சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் தலித் மக்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைகளையும், தடைகளையும் உடைத்துக் கொண்டு எப்பொழுதெல்லாம் முன்னேற முயல்கின்றார்களோ - அப்பொழுதெல்லாம் சாதிவெறியர்களாலும், அரசு நிர்வாகத்தாலும் தடுக்கப்படுவதும், தாக்கப்படுவதுமான நிகழ்வுகள் தொடரவே செய்கின்றன. அண்மையில், தருமபுரி மாவட்டம் - பூமாண்டஅள்ளி கிராமத்தில் "சயாகோஸ்' கல்வி நிறுவனத்தை, லோக் ஜனசக்தி கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் மதிவாணன் தொடங்கினார். அவரது துணைவியார் கல்பனா, கல்வி நிறுவனத்தின் தாளாளராக இருந்து வருகிறார். கல்வி நிறுவனத்திற்குத் தேவையான நிலத்தை வாங்கி கட்டடங்களும், சுற்றுச் சுவர்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. முகப்பு நுழைவு வாயில் கட்டுமானப் பணி முடிவடையும் தருணத்தில் இருக்கிறது.

இந்நிலையில், 20.7.07 அன்று பாலக்கோடு வட்டாட்சியரும், மாவட்ட வருவாய் அலுவலர் நாகராஜனும் "சயாகோஸ்' கல்வி நிறுவனத்தின் சுற்றுச்சுவர்களும், முகப்பு நுழைவு வாயிலும் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக காரணம் சொல்லி, ஜெ.சி.பி. எந்திரத்தின் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர். இதில் குறைந்தபட்சம் சட்டப்படியான முன்னறிவிப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சுவரையும், முகப்பு நுழைவு வாயிலையும் இடித்ததுடன் அவர்கள் திருப்தியடையவில்லை; நெடுஞ்சாலையிலிருந்து அருகில் உள்ள கல்வி நிறுவனத்திற்குச் செல்லும் பாதையையும் எந்திரத்தை வைத்து குழிதோண்டி தடை ஏற்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி "சயாகோஸ்' கல்வி நிறுவனத்தின் தாளாளர் கல் பனாவை சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியிருக்கிறார், மாவட்ட வருவாய் அலுவலர் நாகராஜன்.

"தலித்துகள் எங்களுக்கு இணையாக கல்வி நிறுவனங்களை நடத்துவதா? நாங்கள் விடமாட்டோம்; ஒரு கை பார்த்துவிடுகிறோம்' என்று சாதிவெறி பிடித்த தருமபுரி பகுதி கல்வி வணிக கொள்ளையர்களும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் உதிரிக் கட்சிகளில் உள்ள ஆதிக்க சாதியினரும் அந்தக் கல்வி கொள்ளையர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். இதற்கு அரசு நிர்வாகமும் துணை புரிந்திருக்கிறது.

ஆயிரக்கணக்கான ஏக்கர் பஞ்சமி நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், ஏரி, குளம், கோயில் மான்ய நிலங்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதில் ஆலைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என்று தலித் இயக்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காத தருமபுரி மாவட்ட நிர்வாகம், "சயாகோஸ்' கல்வி நிறுவனப் பிரச்சனையில் மட்டும் முனைப்பு காட்டுவதன் நோக்கம் என்ன? ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமுமே தலித் விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டுகளுடன் தலித் இயக்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டியல் சாதியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலர் நாகராஜனை கைது செய்து நடவடிக்கை எடு, அவரைப் பணி நீக்கம் செய் என்று மாவட்ட நிர்வாகத்தின் சாதிவெறி ஆணவத்தை அம்பலப்படுத்தி, முதல் கட்டமாக கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தலித் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரைக் கண்டித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 25.7.2007அன்று தலித் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. விடுதலைச் சிறுத்தைகள், லோக் ஜனசக்தி, பெரியார் தி.க., பகுஜன் சமாஜ் கட்சி, மனித உரிமைக் கட்சி, ஆதிதிராவிடர் சங்கம், தலித் செயல்பாட்டாளர்கள் எனப் பலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த வெங்கடாசலபதி என்ற தலித் இளைஞர், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக் கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ""தருமபுரி கலெக்டர் இந்த விஷயத்தில் முறையாக விசாரிக்காமல் எந்திரத்தனமாக முடிவெடுத்திருப்பது கண்டிக்கத்தக் கது. காவல் துறையும் உள் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது'' என்று மாவட்ட நிர்வாகத்தை எச்சரித்து, கடந்த சூலை மாதம் விடுதலை செ'ய்தது. ஆனாலும், எருமை மாட்டின் மேல் பெய்த மழையாகத்தான் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு கள் உள்ளன.
Pin It