தோண்டத் தோண்டத் தங்கம் ! எங்கே? கோலார் தங்க வயலிலா? இல்லை. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில். இதுவரை குத்துமதிப்பாகக் கணக்கிடப்பட்ட அந்தச் சொத்துக்களின் மதிப்பு 5 இலட்சம் கோடி இருக்கும் எனச் செய்திகள் சொல்கின்றன. இத்தனை பெரிய செல்வக் குவியல் உலகின் வேறு எங்குமே கிடையாது என்ற சிறப்புச் செய்தி வேறு உலவுகிறது. பத்மநாபரைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கும், சிதம்பரம் நடராசருக்கும் சோதனை தொடரும் போலத் தெரிகிறது. கோயில்களில் மட்டுமா, சாமியார்களின் மடங்களிலும், கட்டுக்கட்டாகப் பணமும், கட்டி கட்டியாகத் தங்கமும் கொட்டிக் கிடந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றிரண்டு மடங்கள் இப்போதுதான் அம்ப லப்பட்டு நிற்கின்றன.

கோயில்கள் வழிபாட் டுக்குரிய இடங்கள் என்ற கருத்து கேள்விக்குரியதாக ஆகியிருக்கிறது. மேலை நாடுகளில், அரசுக்கும், தேவா லயத்திற்கும் அதாவது அங்குள்ள மத நிறுவனத் தலைமைக்கும் இடையே அதிகாரப் போட்டி நடந்ததுண்டே தவிர, யாரிடம் அதிக சொத்து இருக்கிறது என்னும் மோதல் ஏற்பட்டதில்லை. ஆனால் நம்நாட்டில், கோயில்களில் சொத்துக்க ளைக் குவிப்பதன் மூலம், மேலாதிக்க முதலாளித்துவத்தை உருவாக்கி, அதன் மூலம் அதிகாரத்தின் உச்சியில் அமர்ந்து கொள்கின்ற அதிகார மையங்களாகவும் மத நிறுவனங்கள், குறிப்பாக இந்து மத அமைப்புகள் உருவெடுத்து இருக்கின்றன. கோயில்களும் முதலாளித்துவத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன.

தந்தை பெரியார் அவர்கள் மூன்று விதமான முதலாளித்துவத்தைப் பற்றிச் சொல்லுவார். ஐரோப்பா போன்ற நாடுகளின் முதலாளித்துவம் என்பது மூலதனத்தைப் போட்டுத் தொழில் தொடங்கி, தொழிலா ளிகளின் உழைப்பைச் சுரண்டுவது. இங்கே ஒரு முதலாளித்துவம் உருவாகியிருக்கிறது. மூலதனம் எதுவும் போடாமல், இருந்த இடத்திலிருந்து அசையாமல் சுரண்டிக் கொழுக்கின்ற முதலாளித்துவம். அதன் தோற்றம் கோயில்களும், அதைக் கைப்பற்றி வைத்தி ருப்பவர்களும்.

ஐயா சொன்னது போல, கோயில்கள் எப்போதும் பணம் சம்பாதிக்கின்ற மையங்களாகவே இருந்திருக்கின்றன. இருக்கின்றன. பணக்காரர் களுக்கு உடனடி, நேரடி தரிசனம். ஏழைகளுக்கு நாள் கணக்கில் காத்துக்கிடந்தபின் தரிசனம்(தர்ம தரிசனம்). கடவுகளைப் பார்ப்பதற்கே பணம்தான் முதலில் செல்கிறது. கடவுளுக்கும் பக்தர்களுக்கும் குறுக்கே நின்று மணியடிக்கிற அர்ச்சகரின் தட்டில் விழுகின்ற காணிக்கையின் அளவைப் பொறுத்தே அங்கே மரியாதை கிடைக்கிறது. பக்தர்கள் காசு கொடுத்து தேங்காய் பழம் வாங்கிக்கொண்டு போனால், அதை சாமிக்கு உடைத்து அர்ச்சனை செய்வதற்கு, பணம் கொடுத்து அனுமதிச் சீட்டு வாங்கவேண்டும். இவை போதென்று, சிறப்புப் பிரார்த்தனைகள், யாகம், அபிஷேகம், பரிகார பூசைகள் என்று தனி ஆவர்த்தனங்கள் வேறு கோயிலின் கல்லாவை நிரப்புகின்றன.

சக்தியுள்ள சாமி, அனைத்து உயிர்களுக்கும் படியளப்பவர், தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு, அவரல்லவா வாரி வழங்க வேண்டும். இடைத் தரகர்களும், அவர்களுடைய கமிசன் போக மீதியைப் பக்தர்களுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? வியர்வை சிந்தி உழைத்த பணம், உலகளந்த பெருமாள்களின் பேரால் சுரண்டப் படுகிறது. இங்கே உண்டியல் இல்லாத கோயில் இருக்கிறதா?

சைவக் கோயில்களை விட, வைணவக் கோயில்கள்தான் செழிப்பாக இருக்கின்றன. ஒருவேளை,  அவர்களின் கடவுள்கள், பட்டு, பீதாம்பரங்களுடன், மாட மாளிகைகள் கொண்ட வைகுண்டத்தில் வாசம் செய்வதால், ஓய்வு எடுக்கும் பூலோகத்திலும் அந்த வசதிகள் தேவைப்படுகிறது போலும்! சைவர்களின் தலைமைக் கடவுள், பனி மலைகளும், கற்பாறைகளும் சூழ்ந்த கைலாயத்தில் வசிப்பவர் என்பதால் இந்த வேறுபாடு இருக்கக் கூடும்.

சைவக் கோயில்கள்தான் சொல்லிக்கொள்ளும் படி செழிப்பாக இல்லையே தவிர, சைவ மடங் களான ஆதீனங்கள் பெரும் பணம் படைத்தவை களாகத்தான் இருக்கின்றன. திருவாவடுதுறை ஆதினத்தின் சொத்து மதிப்புதான் இந்தியாவிலேயே மிகப்பெரியது என்று சொல்லப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் தருமபுர ஆதீனம் இருக்கிறது.

குன்றக்குடி ஆதீனத்திற்கும் சொத்துக்கள் உண்டு என்றாலும், சமூக சிந்தனை கொண்ட பெரியவர் அங்கே இருந்த காரணத்தால் மற்ற ஆதீனங்களிடம் இருந்து சற்று மாறுபட்டிருக்கிறது. மக்களோடும், அவர்களின் அன்றாட வாழ்க்கை யோடும் நெருக்கம் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். இயற்கை வேளாண்மையில் குன்றக்குடி ஆதீனம் அக்கறை செலுத்தி வருகிறது. அதற்கான ஆய்வுகளுக்காக மிகப்பெரிய அறிவியல் பூங்காவை ஏற்படுத்தியிருக்கிறது.

மற்ற வைணவ மடங்களாகட்டும், சைவ மடங்களான ஆதீனங்களாகட்டும் மக்களை ஆதிக்கம் செலுத்துகின்ற பேரரசுகளைப் போலத்தான் நடந்து கொள்கின்றன. உழைக்கின்ற மக்கள் நடைபாதை யில் வாழ்கின்றனர். சாமியார் மடங்களுக்கோ, அரண்மனை போன்ற கட்டிடங்கள். சம்சாரிகள் ஒண்டுக் குடித்தனத்தில் அவதிப்படுகின்றனர். சாமியார்களுக்கு பஞ்சு மெத்தைக் கட்டில்களோடு, குளிரூட்டப்பட்ட தனி அறை. அது ஏன் என்று நித்தியானந்தா விவகாரத்திற்குப் பிறகுதான் விளங்குகிறது.

எதைக் கொண்டு வந்தோம் கொண்டு போவதற்கு என்ற உபதேசங்களும், பத்மநாபர் கோயிலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்வக் குவியல்களும் எதிர் எதிர் கோணங்களைக் காட்டுகின்றன.  கருத்துமுதல் வாதத்தின் மூலம் விதைக்கப்பட்ட கடவுள் நம்பிக்கை, பொருள்முதல் வாதத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

சுவிஸ் வங்கியில் இருக் கின்ற கருப்புப் பணத்தை விட, திருப்பதி ஏழுமலையானி டம் தான் அதிகமான கருப்புப் பணம் கொட்டிக்கிடக்கிறது. கோயில் உண்டி யல்களில் கொண்டு வந்து கொட்டப்படுகின்ற பணம் அத்தனையும் கணக்கில் வராத கருப்புப் பணம்தான். இப்போது திருவனந்தபுரம் கோயிலில் வெளிக் கொண்டுவரப் பட்ட பணம் அந்தக் காலத்துக் கருப்புப் பணம் அவ்வளவுதான். வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தைக் கொண்டுவந்து மக்கள் நலனுக்குச் செலவிட வேண்டும் என்று சொல்லி ராம்தேவ்கள் உண்ணாவிரம் இருந்தபோது ஆதரித்த கூட்டத் தார் , இந்தக் கருப்புப் பணத்தை மட்டும் கோயிலுக்குள்ளேயே கொண்டு செலுத்திவிடத் துடிக்கின்றனர்.

பத்பநாபசாமி கோயிலில் கிடைத்தி ருக்கும் சொத்துக்கள், அந்த சாமிக்கே சொந்தம் என்று கேரள அரசு அறிவித்தி ருக்கிறது. ஏதோ சாமிகளும், சாமியார்களும் உழைத்துச் சேர்த்ததைப் போல. அந்தப் பொற்குவியலில் பழங்காலத் தங்க நாணயங்கள் இருக்கின்றன. பழைய வரலாற்றுச் சான்றுகளான அவற்றைக் கோயிலில் வைத்துப் பாதுகாக்க வேண்டுமே தவிர, அரசு கருவூலத்தில் சேர்க்கக் கூடாது என்று தினமணி தலையங்கம் சொல்கிறது. நமக்கும் சில கேள்விகள் இருக்கின்றன.

கடவுள் பொதுவானவர் என்றால், அவருக்கு எதற்கு தனிச்சொத்து? நல்ல கடவுள் என்றால், தன்னுடைய பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுக்கத்தானே விரும்புவார்? நாமும் அதைத்தான் சொல்கிறோம். அந்தச் சொத்துக்களை எல்லாம் மக்கள் நலனுக்காகச் செலவிட வேண்டும். குறைந்தபட்சம் அந்தக் கோயில் இருக்கின்ற கேரள மக்களுக்காவது அது பயன்படட்டும். சர்வதேவ வங்கியில் வட்டிக்குக் கடன் வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில், இத்தனை பெரிய செல்வத்தை  ஒன்றுக்கும் உதவாமல், நிலத்தடியில் புதைத்து வைத்துவிட வேண்டும் என்பது அறிவுடைமையான செயலாகுமா?

இந்தக் கோடிகளைப் பாதுகாக்க இன்னும் சில கோடிகளை ஒதுக்கி இருக்கிறது அரசு. கிழவி தண்ணிக்குப்போக எட்டாளு மெனக்கெட்டு என்று கிராமப்பகுதியில் ஒரு சொலவடை சொல்வார்களே அப்படித்தான் இருக்கிறது இவர்களின் செயல். பழங்கால நாணயங்கள், வரலாற்றுச் சான்றுகளைக் காட்டுகின்ற நாணயங்கள், பொருள்களை மட்டும் தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து விட்டு, பிற செல்வங்களை மக்கள் நலனுக்குப் பயன்படுத்த வேண்டும்.  நீதியரசர் வி.கிருஷ்ணய்யர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி போன்றோரும் இதைத்தான் வலியுறுத்தி இருக்கின்றனர். மக்கள் நலம் விரும்பும் அனைவரின் கருத்தும் இதுவாகத் தான் இருக்க முடியும்.

Pin It