எனக்குக் குருதி அழுத்தம் (blood pressure) இல்லை யென்றுதான் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனாலும்,நான் துக்ளக் இதழைப் படித்து முடிக்கும் வேளைகளில் சோதனை செய்து பார்த்தால், ரத்த அழுத்தம்  கூடுதலாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

இந்த வாரமும் அப்படித்தான்.26.06.2013ஆம் நாளிட்ட துக்ளக் இதழில்,எஸ்.ஜெ.இதயா என்பவர் எழுதியுள்ள ‘இலங்கைக்குச் சென்று பாருங்கள்’கட்டுரையைப் படித்து முடித்த வேளையில் என் கோபம் கூடிப் போயிற்று.

மூன்று தலைமுறைகளாகக் களத்தில் நின்று இலட்சக் கணக்கான உயிர்களைப் பலி கொடுத்து,சொத்து சுகம் அனைத் தையும் இழந்து,சொந்த தேசத்திலேயே அகதிகள் ஆகிப்போன அந்த மக்களின் ரத்தக் காயங்களை மேலும் கீறி மிளகாய்ப் பொடி தூவுவது போல இருக்கிறது அந்தக் கட்டுரை. சிங்களர்களைவிட இவர்கள் கொடுமை யானவர்களாக இருக்கிறார்கள்.

துக்ளக் இதழ் சார்பில் ஈழத்திற்கு ஆறு நாள் பயணம் போய் அனைத் தையும் தெரிந்துகொண்டு வந்துவிட்டார்களாம்! அங்கு எல்லாம் நன்றாக  இருக்கிறதாம்! புலிகள் போய்விட்ட பின்பு, சிங்களர் ஆட்சியில் எல்லாம் ‘சேம மாக’ இருக்கிறதாம். எழுதுகிறார்கள்.
அத்தோடு நிற்கவில்லை. அந்த மக்களைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் இன்னும் எத்தனை இழிவாக எழுதுகின்றனர் தெரியுமா? இதோ படியுங்கள்:

“யாழ்ப்பாணம் பஸ் நிலையம் அருகில் உள்ள புத்தகக் கடை ஒன்றில் இலங்கையிலிருந்து வெளியாகும் நாளிதழ்கள்,வார,மாத இதழ்கள் அத்தனையையும் நான் ஒன்று விடாமல் வாங்கினேன். 20க்கும் மேற்பட்ட அந்த இதழ்களில் இரண்டு இதழ்கள், பச்சையான தமிழில் எழுதப்பட்ட மஞ்சள் பத்திரிகைகள், அனுபவக் கதைகள் என்ற பெயரில் படு ஆபாசமான சம்பவங்கள் அதில் ஈழத் தமிழில் எழுதப்பட்டிருந்தன. அதையும்தான் யாழ்ப் பாணத் தமிழர்கள் வாங்கி வாசிக்கிறார்கள்.”

ஈழத்தமிழர்கள் இன்று போர்க்குணத்தோடு இல்லை. விடுதலைத் தாகம் எல்லாம் அவர்களுக்குக் கிடையாது. அவர்கள் மஞ்சள் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கும் காமுகர்கள் என்று உலகிற்குச் சொல்கிறது துக்ளக்.பிறகு இது குறித்துத் தன் கருத்தை எழுதுகிறார் அந்த மஞ்சள் புத்தக வாசிப்பாளர்:

“அங்குள்ள மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்றால், சினிமா பார்ப்பதற்கும்,சினிமா கிசுகிசுக்களைக் கேட்பதற்கும்,மஞ்சள் பத்திரிகை படிப்பதற்கும் யாருக்காவது தோன்றுமா? இவையெல் லாம் அங்கு இயல்பான மனித வாழ்க்கை துவங்கி விட்டது என்பதற்கான அடையாளங்கள் அன்றி வேறென்ன?”

ஆக, சினிமா பார்ப்பதும், கிசுகிசுக்களைக் கேட்பதும், ஆபாச நூல்களைப் படிப்பதும்தான் இயல் பான வாழ்வின் அடையாளங் களாகத் தெரிகிறது துக்ளக் இத ழுக்கு.என்ன செய்வது, அவர்களின் வாழ்க்கை முறை அப்படித்தான் போலும்! ‘வேண்டுமானால் நீங்கள் ஒருமுறை இலங்கைக்குச் சென்று பாருங்கள்’ என்று நமக்கு இலவச அறிவுரை வேறு.

இலங்கை செல்ல எவன் நமக்கு விசா கொடுப்பான்? துக்ளக், ராஜபக்சேவுக்கு நெருக்கமான பத்திரிகை. அவர்கள் சிங்களனின் சித்தப்பா மக்கள், அவர்களுக்கு உடனே விசா கிடைக்கும். நமக்கு எப்படி?

இன்னொன்றையும் இங்கு நாம் பதிவு செய்ய வேண்டும். இன்று நேற்றன்று, இப்படித்தான் பல்லாண்டுகளாய்த் துக்ளக் ஈழ மக்களைக் கொச்சைப்படுத்தி வருகின்றது.ஆனால் இங்குள்ள தமிழ்த் தேசியப் புலிகளோ, தமிழ் ஈழ ஆதரவாளர் களோ அது பற்றியெல்லாம் கண்டு கொள்வதில்லை. ஏனெனில்,துக்ளக் சோ அம்மாவுக்கு வேண்டியவர். அது மட்டுமின்றி, அவர் கலைஞர் எதிர்ப்பாளர்.  எனவே அவரை எதிர்த்து எவரும் எழுவதில்லை.

புலம் பெயர்ந்த தமிழர்களில் பலரும் கூட இதனைக் கண்டு கொள்வதில்லை. இங்கே ஈழ ஆதரவு என்றால்,கலைஞர் எதிர்ப்பு! கலைஞர் ஆதரவு என்றால் அது ஈழத்திற்குத் துரோகம்! இப்படிப்பட்ட மனநிலைதான் இங்கே திட்டமிட்டு வளர்க்கப்படுகின்றது. இந்நிலை ஈழத்திற்கும் நல்லதில்லை... எதிர்காலத் தமிழ்நாட்டிற்கும் நல்லதில்லை.

Pin It