உலக நாடுகள் நடுவில் போர்க்குற்ற நாடாக சிங்கள இலங்கை நாடு காட்சி அளிக்கிறது.

அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அவையில் இது குறித்து விசாரிக்கக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதை இலங்கை எதிர்த்து வருகிறது. தன்னைத் தானே விசாரித்துக் கொள்வதாக நாடகமும் ஆடுகிறது.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பிரதமர் டி.எம். ஜெயவர்தனே, தமிழகத்தின் கேரள எல்லைப் பகுதிகளில் விடுதலைப்புலிகள் மூன்று முகாம்கள் அமைத்து, இலங்கையில் உள்நாட்டுப் போரை ஏற்படுத்தவும், இந்தியத் தலைவர்களைக் கொல்லவும் புலிகள் முயல்வதாகக் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவை இருப்பிடமாகக் கொண்ட வி.ருத்திரகுமாரன், நார்வேயைச் சேர்ந்த நெடியவன், வினாயகம், புலேந்திரன் மாஸ்டரின் பங்களிப்புடன் தமிழகத்தில் புலிகளின் பயிற்சி முகாம்கள் உள்ளன என்ற இலங்கைப் பிரமரின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்து, நிராகரித்தார் தமிழக டி.ஜி.பி.லத்திகா சரண்.

இந்திய வெளியுறவுத் துறையும் இலங்கைப் பிரதமரின் குற்றச் சாட்டை மறுத்திருக்கிறது.

டி.எம்.ஜெயவர்தனேவின் இதே குற்றச்சாட்டுக்கு அதே நாடாளுமன்றத்தில் பதில் சொன்ன இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, இந்தியாவில் விடுதலைப் புலிகள் முகாம்கள் இருப்பதாக பிரதமர் சொல்வது, இலங்கையில் அமலில் இருக்கும் அவசரச் சட்டத்தை நியாயப்படுத்தவே அன்றி வேறில்லை என்று கூறியிருக்கிறார்.

ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவித்த பின், விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று அறிவித்த இலங்கை, இப்பொழுது தமிழகத்தில் புலிகளின் பயிற்சி முகாம் என்று சொல்வது ஒரு நாடகம், ஏமாற்று வேலை.

இதன் மூலம் இலங்கையில் நெருக்கடி நிலையை மேலும் இறுக்கி, அங்கு வாழ்விழந்து வாடும் தமிழர்களை முற்றாகவே ஒழித்தழிக்கப் பார்க்கிறது இலங்கைச் சிங்கள அரசு.

இலங்கையின் பிதற்றலை உலகம் ஏற்காது ; இராஜபக்சேவைப் போர்க்குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டிக்காமலும் விடாது !

Pin It