Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கருஞ்சட்டைத் தமிழர்

இரண்டு செய்திகள் அதிர்ச்சியைத் தருகின்றன.

ஒன்று கலிபோர்னிய மாநில ஐகான் நிறுவனம் பற்றியது. மற்றொன்று ஒலிம்பிக்கில் இந்தியக் கலைநிகழ்ச்சி குறித்தது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், ஆலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர், 1999ஆம் ஆண்டு ஐகான் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.

காலணிகள், பெண்களுக்கான கைப்பைகள் போன்ற தோல் தொடர்பான உற்பத்தி மற்றும் வணிக நிறுவனம் அது. மக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் பேசப்படும் புகழ்பெற்ற நிறுவனம் ஐகான் நிறுவனம்.

இந்நிறுவனம் அண்மையில் உற்பத்தி செய்து சந்தைப்படுத்திய காலணிகளில், புத்தரின் உருவப்படத்தை வரைந்து அக்காலணிகளில் பதிப்பித்து விற்பனை செய்துள்ளது. இதனைப் பார்த்து கலிபோர்னிய மக்கள் திகைத்துப் போனார்கள்.

மக்களும், பவுத்த ஆர்வலர்களும், பவுத்த அமைப்பினரும் ஐகான் நிறுவனத்தின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவின் இந்நிறுவனம் செய்துள்ள செயலுக்கு மன்னிப்புக் கேட்பதோடு, புத்தர் உருவம் பொறித்த காலணிகளை விற்பனை செய்யக்கூடாது, விற்பனை செய்தவற்றைத் திரும்பப் பெறவேண்டும். இல்லையயனில் கடும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்ததோடு, அந்நிறுனத்தின் பேஸ்புக் பக்கத்தில் தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

பண்டைய இந்திய வரலாற்றுக் காலத்தின் முதல் தலைவர் புத்தர். முதல் புரட்சியாளர். முதல் சுயசிந்தனையாளர். முதல் தத்துவவாதி. முதல் பகுத்தறிவாளர்.

மனிதநேய மாண்பை உலகெலாம் அறியச் செய்த அந்த மாபெரும் சிந்தனையாளரின் உருவத்தைக் கால் செருப்பில் பதித்து அவமதித்த ஐகான் நிறுவனத்தின் முதலாளிய ஆணவம் வன்மையான கண்டனத்திற்குரியது.

அடுத்த செய்தி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக் கலை நிகழ்ச்சி குறித்தது.

விளையாட்டுப் போட்டிகள் மட்டுமன்றி, கலை நிகழ்ச்சிகளும் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்ச்சியில் இடம்பெறும். இந்தியக் கலை நிகழ்ச்சிக்காக 40 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 5 நிமிடம் தமிழ்நாட்டுக் கலைக்கு ஒதுக்கப்பட்ட நேரம்.

இதில் கலந்து கொள்ளப் புறப்பட்ட கலைக்குழுவினர், சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியின்போது, தமிழ்நாட்டுக் கலை நிகழ்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 நிமிட நேரத்தில், பரதம், குச்சுப்புடி இரண்டையும் இணைத்து சமஸ்கிருத ஸ்லோகத்தில் தரப்போவதாகச் சொன்னார்கள்.

இது என்ன வெட்கக்கேடு? கொடுக்கப்பட்டது 5 நிமிடம் மட்டுமே. இதில் பரதம் குச்சுப்புடி கலந்த நடனம், இதை சமஸ்கிருதத்தில் தரப்போகிறாராம்.

அது என்ன ஒலிம்பிக் களமா அல்லது இந்து மாநாடா? உள்ளூரில் விலைபோகாத மாட்டை ஒலிம்பிக்கில் விற்கப்போகிறாரார்களாம்!

இந்தியாவில் சாதி, மத, வேறுபட்டு நச்சு விதைகளை விதைத்து வளர்ந்த பார்ப்பனியம்; இதை சமஸ்கிருத ஸ்லோகம் என்று மொழிவடிவத்திலும்; பரதம், குச்சுப்புடி என்று கலைவடிவிலும் ஒலிம்பிக்கில் நுழைக்கப் பார்க்கிறது.

இதுவும் கடுமையான கண்டனத்திற்கு உரியது.

புத்தரைச் செருப்பில் போட்டு இழிவுபடுத்தியது அமெரிக்கப் பார்ப்பனியம். சமஸ்கிருதத்தை ஒலிம்பிக்கில் நிறுத்தி உயர்த்தப் பார்க்கிறது இந்தியப் பார்ப்பனியம்.

இரண்டும் வெட்கப்படவேண்டிய செயல்கள்!

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 வெள்ளை அங்கி 2012-08-11 18:48
""அமெரிக்கப் பார்ப்பனியம். ""

அமெரிக்க கிறித்துவம் என்று சொன்னால் சொந்தக்காரங்க கோவிச்சுக்குவாங ்களோ?
Report to administrator

Add comment


Security code
Refresh