உத்திரப்பிரதேச மாநிலத்தில், அதிரடித் தீர்ப்புகளுக்குப் பெயர் பெற்ற அலகாபாத் உயர்நீதி மன்றம் அண்மையில் மீண்டும் அப்படி ஒரு இடைக்காலத் தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதிகள் உமர்நாத் சிங், மகேந்திரதயாள் ஆகிய இருவரும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் சாதி அமைப்புகள் நடத்தும் பேரணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்திருக்கின்றனர். இது தொடர்பாக தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கின் மீது அவர் கள் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.

இதன் அடுத்த கட்ட விசாரணை ஜுலை 25ஆம் தேதிக் குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன், அம்மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான, காங்கிரஸ், பகுஜன்சமாஜ், சமாஜ் வாடி, பாரதிய ஜனதா ஆகியவற்றிற்கு நீதிபதிகள் அறிவிக்கை ஒன்றை அனுப்பி, ‘சாதி அமைப்புகள் நடத்தும் பேரணிகளுக்கு ஏன் நிரந்தரத் தடை விதிக்கக்கூடாது?’ என்று கேட்டு, அக்கட் சிகளின் விரிவான விளக்கத்தைக் கேட்டிருக்கிறார்கள். கட்சி களின் விளக்கத்தையும், வரப்போகின்ற தீர்ப்பையும் நாம் அறிந்துகொள்ள 25ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

இதற்கிடையில், இந்த இடைக்காலத் தீர்ப்பு பற்றி பல்வேறு விவாதங்களும், கருத்துகளும் முன் வைக்கப்படுகின்றன. ‘இந்தத் தடை ஜனநாயகத்திற்கு எதிரானது’ என்கிறார்கள் பலர். சாதியைவிட மிகப்பெரிய எதிரி ஜனநாயகத்திற்கு இருக்க முடி யாது. எனவே இதை ஜனநாயகத்திற்கு எதிரான தடை என்று சொல்வது சரியானதன்று. சமூகத்தின் புற்றுநோயான சாதிக்கு எதிரானது. இந்த இடைக்காலத் தீர்ப்பினை நாம் வரவேற் கிறோம். இந்தத் தடை நிரந்தரமாக்கப்பட்டால் இன்னும் நல்லது என்றும் கருதுகிறோம்.

அதே நேரத்தில், ‘சாதி அமைப்புகளின் பேரணிகளுக்குத் தடை’ என்று பொதுவாகச் சொல்லப்பட்டிருப்பதால், இந்தத் தீர்ப்பு குறித்து நமக்குச் சில கேள்விகளும் இருக்கின்றன. இங்கே ஒடுக்குகின்ற சாதி, ஒடுக்கப்படுகின்ற சாதி என்று முற்றிலும் எதிரான இரண்டு நிலைகள் இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதில், ஒடுக்குகின்ற சாதி அமைப்புகள், மேலும், மேலும் தங்களுடைய ஆதிக்க சாதி பலத்தைக் காட்டுவதற் காகவும், தங்களுக்குக் கீழாக இருப்பவர்கள் என்று அவர்கள் கருதிக்கொண்டிருக்கும் பிற சாதியினருக்கு மறைமுகமான அச்சுறுத்தலை விடுப்பதற்காகவுமே பேரணிகளையும், மாநாடு களையும் நடத்துகின்றன. இதனால், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அனைவரும் அறிவோம்.

அதற்கு, சென்னை மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் பெருவிழா மாநாடும், அதன் தொடர்ச்சியாக நடந்த தருமபுரி வன்கொடுமைக் கலவரங்களும், மரக்காணம் தாக்குதலும், இளவரசனின் படுகொலையும் சான்றுகளாக இருக்கின்றன. சமூகத்தின் ஒரு பகுதியினரை அடக்கி ஒடுக்குவதற்கும், அடித்து நொறுக்குவதற்கும் தூண்டுதலாக இருக்கக் கூடிய, இப்படிப்பட்ட, சாதிய அமைப்புகளின் பேரணிகள் மற்றும் மாநாடுகளுக்குக் கண்டிப்பாகத் தடை விதித்தே தீர வேண்டும்!

அதே சமயம், ஆண்டாண்டு காலமாக சாதிய ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகி, சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள மக்கள், தங்களின் உரிமைகளை மீட்டெடுக்க அமைப்பாக ஒன்றுபட்டுப் போராடும்போது நடத்தப்படும் பேரணிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என்றால், இதுதான் ஜனநாயகத்திற்கு எதிரானது. அடிப்பவன் கத்துவதற்கும், அடி வாங்குபவன் கத்துவதற்கும் வேறுபாடு இருக்கிறது. அடிபடுபவனை மேலும் அச்சுறுத்துவதற்காக இவன் கத்துகிறான். வலி தாங்கமுடியாமல் அவன் கதறுகிறான். மிரட்டுவதற்கும் அழுவதற்கும் உள்ள வேறுபாட்டை உணராமல், பொதுவாக சத்தம் எழுப்புவதற்கே தடை என்று சொன்னால், அது எப்படிச் சரியான நீதியாக இருக்க முடியும்?

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதி அமைப்புகளுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். இப்போதுதான் அவர்கள் தங்களுடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கி யிருக்கிறார்கள். தங்களின் சுயமரியாதை வாழ்வுக்காகத்தான் அவர்கள் வீதியில் வந்து போராடுகிறார்களே தவிர, தங்கள் சாதி பலத்தைக் காட்டி அச்சுறுத்துவதற்காக அல்ல.

கையால் மலம் அள்ளும் முறையை ஒழிக்க வேண்டும் என்று அருந்ததியர் அமைப்புகள் பேரணி நடத்துவதும், 27சதவீத இடஒதுக்கீடு கூடாது என்று ஆதிக்க சாதிகள் பேரணி நடத்துவதும் ஒன்றாகி விடுமா? முன்னது சமூகநீதிக்கான முழக்கம், பின்னது மனுநீதியின் குரல். இரண்டையும் மனிதநேயப் பார்வையோடு பகுத்துப்பார்த்து இறுதித் தீர்ப்பினை நீதிபதிகள் உமர்நாத் சிங்கும், மகேந்திரதயாளும் வழங்க வேண்டும் என்பது சமத்துவம் விரும்பும் ஜனநாயக சக்திகளின் எதிர்பார்ப்பு.

சாதிக்கு எதிராக, சமூகநீதிக்கு வலுசேர்க்கும் வகையில் அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமையுமானால், அத்தீர்ப்பு இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக அமையும்.

Pin It