இராஜீவ் காந்தி கொலை வழக்கின் விசாரணையில் ஜெயின் கமிசன் சுட்டிக் காட்டியுள்ள சுப்பிரமணிய சாமி, சந்திராசாமி உள்ளிட்ட சிலர் விசாரிக்கப்படாமல், விசாரணை முழுமை பெறாத நிலையில் உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப் பட்டுத் தூக்குமர நிழலில் 20 ஆண்டுகளாக வாடிக் கொண்டிருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை நீக்கக் கோரி நாடே கொதித்தெழுந்தது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ஓர் இடைக்காலத் தடை  இப்பொழுது கிடைத்திருக்கிறது என்றாலும் தொடர் நடவடிக்கைகள், நீதிமன்ற நடவடிக் கைகள் இனியும் தொடரவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக, மரணதண்டனை எதிர்ப்புக் கூட்டமைப்பு என்ற அமைப்பு, 22.09.2011 முதல் சென்னை கோயம்பேட்டில் தொடர் பட்டினிப் போராட்டத்தை நடத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பு பங்கெடுத்துக் கொண்டு, பட்டினிப் போரைத் தொடர்ந்து  முன்னெடுத்துச் செல்கின்றன. அந்த வகையில் 06.10.2011 அன்று திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஒரு நாள் அடையாளப் பட்டினிப் போரை நடத்தியது.

இப்பட்டினிப் போராட்டத்திற்குப் பேரவையின் பொதுச்செயலாளர் தோழர் சுப. வீரபாண்டியன் தலைமை ஏற்றார். தொடக்கத்தில் மூவர் மரணதண்டனைக்கு எதிராக தன்னையே எரித்துக்கொண்ட, ஈகைச் செல்வி செங்கொடியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து ஈகச் சுடர் ஏற்றப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதை அடுத்து, அரங்க நுழைவாயிலில் தோழர்கள் திரண்டு நின்று மரணதண்டனைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து, பட்டினிப் போராட்டம் தொடங்கியது. சென்னை மாவட்டத் தலைவர் தோழர் அ.இல. சிந்தா பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். தோழர்கள் மரணதண்டனைக்கு எதிராகவும், ஏன் மரணதண்டனை கூடாது என்பது பற்றியும் பேசினார்கள். நிறைவாகப் பேசிய தோழர் சுப. வீரபாண்டியன் மரணதண்டனையின் வரலாறு, அதன் வடிவங்கள், அவைகளின் கொடுமைகளை விளக்கிச் சொல்லி, மரணதண்டனை என்ற மனிதநேயமற்ற தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்றும், அது நீண்ட போராட்டத்திற்கு உரியது என்பதால், முதலில் தற்போது தூக்குமர நிழலில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் விடுதலை செய்யவேண்டும் என்றும் விளக்கமாக எடுத்துரைத்தார்.

இப்பட்டினிப் போராட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், பொருளாளர் எழில்.இளங்கோவன், துணைப் பொதுச்செயலாளர் ஆ. சிங்கராயர், தலைமை நிலையச் செயலாளர் மு. குமரன், மாநில இளைஞரணிச் செயலாளர் மகிழன், மத்திய சென்னைச் செயலாளர் எட்வின், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் சூர்யா, செயலாளர் வளவன், கருஞ்சட்டைத் தமிழர் இதழின் துணை ஆசிரியர் இரா.உமா உள்பட பேரவைத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

நிறைவாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி செளந்திரராசன் பழச்சாறு கொடுத்து பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

Pin It