சென்னை, திருவொற்றியூரில், காசிக்கோயில்குப்பம் தெருவில் வாழ்ந்து வந்த, ஏழை மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த வேலாயி என்ற பெண்ணை இனிக் காப்பாற்ற முடியாது என்றுதான் குடும்பத்தினர் கருதினர். உயர் ரத்தக் அழுத்தத்தின் விளைவாக, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு, கை, கால்கள் செயலிழந்தன. இரண்டு நாள்களில் நினைவையும் இழந்து கோமா நிலைக்குப் போய்விட்டார்.

தலையில் அறுவை சிகிச்சை செய்தால் பிழைக்க வைக்கலாம். பணத்திற்கு எங்கே போவது என்று அந்தக் குடும்பம் தவித்தபோது, கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அந்த வேலாயியின் உயிர் காத்தது. திருவொற்றியூரில் உள்ள சுகம் மருத்துவமனையில், உடனடியாக தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவர் நினைவு திரும்பிக் குணம் பெற்று வருகிறார்.

குமரி மாவட்டம், குழித்துறையில், மரம் வெட்டும் தொழிலாளி ஏரினாஸ், மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்து விட்டார். வலதுகால் தொடை எலும்பும், குதிகால் எலும்பும் நொறுங்கி விட்டன. இடது கணுக்காலிலும் எலும்பு முறிந்து விட்டது. மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், எலும்பு சிகிச்சைத் தலைமை மருத்துவர் ஐசக் அறுவை சிகிச்சை செய்து, இப்போது அவர் நடக்கத் தொடங்கியிருக்கிறார். அவரது கால்கள், கலைஞர் உயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கு நன்றி சொல்ல நடக்கின்றன.

இவையெல்லாம் வெறும் புனைந்துரைகளோ, விளம்பரங்களோ இல்லை. அன்றாடம் நாளேடுகளில் வந்து கொண்டிருக்கும் செய்திகள். இவைபோல் இன்னும் நூற்றுக்கணக்கான எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், 14 மருத்துவத் துறைகளின் கீழ் 51 ஆபத்தான நோய்களுக்கு உரிய சிகிச்சையைப் பெறமுடியும். 51 வகையான நோய்கள் என்று பொதுவாகக் குறிக்கப்பட்டிருந்தாலும், உட்பிரிவுகளின் கீழ் நூற்றுக்கணக்கான நோய்களுக்குச் சிகிச்சை பெற முடிகிறது. இருதய அறுவை சிகிச்சை, புற்று நோயையொட்டிக் கர்ப்பப்பை நீக்குதல், மூளை மற்றும் முதுகெலும்பு  தொடர்பான அறுவை சிகிச்சைகள், இடுப்பு, மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைகள், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, கண் அறுவை சிகிச்சை முதலான பல்வேறு கடினமான அறுவை சிகிச்சைகளை, ஆண்டுக்கு 72,000 ரூபாய்க்குக் குறைவான வருமானம் கொண்ட ஏழை மக்கள், அப்பல்லோ போன்ற தனியார் மருத்துவமனைகளில் செய்துகொள்ள முடியும் என்பது நேற்று வரை கனவுக்கும் எட்டாத கற்பனை. இன்றோ, கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தி உள்ள உண்மை.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சி போன்ற திட்டங்களையும் கூடத் தாண்டி, இக் காப்பீட்டுத் திட்டம், தமிழகம் முழுவதும் ஏழை மக்களிடம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியில் சொல்லத் தயங்கினாலும், அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளே, இத்திட்டத்தால் நிலை குலைந்து போயுள்ளன. தமிழக அரசுக்கும், தலைவர் கலைஞருக்கும் மக்களிடையே செல்வாக்கு மலைபோல் உயர்ந்துள்ளது, இத்திட்டத்தினால்!

பரவலாக ஒரு கோரிக்கை மக்களிடம், குறிப்பாகப் பெண்களிடம் உள்ளது. மகப்பேறுத் துறையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பேறு (சிசேரியன்) இத்திட்டத்தில் இடம்பெறவில்லை. நடைமுறையில் இன்று 60 முதல் 70 விழுக்காடு வரை, அறுவை சிகிச்சை மூலமே குழந்தைகள் பிறக்கின்றன. எனவே அதற்கும் இத்திட்டத்தில் இடம் வேண்டும் என்று விரும்புகின்றனர். நியாயமான இக்கோரிக்கையை நம் முதல்வர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு போக வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

- இனியன்

Pin It