பவுத்தம் ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம் - 18

மவுரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மவுரியரின் பேரன், பிந்துசார அமித்ரகாதரின் மகன் அசோகவர்தனர், மவுரியப் பேரரசின் மூன்றாம் பேரரசராக முடிசூடினார்.

கி.மு.273ஆம் ஆண்டு அவர், ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அதன்பின் நான்கு ஆண்டுகள் கழித்து கி.மு.269ஆம் ஆண்டில் முறைப்படி மகுடம் சூடிக் கொண்டார். 41 ஆண்டுகள் ஆட்சி செய்த அவர், கி.மு.232ஆம் ஆண்டு மறைந்தார். எங்கே, எப்போது, எப்படி மறைந்தார் என்பது குறித்து ஏதும் அறிய முடியவில்லை.

“இந்தியாவின் வரலாறு இரண்டு சமயங்களுக்கு இடையே - புத்த சமயத்திற்கும், பிராமணியத்திற்கும் இடையே நடந்த கடும் போராட்டமே அன்றி வேறல்ல” என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

ஆரியத்திற்கு எதிராக ஒரு சமநீதிப் போராட்டத்தை முதலில் தொடங்கினார் புத்தர். அவரின் மறைவுக்குப் பின், இருநூறு ஆண்டுகளில், அவரின் வழியில் அதே போராட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி இருக்கிறார் பேரரசர் அசோகர்.

இது குறித்து டாக்டர் அம்பேத்கர் சுவைபடச் சொல்கிறார். அதைக் கேட்போம்.

“அசோகர் பவுத்தத்தை அரசின் சமயமாக்கினார். இது இயல்பாக பிராமணியத்திற்கு விழுந்த மிகப்பெரிய அடி ஆயிற்று. அசோகரின் பேரரசில் பிராமணர்கள் அரசின் ஆதரவுகள் அனைத்தையும் இழந்து, இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுக் குறுநிலையை அடைந்தார்கள். உண்மையிலேயே அவர்கள் ஒதுக்கப்பட்டிருந்ததற்குக் காரணம், அசோகர், பிராமண சமயத்தின் உயிரம்சமான உயிர்ப்பலிகள் அனைத்தையும் தடை செய்ததே என்று கூறலாம். பிராமணர்கள் அரசு ஆதரவை இழந்தது மட்டுமின்றி, தங்களின் தொழிலையும் இழந்தார்கள். யாகங்கள் நடத்துவதே முக்கியமாக அவர்களின் தொழிலாயிருந்தது. இதற்குத் தட்சணை யாக அவர்கள் பொருள் பெற்றுக் கொண்டார்கள். இந்த தட்சணை பல சமயங்களில் மிகவும் கணிசமாக இருந்தது. இதுவே அவர்களின் வாழ்க்கைக்கு முக்கிய ஆதாரமாக இருந்தது. எனவே பிராமணர்கள் மவுரியப் பேரரசில் சுமார் 140 ஆண்டு காலம் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களாகவே வாழ்க்கை நடத்தி வந்தார்கள்” என்று சொல்லும் அம்பேத்கர் ஓர் அடிக்குறிப்பைத் தருகிறார்.

அக்குறிப்பில், “மவுரிய ஆட்சியில் பிராமணர்களுக்கு ஏற்பட்டிருந்த தாழ்வு மனப்பான்மை, மனுஸ்மிருதியில் மனு அவர்களுக்காகக் கேட்கும் சிறப்பு உரிமைகளில் இருந்து தெளிவாகப் புலனாகிறது. அவர்களுடைய இந்தத் தாழ்வு மனப்பான்மைக்கு அவர்களது தாழ்த்தப்பட்ட நிலை காரணமாய் இருந்திருக்க வேண்டும்” என்று விளக்கம் தருகிறார் அவர்-.

உயிர்களைக் கொல்லக் கூடாது என்று அசோகர் பிறப்பித்த ஆணையால், குதிரைகள், மாடுகள் போன்ற விலங்கினங்களை அதிகமாகப் பலியிட்டு நடத்தும் யாக வேள்விகளை ஆரியர் களால் நடத்த முடியவில்லை.

யாகங்கள் தடைப்பட்டதால் சமயச்சடங்குகளும், புரோகிதச் சடங்குகளும் தடையாகிப்போயின.

இவைகளை வைத்து உடல் உழைப்பு சிறிதும் இல்லாமல், மக்களை ஏய்த்துப் பெரும் பொருள் தட்சணை என்ற பெயரில் பெற்றுக் கொண்டிருந்த சுரண்டல் தடுக்கப்பட்டது.

இதனால் அசோகரின் ஆட்சியில் ஆரியர்களின் வேதசமய வழக்கங்களும், அவர்களின் இலட்சிய சமுதாயக் கோட்பாடுகளும் நிலைகுலைந்து தாழ்ந்த நிலைக்குப் போய்விட்டார்கள் என்பதை மறுக்க முடியாது. இதை ஆரிய சக்திகளால் பொறுத்துக்கொள்ள முடியுமா?

வினாயக் தாமோதர சாவர்க்கார். இவரை வீரசாவர்க்கார் என்றும் சொல்வார்கள்.

1934&1942 வரை அகில பாரத ஹிந்து மகாசபையின் தலைவராக இருந்தவர் இவர். இந்தியாவை ஹிந்து ராஷ்டிரமாக மாற்றிட, “ஹிந்து பத பாத ஷாஹி” “ஹிந்துத்துவா” போன்ற நூல்களை எழுதிய ஓர் இந்துத் துவாதி. அசோகரைப் பற்றி என்ன சொல்கிறார் இவர்?

“புத்த சமயத்திற்கு மாறியபின் அசோகர், அகிம்சை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒருசில புத்த சமயக் கொள்கைகளைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ததன் விளைவாக, பாரதீய அரசியல் கண்ணோட்டம், அதன் அரசியல் சுதந்திரம், பாரதீய பேரரசு போன்ற கொள்கைகளுக்குச் சொல்லொணாக் கேடு விளைந்தது”

“அசோகர் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, வரம்பற்ற அகிம்சையை வற்புறுத்தி, பேரரசு முழுவதிலும், அதன் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நாடுகளி லும் அமல் செய்ததால், பாரதீய ஆணிவேர் வெட்டப்பட்டது போன்ற நிலையேற்பட்டது”.

“உயிர்ப்பலியை ஏற்றுக்கொண்டுள்ள சமய சடங்குகளைப் பேரரசு முழுவதும் அசோகர் தடை செய்தார். வேள்விகள் வேத சமயத்தின் உயிர்மூச்சு ஆகும். அதன் அடிப்படையில்தான் பாரதீய பண்பாடு வேதகாலம் முதல் தொடர்ந்து வாழ்ந்து வருகிறது”.

“வேத சமய பழக்க வழக்கங்கள் அனைத்தும் தண்டனைக்கு உரியது என்று அசோகர் அறிவித்தார். வேத சமய பழக்க வழக்கங்கள் தீட்டானவை என்று பவுத்தர்கள் அதைப் புறக்கணித்தார்கள். ஆனால் அவை வேத சமயத்தின் அஸ்திவாரமாகும்”.

“புத்த சமயக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதால், தேசிய பலத்தையும், சமுதாயத்தின் அடிப்படைகள் முழுவதையும் கோரமாகப் பாதிக்கும் கடும் விளைவுகள் ஏற்படும் என்று அசோகருக்கு ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே சாணக்கியர் உணர்த்தி இருக்கிறார்”.

“சாதி, இனம், தேசியம் போன்ற வேறுபாடுகளை பவுத்தர்கள் அங்கீகரிக் கவில்லை. பவுத்த மதப் பிரச்சாரகர்கள் இத்தகைய தேசவிரோத, பாரதீயப் பண்பாட்டிற்கு விரோத, தவறான வழியில் பாரத குடிமக்களைத் திசை திருப்பி ஏமாற்றி வந்தார்கள்”.

“அசோகரின் பிரச்சாரத்தினால் மட்டும் அல்லாமல், புத்தரின் கருத்துக ளாலும் ஏற்பட்ட கடும் விளைவுகளையும் பாரதம் துரதிஷ்டவசமாகத் தாங்க வேண்டிய கஷ்ட காலம் ஏற்பட்டது”-.

பவுத்தப் பேரரசர் அசோகருக்கு எதிரான இவரின் விமர்சனத்திற்குப் பாரதீய பண்பாடு வேதகாலம் முதல், வேள்விகள் வேதசமயத்தின் உயிர் மூச்சு, வேத சமயத்தின் அஸ்திவாரம், சாதி இன தேசியத்தை பவுத்தம் அங்கீகரிக்காதது தேச விரோதம், பாரதீயப் பண்பாட்டு விரோதம், பவுத்தம் பாரதத்தின் துரதிர்ஷ்டம் என்ற சொற்களைப் பயன்படுத்தியிருப்பதன் மூலம் அவர் ஏன் பவுத்தப் பேரரசரைத் தாக்குகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

சாவர்க்கார் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. இந்துத்துவாவின் மூலவர்களுள் ஒருவர்.

ஆரியர்களின் சொந்தத் தாயகம் எது என்று வரலாற்று ஆய்வாளர்கள் இதுவரை அறுதியிட்டுச் சொல்ல வில்லை. வால்காப் பகுதியில் இருந்து பாரசீகம், ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்கள், தொடர்ந்து இங்கேயே தங்கி, இந்தியாவை ஆரிய மயமாக்கி ஓர் ஆரியப் பேரரசை நிறுவ முயன்றார்கள்.

அதை முதன் முறையாகத் தகர்த்தவர் புத்தர். தகர்த்தது பவுத்தம்.

சாவர்க்காரின் மொழியில் சொல்ல வேண்டுமானால், “அகண்ட பாரதீய இந்து ராஷ்டிரம்” உருவாக வேண்டிய இந்தியாவில், தமிழகம் நீங்கலாக, ஆப்கானிஸ்தான் வரை இந்தியாவில் ஒரு பரந்த பவுத்தப் பேரரசை உருவாக்கி, ஆரியத்தின் வலிமையை சீர்குலைத்து விட்டார் பேரரசர் அசோகர் என்ற காட்டம்தான் சாவர்க்காரின் பவுத்த அசோக எதிர்ப்பு. இதை ஆரியத்தின் எதிர்ப்பாகத்தான் கருதமுடியும்.

இந்தத் தாக்கம் இலங்கையில் கி.பி.6ஆம் நூற்றாண்டிலேயே எதிரொலித் திருக்கிறது. எதிரொலிக்கிறது.

இலங்கையின் பவுத்த நூலாகக் கருதப்படும் மகாவசம்ச அத்தியாயம் 5, 189ஆம் சூத்திரத்தில், அசோகன் கொடும் பாதகன் என்ற பொருளில் “சண்டாள அசோக” என்று தூற்றிப் பேசப்பட்டி ருக்கிறார்.

சண்டாளன் என்பதற்கு சூத்திரன், வேசிமகன் என்று விளக்கம் தருகிறது மனுஸ்மிருதி. இங்கு பேரரசர் அசோகர் சண்டாளன் என்ற இடத்தில் வைக்கப்படுகிறார் சிங்கள மகாநாமனால். என்ன காரணம்?

வின்சன்ட் ஸ்மித் ஒரு குறிப்பு தருகிறார். “ மகாவம்ச அத்தியாயம் 5ன்படி பவுத்தர்களின் வகைப்பாடு மாறுபடுகிறது-. இத்சிங் என்பவரின் கருத்துப்படி இலங்கை பவுத்தர்கள் அனைவரும் ஆர்ய ஸ்தரீர நிகாய என்ற பிரிவில் வருகின்றனர்.”

ஸ்மித்தின் கருத்தை உறுதி செய்கிறது மகாவம்ச. அந்நூல் முழுவதும் சிங்களரின் ஆரியச் சார்புநிலையே காணப்படுகிறது.

பவுத்தத்தை புத்தரே நேரில் வந்து இலங்கையில் போதித்தார் என்று முதல் அத்தியாயம் சொல்கிறது. பிறகு சங்கமித்ரையும், மகிந்தரும் பவுத்தத்தை இலங்கைக்குக் கொண்டு வந்தார்கள் என்கிறது மகாவம்சம். அதுவும் மொகாலியின் மகன் திஸ்சா என்பவரால்தான் மகிந்தனும், சங்கமித்திரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்று சொல்லும் மகாவம்சம், அசோகரின் பெயரை மறைத்துவிட்டது, விட்டுவிட்டது.

உண்மையில் சங்கமித்திரை என்ற பெண் அசோகரின் மகளே அல்ல. இது ஒரு கற்பனைப் படைப்பு. மகிந்தன் அசோகரின் இளைய தம்பி. அசோகரின் மகன் அல்ல என்கிறார் வின்சன்ட் ஸ்மித்.

“மகிந்தன், சங்கமித்திரை என்ற இருவரும், வரலாற்றை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பவுத்த நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள். அசோகரோடு இவர்களைத் தொடர்பு படுத்துவதால் கற்பனை வரலாறு, மேலும் வலுவடையும். சரித்திரக் கதைகள் சாதாரண நிகழ்வுகளை மேலும் மிகைப்படுத்திக் காட்டும்” என்கிறார் பேராசிரியர் ஓல்டன் பர்க்.

அசோகரின் கல்வெட்டுகளில் இடம்பெறாத மகிந்தனும், சங்கமித்ரையும் மகாவம்சத்தால் உருவாக்கப்பட்டவர்கள் என்பது கவனிக்க வேண்டிய செய்தி. அதாவது அசோகரைப் புறக்கணிக்க உருவாக்கப்பட்டவர்கள். இதுவும் ஆரியத்தின் சூழ்ச்சி.

புத்தரின் வீரவாளான பேரரசன் அசோகரை ஆரியம் எதிர்க்கத்தான் செய்யும். பவுத்தப் போர்வையில் ஆரியச் சிங்களமும் எதிர்க்கத்தான் செய்யும் - வெல்ல முடியாது.

உண்மையில் அசோகர் ஆரியத்தின் சிம்ம சொப்பனம்.

                                                                                                - தொடரும்

Pin It