்குச் செல்ல முயன்றார். அதனைச் சங்கரராமன் கடுமையாக எதிர்த்தார். சங்கரமடத்திற்குள் பெண்கள் நடமாட்டம் கூடுதலாக ஆவதையும் அவர் எதிர்த்தார். இவைபோன்ற அவரின் போக்குகள், சங்கராச்சாரியிடம் கடும் சினத்தை உருவாக்கின. இந்த மனிதன் தன் ‘சொந்த சுகங்களுக்கெல்லாம்’ தடையாய்க் குறுக்கே நிற்கிறானே என்று அவர் மனம் எண்ணி யிருக்கலாம்.

இவ்வழக்கில் தமிழக அரசு மேல்முறையீட்டிற்குச் செல்லுமா, அங்காவது சங்கரராமனைக் கொன்றவர்கள் கண்டறியப்பட்டுத் தண்டிக்கப்படுவார்களா என்பனவெல்லாம் கேள்விக்குறிகளாகவே உள்ளன.

Pin It

04.10.13 அன்று கரையான்பட்டி வன்னியர்கள், புதுப்பட்டி அருந்ததியர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய தில் அந்த மக்கள் உயிருக்கும், உடமை களுக்கும் ஆபத்து ஏற்பட்டதை உணர்ந்து ஊரைக் காலி செய்து அருகில் உள்ள சங்கால் பட்டி மலைப் பகுதியில் 300 குடும்பங்கள் குடியேறினார்கள். 21ஆம் நூற்றாண்டின் நவீன இந்தியாவில் சாதிக் கொடுமையில் ஒரு சமூகம் ஊரைக் காலி செய்து மலை யடிவாரங்களை நோக்கிச் சென்று விட்டால், இதைவிட இந்த ஆட்சியாளர் களுக்கும், இந்திய நாட்டிற்கும் கேவலம் வேறேதும் இல்லை. ஆனால் அரசும், அரசியல் கட்சிகளும் இம்மக்களின் கோரிக்கைகளை ஒரு போதும் செவிமடுக்க வில்லை. ஏன் மலை உச்சியில் குடியேறி னீர்கள் என்று எவரும் கேட்க வில்லை. நாதி யற்ற சமூகமாக காட்டிலேயே நான்கு நாட் கள் வாழ்ந்தனர்.

வீட்டின் முன் உட்கார்ந்து பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்த ஒரு தாழ்த்தப்பட்ட பெண் ணிடம், கரையான்பட்டி சாதி இந்து ஒருவன், மாராப்பு சேலையைப் பிடித்து இழுத்து முறை தவறி நடக்கிறான். அங்கே காவலுக்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அவன் மீது பெண்கள் மீதான தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3(1)11 என்கிற பிரிவில் வழக்குப் பதிவு செய்ய வேண்டிய கூடுதல் கண்காணிப் பாளர், 3(1) 10 என்கிற பிரிவில் வழக்குப் பதிவு செய்கிறார். இந்த வழக்கில் இவன் நிச்சயமாகச் சிறைக்குச் செல்லாமலே, பிணையில் வெளிவந்துவிடுவான். 3(1)11 பிரிவில் வழக்குப் பதிவு செய்தால் பாதிக் கப்பட்ட பெண்ணிற்கு அரசு வருவாய்த் துறை மூலம் இழப்பீட்டுத் தொகையாக 50,000 ரூபாய் கிடைக்கும். வன்கொடுமைப் பிரிவில், இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும். ஆனால் சாதாரண பிரிவில் வழக்குப் போடுவதன் மூலம் சாதி வெறியர் களைக் காவல்துறை காப்பாற்றுகிறது.

மூன்றாவது நாள் மலையடிவாரத்தில் மக்களோடு மக்களாக தமிழ்ப்புலிகள் களத்தில் நின்றனர். தோழர் சி. பேரறி வாளன், மா. முகிலரசன். பெரியார் மணி, இலக்கியன், அக்கினிபுத்திரன், விஜயக் குமார், போஸ், அழகர், தலித் போராளிகள் - கணேசன், சி.பி.எம். தீண்டாமை ஒழிப்பு முன்னணி எம்.ஆர். முத்துச்சாமி. சின்னக் கருப்பன். ஆதித்தமிழர் பேரவை விடுதலை வீரன் ஆகிய தோழர்கள் மக்கள் கோரிக் கைக்கு வலுச் சேர்த்தனர். பேச்சு வார்த்தைக்கு வந்த கூடுதல் கண்காணிப் பாளரைத் திருப்பி அனுப்பி னர். பின்னர் இரவு 7 மணிக்குத் துணை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், காவல் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், தலையாரி உட் பட அனைத்து அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். சாதி இந்துக்கள் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியாத அரசு கேந்திரம் தோல்வியால் தலை குணிந்து திரும்பிச் சென்றது.

மருத்துவர் ராமதாசு அந்த வட்டா ரத்தில் உள்ள அனைத்து சாதி இந்துக் களையெல்லாம் ஒன்று திரட்டி, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு எதிராகக் கூட்டமைப்பை ஏற்படுத்தினார். தமிழ்ப் புலிகளும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நிலக் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டதற்கு, காவல்துறை, சாதி இந்துக் கூட்டமைபைக் காரணம் காட்டி, அனுமதி தர மறுக்கிறது. ஆனால் தமிழ்ப்புலிகள் அமைப்பின் தோழர் பேரறிவாளன் முயற்சியால் இன்றைக்கு ஆணையத்திலிருந்து குழு அனுப்பப்பட்டு கரையான்பட்டி அட்டூழியத்தை ஆய்வு செய்துச் சென்றுள்ளார்கள்.

விரையில் சாதி இந்துக்களின் வெறித் தனத்திற்கு ஒரு முடிவு கிடைக்-கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த 24.11.2013 ஞாயிறு அன்று கரையான்பட்டி சாதி இந்துக்கள் நடுப்பட்டி அருந்ததியர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு, சுமார் 2000 இந்துக்கள் கோவிலிலே கூடியிருந்தனர். அதற்கான நேரம் பார்த்திருந்தவர்கள், அருந்ததியர் இளைஞர்கள் வன்னியப் பெண்களைக் கேலி செய்துவிட்டனர் என்ற பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி, நடுப்பட்டிக்குள் புகுந்து, பெண்களையும், குழந்தைகளையும், ஆண்களையும், முதியோர்களையும், ஆடு, மாடுகளையும் அடித்து வெளியே விரட்டினர். பிறகு, பணம், நகை, கனிணி, தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட அனைத்து வாழ்வாதாரப் பொருட்களை யும் கொள்ளையடித்தனர். பிறகு இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளைத் தீ வைத்துக்கொளுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை அடித்து நொறுக்கித் தரைமட்ட மாக்கிவிட்டனர். ஏற்கனவே காவலுக்கு நின்ற காவல்துறையினர் உயிருக்குப் பயந்து ஓடிவிட்டனர். இந்த மக்களைக் கொலை வெறியர்களிடமிருந்து காப்பாற்ற வரவில்லை. ஒரு சனநாயக நாட்டில் சாதியால் மக்களைக் கூறுபோடுகிற போக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது. அதற்குக் காரணமான ஆணிவேராக விளங்கும் இந்து மதத்தை இந்த மண்ணிலிருந்து அகற்ற நாம் தமிழர்களாய் ஒன்றுபட வேண்டியது உடனடித் தேவையாய் இருக்கிறது.

- நாகை திருவள்ளுவன், பொதுச்செயலாளர், தமிழ்ப்புலிகள்

Pin It

‘கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போன கதை’ என்ற ஒரு பழமொழியைச் சாதாரண மக்களும் சொல்வார்கள்.

தமிழக அரசுக்கு இது மிகவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.

நிர்வாகத் திறன் அற்று, மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும்போது அதை முந்தைய ஆட்சியர் மீதோ அன்றி நடுவண் ஆட்சி மீதோ பழியைப் போட்டு, இல்லாத வைகுந்தம் போகும் கதைபோல் இருக்கிறது தமிழக அரசின் செயல்.

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது தமிழகத்தில் மின்வெட்டு இருந்தது. அது இப்போது போலல்லாமல் சென்னை தவிர்த்துப் பிறமாவட்டங்களில் நான்கு மணிநேரம் மட்டும் மின்வெட்டு இருந்தது.

இது குறித்து ஜெயலலிதா, மைனாரிட்டி அரசின் கையாலாகாத்தன நிர்வாகம் என்று அறிக்கை வாசித்தார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நான்கே மாதங்களில் மின் வெட்டைச் சரி செய்வேன் என்று வேறு கூறினார்.

வந்தது அ.தி.மு.க. ஆட்சி. நடந்தது என்ன-?

கழக ஆட்சியின் போது, நான்கு மணிநேரம் என்பது, இரட்டிப்பு ஆகி, எட்டுமணி நேரம் மின்சாரம் காணாமல் போய்விட்டது. பிறகு 16 மணி நேர மின்வெட்டு வரையில் நிலைமை மிகவும் மோசமானது. இதனால் வேளாண்மை, தொழில், கல்வி என மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு கொஞ்சநஞ்சம் அன்று.

அப்போதும் தி.மு.க. அரசுதான் இதற்குக் காரணம் என்றார். இப்போது மீண்டும் எட்டு மணி நேரம் மின்வெட்டு தொடர்கிறது-.

என்னவோ, தெரியவில்லை, இம்முறை கலைஞரை விட்டுவிட்டு, மத்திய அரசுதான் தமிழக மின்வெட்டுக்குக் காரணம் என்று தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதிவிட்டார்.

அ.தி.மு.க. ஆட்சியேற்றபின் கொஞ்ச காலம் கடந்து, ஓரளவு மின்வெட்டு சரியானபோது, எல்லாம் தன் நிர்வாகத் திறமையே என்று பேசினார் முதல்வர் ஜெயலலிதா.

உண்மையில் தி.மு.க. ஆட்சியின் போது மின் உற்பத்திக்காகப் போட்ட திட்ட நடைமுறையே இடைக்காலத்தில் மின்சாரம் சற்றுச் சீராகக் காரணமாக இருந்தது என்ற உண்மையை ஜெயலலிதா மறைத்து விட்டார்.

வடசென்னை, நெய்வேலி அனல்மின் நிலையங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்து, மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதைச் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, மைனாரிட்டி அரசு, மத்திய அரசு என்று சொல்லிக்கொண்டு இருப்பது ஆட்சிக்கு அழகன்று.

நல்லது நடந்தால் நானே காரணம் என்பதும், அல்லவை என்றால் மற்றவர் மீது பழிபோடுவதும் நாணயமான செயல் அன்று.

“செயற்கரிய செய்வர் பெரியர், சிறியர்

செயற்கரிய செய்கலா தார்”

என்கிறார் வள்ளுவர்.

கலைஞர் சொல்வதைப் போல தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறவில்லை. மின் ‘பகை’ மாநிலமாகத்தான் ஆகியிருக்கிறது.

Pin It