கடந்த இதழ் தொடர்ச்சி... 

வங்காள விரிகுடாவை நோக்கி

இத்திட்டத்துக்கு அமைய கோடிக்கரைக்கும் காங்கேயன் துறைக்கும் இடையே 55 கிமீ. நீளத்துக்கு 300 மீ. அகலத்தில் கடல் தரையை12 மீ. ஆழமாக்கினால், 3 இலட்சம் மீனவர்களின் மீன்பிடிப் பரப்பெல்லை இன்றைய 5,000 சகிமீ. இலிருந்து, நாளையே 16 இலட்சம் சகிமீ. பரப்பளவாக விரியும்.

தமிழக, ஆந்திர, கலிங்கக் கடற்கரைகள் மேற்கு எல்லை. வங்க மியான்மார் கடற்கரைகள் வடக்கு எல்லை. தாய்லாந்து, மலேசியா,சுமாத்திரா கடற்கரைகள் கிழக்கெல்லை. இந்த எல்லைகள் கொண்ட வங்காள விரிகுடாவின் 16 இலட்சம் சகிமீ. பரப்பளவு கொண்ட தமிழருக்காக மீன்பிடிக்க விரியும்.

வங்காள விரிகுடாவின் இந்தியப் பொருளாதாரக் கடல் வலையத்துள் ஆண்டுக்கு 22 தொடக்கம் 30 இலட்சம் மெட்ரிக் டன் கடல் உயிரின வளத்தை அள்ளும் வாய்ப்பு இந்திய மீனவர்ளுக்கு உண்டு.

வங்காள விரிகுடாவின் இந்த வளத்தை இப்போது தாய்லாந்தும், தாய்வானும் இந்தோனேசியாவும் நவீனமயமாக்கப்பட்ட மீன்பிடிக் கப்பல்களை வைத்துக் கடலில் சில வாரங்கள் தங்கிக் கடலுயிரினவளங்ளை அள்ளிக்கொண்டு போகிறார்கள். இந்தியப் பொருளாதார வலையத்துள் தாராளமாக வந்து அள்ளிக்கொண்டு போகிறார்கள். தாய்வான் கப்பல்கள் சீனாவின் கிழக்குக் கரையிலிருந்து நெடுந்தொலைவு பயணித்து வருகின்றன.

மியான்மர், வங்கதேசம், இலங்கை, இந்தியா ஆகிய ஏனைய எல்லை நாடுகள், இந்தோனேசியா தாய்லாந்து வைத்திருக்கும் மீன்பிடி நவீனக் கப்பல்களை வைத்திருக்கவில்லை.

வங்காள விரிகுடாவின் இந்த 22-30இலட்சம் மெட்ரிக் தொன் கடலுயிரின வளங்களில் பெரும்பாலானவை சூரை மீன்களும் சுறாக்கள் போன்ற நெடுங்கடல் உயிரின வளங்கள். கரையோர வளங்களான இறால், நண்டு, திருக்கை போன்ற கடல்தரையினவோ, நெத்தலி, சாலை, சிறுசுறா போன்ற நூற்றுக்கணக்கான மீன் வகைகள் நெடுங்கடலில் மிக மிகக் குறைவு.

சேதுக் கால்வாய்க் கரையோர மாவட்ட மீனவர் பயன்படுத்தும் கலங்களோ வலைகளோ சிறிய மீன்களையும் தரை வகையினரையும் நோக்கியன.

சூரைமீன்,பெருஞ்சுறா வகைகள் ஒரு மீனே ஒரு கிலோவுக்கு அதிக எடை கொண்டன. பல நூறு கிலோ எடையுள்ளனவும் உள.

இரு வாரங்களுக்கு மேல் கடலில் தங்க வேண்டும். நெடுந்தூண் டில்களை மிதக்க விட வேண்டும். அள்ளிய மீன் வளத்தை உறைபனிக் குளிரில் சேமிக்க வேண்டும்.

கடலில் தங்கும் நாட்களுக்கு உணவு, நீர், படுக்கை வசதி கொண்டு செல்ல வேண்டும். கரைக்கு வந்தவுடன் இறக்கத் துறைமுக வசதி, சேமிக்க உறைபனி வசதி, சந்தைக்கு உறைபனிப்பெட்டகச் சரக்குந்து வசதிகள் வேண்டும்.

100 பாரிய மீன்பிடிக் கப்பல்கள், 50,000 மீனவத் தொழிலாளர், ஆண்டு தோறும் ஆகக் குறைந்தது 10 இலட்சம் மெட்ரிக் டன் மீன்களை வங்காள விரிகுடாவின் இந்தியப் பொருளாதார வலையத்துளிருந்து அள்ளிக் கொணடு வரலாம்.

மீன்பிடித் தொழிலின் பங்களிப்பு

சேதுக் கால்வாயின் வடக்கில் 55 கிமீ. ஆழமாக்கினாலே வங்காள விரிகுடா முழுவதும் இந்த 5 மாவட்ட மீனவர்களுக்குத் திறக்கும். தனிநபர் வருமானம் உயரும். வாழ்வாதாரம் பெருகும். மீன்பிடி தொழில் நுட்பம் மேம்படும்.

விசைப்படகுகள் ஓட்டியோர் மீகாமானாகப் பயில்வர். வீச்சுவலையோடும் விடுவலையோடும் முடங்கி முனங்கியோர் நெடுந்தூண்டிலுடன் சுறாக்களையும், சூரைகளையும் அள்ளிக் கொண்டு வந்து மகிழ்வர். கடலாடிகளாக மீண்டும் தமிழரின் தொழில் தரமுமுயரும்.

நாகப்பட்டினம், காரைக்கால், அதிராம்பட்டினம், இராமேச்சரம், தனுக்கோடி ஆகியனசேதுத் திட்டத்தின் மீனவர் வளர்ச்சி முயற்சியாகப் பாரிய கப்பல்களை நிறுத்தும் துறைமுகங்களாகும். கப்பல் கட்டும் தொழிலகங்கள், கப்பல் திருத்தும் நிலையங்கள், கப்பல் சார் பணியாளருக்கான பயிலகங்கள், தொலைத் தொடர்பாளர், செய்மதித் தொடர்பு இணைப்பாளர் பயிலகங்கள், எனக் கடற் பயணம்சார் அமைப்புகள் ஐந்து மாவட்டங்களிலும் அமைப்பதற்குச் சேதுக்கால்வாய்த் திட்டம் வழிகாட்டியாக அமையும்.

உறைபனிக் கிடங்குகள் இத்துறைமுகங்களை ஒட்டி அமையும். அந்தக் கிடங்குகளில் இருந்து ஏற்றிச் செல்லும் உறைபனிப்பெட்டகச் சரக்குந்துகள் பெருகும். சூரை மீன்களைத் தகரத்தில் அடைக்கும் தொழிலகங்கள் சூழும். கடலுயிரினச் சேமிப்பு, பதப்படுத்தல் துறைகள் வளர, அத்துறைகளில் வல்லுனரை உருவாக்கும் பயிலகங்கள் அமையும்.

கரையேறிய கடல் வளத்துக்கு ஏற்றுமதிச் சந்தையே சிறப்பிடமாதலால், சாலைப் போக்குவரத்து, தொடர்வண்டிப் போக்கு வரத்து, விமானப் போக்குவரத்து ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்புகளில் முதலீடு பெருகும்.

நாமக்கல்லில் சரக்குந்து, சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, ஈரோடில் மஞ்சள், திருப்பூரில் பின்னலாடை என மையம் கொண்டு அந்தந்த மாவட்டங்கள் வளர்ந்தது போல, சேதுக் கால்வாய்க் கரையோர மாவட்டங்கள் மீன்பிடித் தொழிலை மையமாக்கி வளரும். பிற மாநிலத்தவர் மற்றும் அந்நிய முதலீட்டாளரை ஈர்க்கும்.

அறுவடைக்காக இலங்கை எல்லைக்குள் அலைபாயாது, சிங்களக்கடற்படையின் அட்டூழியத்திற்கு உட்படாமல், 16 இலட்சம் சகிமீ. ஆக விரிந்த கடற் பரப்பில் தாய்லாந்து மலேசியா, இந்தோனேசியா, தாய்வான் மீன்பிடிக் கப்பல் கலங்களின் அத்து மீறலுக்கு இடம் கொடாது,இந்த ஐந்து மாவட்ட மீனவர்களும் வங்காள விரிகுடாவின் கடலுயிரின வளத்தை அள்ளிக் கொண்டுவரச் சேதுக்கால்வாய்த்திட்டம் வழிவகுக்கும்.

தென் கடலை நோக்கி

சேதுக் கால்வாய்த் திட்டத்தின் தென் பகுதியாகச் சேதுத் திடல்களின் ஊடே 30 கிமீ. நீளத்துக்கு, 300 மீ. அகலத்துக்கு, 12 மீ. ஆழத்துக்குக் கப்பல் கால்வாய் அமைப்பதாகும். இவ்வாறு ஆழமாக்கல் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கான வாழ்வாதாரக் கொடையாகும்.

பாம்பன் பாலத்துக்கு கீழேயுள்ள கால்வாய் வழி தென்கடலுக்குச் செல்லும் விசைப் படகுகள், நெடுங்கடலுக்கும் போகும் வலுவற்றன. பாம்பன் பாலத்தைக் கடந்து தெற்கே போகும் இவற்றைக் கரையோரக் கடலில் மீன்பிடிக்க விடாது தடுப்போர் மன்னார் வளைகுடா உயிரினப் பாதுகாப்பு வலையத்தினர்.

பட்டினப்பாலையில் தொடங்கிப் பக்திப் பாடல்கள் காலத்திலும் பாரதியார் ஊடாக இன்று வரையும் பேசப்படும் தென் கடலின் பரப்பளவு 20,000 சகிமீ. தென் கடலுக்குக் கீழே இந்துப் பெருங்கடலோ எல்லை தெரியாது விரிகிறது.

தென் கடலின் பெருவளமே முத்துப் படுகைகள். அவை படிப்படியாக அழிந்து வருகின்றன. முத்துப் படுகைகள் 2000 ஆண்டுகளாக வளர்ந்த தென்கடல் பகுதியில், தூத்துக்குடிக்குக் கிழக்கே, இலங்கையின் புத்தளத்துக்கு மேற்கே, கடலுயிரினப் பாதுகாப்பு வலையம் சார்ந்த பகுதியில் எண்ணெய்க் கிணறுகளுக்கான ஆழ்துளைகளை அமைக்க ஒரு சதுரத்தைச் சீனாவுக்கும் மற்றச் சதுரத்தை இந்தியாவுக்கும் கொடுக்க இலங்கை அரசு ஒப்பந்தம் செய்துள்ள நிலையால் முத்துப் படுகைகள் முற்றாக அழியும் வாய்ப்பும் பரம்பரை வளங்கள் அற்றுப்போகும் நிலையும் உருவாகி வருகிறதே.

தென்கடலுக்குக் கீழே, கன்னியா குமரிக்குத் தெற்கே குமரித் தரவை (கீணீபீரீமீ ஙிணீஸீளீ) உள்ளது. ஆழ் கடலுக்கு நடுவே ஆழமற்ற மேட்டுத் தரவை. 1974 வரை இக் குமரித் தரவையில் இலங்கை மீன்பிடிக் கலங்களுக்கே மீன்பிடி உரிமை இருந்தது. இழுவைக் கப்பல்களை அனுப்பிப் பெருமளவு மீன்வளத்தை அவை அள்ளிச் சென்றன.

1974இன் கச்சத் தீவு உடன்பாட்டில் இந்தத் தரவையின் மீன்பிடி உரிமை இந்தியாவுக் கானது. எனினும் 1974 தொடக்கம் அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு இலங்கைக் கப்பல்கள் மீன்பிடிக்க அந்த உடன்பாடு வழிசெய்தது.

எனினும் ஐந்து ஆண்டுகளுக்கு அப்பாலும் இன்று வரை இலங்கை மீன்பிடி இழுவைக் கப்பல்களே அங்கு மீன்வளங்களை அள்ளிச் செல்கின்றன. கன்னியாகுமரி மீனவர்கள் இதை நன்றாக அறிவார்கள். அவர்களிடம் இழுவைக் கப்பல்கள் இருந்தால் அங்குள்ள கடலுயிரின வளங்களைக் கொணரலாம்.

தெற்கே இந்துப் பெருங்கடலில் இந்தியப் பொருளாதார வலையத்துக்கு உள்ளேயும் புறத்தேயும் சூரை மற்றும் சுறா மீன்களை அள்ளிச் செல்ல ஐரோப்பிய யப்பானிய மீன்பிடிக் கப்பல்கள் வருகின்றன.

உறைபனிச் சேமிப்பு வசதியும் தகர மீன் தொழிலகமும் கொண்ட, பாரிய தாய்க்கப்பல்கள். அவற்றுக்கு மீன்களைப் பிடித்துக் கொண்டுவரும் சிறிய ஊட்டக் கப்பல்கள் எனப் பன்னாட்டு மீன்பிடிப் படைகளேஅந்தக் கடலில் மாலைதீவுக்குக் கிழக்கேயும் மேற்கேயும் தெற்கேயும் நிலைகொண்டுள்ளன.

ஐரோப்பியக் கப்பல்களுக்கு இடியாகோ கார்சியா, இறியூனியன் துறைமுகங்கள் ஓய்வு மற்றும் மீளளிப்பு நிலையங்களா கின்றன. யப்பான் மற்றும் தாய்வான் கப்பல்களுக்குச் சிங்கப்பூர் மற்றும் கிள்ளான் துறைமுகங்கள் ஓய்வு மற்றும் மீளளிப்பு நிலையங்களாகின்றன.

சேதுக் கால்வாயின் தென் கால்வாயான சேதுவை ஊடறுக்கும் கால்வாய் அமைந்ததும், இராமேச்சர மீனவர்கள் இந்துப் பெருங்கடல் வரை நெடும் பாய்ச்சலில் செல்லலாம்.

குமரித் தரவைக்கு இழுவைக் கப்பல்களைக் கொண்டு செல்லலாம். இந்துப் பெருங்கடலுக்குச் சூரை மீன்பிடிக் கப்பல்களுடன் போகலாம்.

100 மீன்பிடிக் கப்பல்கள், 50,000 மீன்பிடித் தொழிலாளர், ஏறத்தாழ 15 இலட்சம் மெட்றிக் தொன் மீன் வளங்களை ஆண்டுதோறும் அள்ளிவரும் வாய்ப்பைச் சேதுக் கால்வாய்த் திட்டம் அமைத்துக் கொடுக்கும்.

வாழ்வாதாரத்தை வளர்க்கவே சேதுக் கால்வாய்

தமிழக மீனவர்களின் கப்பல்கள் கட்டணமெதுவுமின்றிச் சேதுக் கால்வாயைப் பயன்படுத்தலாம் என்ற அரசின் அறிவிப்பு இந்த மீனவர் வாழ்வாதார வளர்ச்சித் திசையை நோக்கியதாம்.

வடகடலுக்கு வடகிழக்காக வங்காள விரிகுடா விரிந்திருக்கிறதே. வட கடலுக்குத் தெற்காகத் தென்கடல், குமரித் தரவை, இந்துப் பெருங்கடல் யாவும் விரிந்து வரவேற்கிறதே.

வாழ்வாதாரம் பறிபோகிறதே எனக் கொடி பிடிப்பவர்கள், வாழ்வாதாரத்தைப் பெருக்கக் கப்பல்களின் சுக்கான்களைப் பிடிப்பார்களாக. கடலாடிகளாகிக் கடல் உயிரின வளங்களை அள்ளிக் கொணர்வார்களாக.

வறுமையை விரட்டி, மகிழ்ச்சியைப் பெருக்கித் தொழில் தராதரத்தை உயர்த்தச் சேதுக் கால்வாயை வரவேற்போமாக.

Pin It