161730_thumpஓர் அரசு தன் ஆட்சியில் தவறுகள் இழைக்குமானால், மக்களின் குமுறல் அதை வெளிப்படுத்தும். மக்களின் குமுறல்களை சட்டமன்றம் விவாதிக்கும். இரண்டையும் சேர்த்து ஊடகங்கள் நடப்புகளைப் பதிவு செய்யும். ஆனால், தமிழ்நாட்டில் இன்று மக்களின் குமுறல்கள் கேட்பார் அற்றுக் காற்றில் கரைந்து கொண்டிருக்கின்றன.சட்டமன்றத்தில் எந்த விவாதமும் நடப்பதில்லை. முதலமைச்சரை ஆளும் கட்சி மற்றும் தோழமைக் கட்சியின் உறுப்பினர்கள் பாராட்டிப் பேசுவது இயல்புதான். ஆனாலும், பாராட்டுகள் மட்டுமே சட்டமன்ற நடவடிக்கைகளாக மாறிக் கொண்டிருக்கின்ற அவலத்தை இன்று நாம் பார்க்கின்றோம். எந்த ஒரு சட்டமுன்வடிவும், அந்தந்தத் துறை அமைச்சர்களால் முன்மொழியப் படும். பிறகு அது குறித்த விவாதங்கள் நடைபெறும். இறுதியில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் இருந்தாலும் வாக்கெடுப்பின் மூலம் அவை நிறைவேற்றப்படும். ஆனால், அமைச்சர்களுக்கு வேலையே இல்லாமல், சிறப்பு விதியான 110இன் கீழ் எல்லா அறிவிப்புகளையும் முதலமைச்சரே இப்போது வெளியிடுகின்றார். 110ஆம் விதியின் கீழ் அறிவிக்கப்படும் எதன் மீதும் சட்டமன்றம் விவாதம் நடத்த முடியாது. எனவே விவாதமே இல்லாமல் சட்டமன்றம் நடைபெறுகிறது.

மக்களின் அவலங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பேச எழுந்தால், உடனே கூக்குரல் எழுப்பி அவர்களை அடக்க முயல்கின்றனர். அவைத்தலைவரோ அவர்களை உடனடியாக வெளியேற்றி விடுகின்றார். தினந்தோறும் சட்டமன்றத்தின் போக்கு இதுவாகத்தான் உள்ளது. நான்காம் படை (Fourth Estate) என்று கூறப்படும் ஊடகங்களோ எதிர்க்கட்சிகள் பற்றியே, குறிப்பாகத் தி.மு.க. பற்றியே துருவித் துருவி எழுதிக்கொண்டிருக்கின்றன. எனவே சட்டமன்றங்களிலும் விவாதம் இல்லை, ஊடகங்களிலும் விவாதம் இல்லை. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னர்களின் ஆட்சி தொடர்கிறது.

Dr20Ambedkarஅம்பேத்கரின் கோட்பாடுகளை ஏற்றுச் சமூக நீதியை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று, பேரணியும், சென்னை மயிலாப்பூரில் பொதுக்கூட்டமும் நடத்தத் திட்டமிட்டது.பேரணியின் பெயர் கூட மக்கள் ஒற்றுமைப் பேரணி என்றே அறிவிக்கப் பட்டிருந்தது. அதற்குத் தமிழகஅரசு தடை விதிக்கவே, வேறு வழியின்றிச் சிறுத்தைகள் நீதி மன்றத்தை நாடினர். நீதிமன்றம் அனுமதி அளித்தது. பொறுக்கமுடியவில்லை அம்மையாரால்.

உடனே  தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்ற அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அம்பேத்கர் விழாவைத் தடுப்பதில் அரசுக்கு அப்படி என்ன ஆர்வம் என்பது விளங்கவில்லை.

அரசு வழக்கறிஞர் சோமயாஜுலு திறந்த நீதிமன்றத்தில், கொடுமையான வாதம் ஒன்றினை முன்வைத்தார். மயிலாப்பூரில் வாழும் மக்களும், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கக்கூடிய மக்களும் வேறு வேறு வகையினர் என்பதால், அவர்களுக்குள் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நிகழ்வுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

நம் நாட்டைவிட்டுத் தீண்டாமை இன்னும் வெளியேறவில்லை என்பதும், அந்நிலைக்கு இன்றைய தமிழக அரசே ஆதரவாக உள்ளது என்பதும் அப்போது புலப்பட்டது. நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நீதிபதியின் அனுமதி பெற்று, சேரி மக்களாகிய நாங்கள் மயிலாப்பூருக்குள் கால் வைக்கக் கூடாதென்று, அரசு வழக்கறிஞர் கூறுகின்றார், இந்த மேன்மைமிகு நீதிமன்றத்தின் கருத்தும் அதுதானா என்று கேட்டார். அதன்பிறகு, மாண்பமை நீதிபதிகள் மயிலாப்பூரிலேயே கூட்டம் நடத்த அனுமதி வழங்கினர்.

அன்றாடம் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவைப் புகழ்ந்து கொண்டிருக்கும் செ.கு. தமிழரசன் போன்றவர்கள் இதுகுறித் தெல்லாம் வாய் திறப்பதில்லை.

கலைஞரின் ஆட்சியில், அடையாறு பகுதியில் அமைக்கப்பட்ட பூங்காவிற்கு, தொல்காப்பிய பூங்கா என்று பெயரிடப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு, அந்தப் பெயர் நீக்கப்பட்டு, அடையாறு பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கலைஞரின் பெயரைக் கேட்டால் அம்மையாருக்குக் கடுங்கோபம் வரும் என்பதை நாம் அறிவோம். ஆனால், தொல்காப்பியர் மீது கூட, அ.தி.மு.க. அரசுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. தொல்காப்பியர் என்ன தி.மு.க.வின் மாவட்டச் செயலாளரா? தமிழ்ச் சான்றோர்கள், தமிழறிஞர்கள், தமிழ்ப் புலவர்களின் பெயர்களே இனிமேல் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாதா?

தமிழ்த்தேசியம், தமிழ்த்தேசியம் என்று ஒவ்வொரு மேடையிலும் உரக்க முழக்கமிடும் தலைவர்கள் எவரும் இதுகுறித்தெல்லாம் வாய் திறப்பதே இல்லை...என்ன காரணம்?

அண்மையில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த கூட்டுறவுத் தேர்தல்கள் சட்டமீறல்களுக்கும், வன்முறைகளுக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக நடந்து முடிந்துள்ளன. சி.பி.எம். கட்சியாலேயே பொறுக்க முடியாமல் போகிற அளவுக்கு அவை நடந்துள்ளன என்பதால்தான், அக்கட்சியின் உறுப்பினர்கள், சனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் அரசின் நடவடிக்கை களைக் கண்டிப்பதாய் மார்புப் பட்டை (பேட்ஜ்) அணிந்து சட்டமன்றம் வந்தனர்.

கொள்கை அடிப்படையில் நமக்கு எதிரான நிலையில் உள்ளது என்பது மட்டுமல்லாமல், நலத்திட்டங்களிலும், நிர்வாகத்திலும் கூட ஜெயலலிதா அரசு மிகவும் பின்தங்கியே உள்ளது.

மலிவு விலை உணவகம் என்று மார்தட்டிச் சொல்லப்படுகின்றது. ஆனால் அரசின் பணம் வேறு வழியில் வீணாகின்றது. இட்லி விலை ஒரு ரூபாய்தான். ஆனால் அதற்குச் செய்யப்படும் விளம்பரத் தொகையோ பல லட்சங்களைத் தொடுகின்றது.

காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஒரகடம் என்னும் ஓர் ஊருக்கு முதலமைச்சர் யஹலிகாப்டரில் பயணம் செய்கின்றார். மீனம்பாக்கம் வரை தன் மகிழுந்தில் வரும் அவர், அங்கிருந்து 20 கி.மீ.க்கும் குறைவான தொலைவில் உள்ள ஒரகடத்திற்கு வான் பயணத்தை மேற்கொள்கின்றார். இப்படி அரசுப் பணம் விரயமாகின்றது.

ஆனால், ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணைக்குத் தட்டுப்பாடு காணப்படுகின்றது. ரே­ன் கடைகளில், எட்டு லிட்டருக்குப் பதிலாக, இனிமேல் நான்கு லிட்டர்தான் வழங்கப்படும் என அறிவிப்பு வந்துள்ளது.

மாணவர்கள் தேர்வுகளில் எழுதிய விடைத்தாள்கள் சில தண்டவாளத்திற்கு அருகில் சிதைந்த நிலையில் கிடக்கின்றன. இன்னும் பல விடைத்தாள்கள் எங்கே போயின என்றே தெரியவில்லை.

ஒரு மருத்துவமனைக்குள் நுழையும் போது செருப்புகளைக் கழற்றிவிட்டு வருமாறு கோரிக்கை வைத்த மருத்துவர் ஒருவர், பொய்யான குற்றச்சாற்றுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார். அந்த மருத்துவரின் பெயர் கருணாநிதி. ஒரு வேளை அந்தப் பெயரே கூட, இந்த ஆட்சியில் தண்டனைக்கு உரியதாக இருக்கிறதோ என்னவோ?

மின்வெட்டு மேலும் மேலும் மோசமாகிக் கொண்டுள்ளது. கொலைகளும், கொள்ளைகளும் அன்றாடக் காட்சிகள் ஆகிவிட்டன.

தமிழ்நாட்டில் ஓர் அரசு இருக்கிறதா, அது இயங்குகிறதா என்பதே உறுதியாய்த் தெரியவில்லை.

Pin It