சில்லறை வணிகத்தில் 51% அந்நிய முதலீட்டிற்கு, நடுவண் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இப்பொருளாதார அநீதியை எதிர்த்து இப்போது நாடாளுமன்றத்தில் கூச்சலும் குழப்பமும் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோருக்கு நேரடியாகச் செல்லும் வணிக முறையில் (சிங்கிள் பிராண்ட்) நூறு விழுக்காடு அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. ஆம்வே போன்ற நிறுவனங்கள் அவ்வாறே இயங்குகின்றன. இப்போது உற்பத்தியாளரிடமிருந்து வணிகர் வழியாக நுகர்வோருக்குச் செல்லும் வணிகத்திலும் (மல்டி பிராண்ட் ) 51 விழுக்காடு அந்நிய முதலீடு என்பது என்ன நியாயம்? கூடாரத்துக்குள் தலையை நுழைத்த ஒட்டகம், பிறகு கூடாரத்தையே தனதாக்கிக் கொண்டது போல இன்றைய நிலை தொடர்கிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர், அந்நிய முதலீட்டின் மூலம், விலைவாசியைக் குறைக்க முடியு மென்கிறார். அது வெறும் மாயத் தோற்றமே. கோகோ கோலா போன்ற அயல்நாட்டு குளிர் பானங்கள் உள்ளே வரும்போது, வெறும் ஐந்து ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. அப்போது காளிமார்க் போன்ற உள்நாட்டுக் குளிர்பானங்கள் 7 ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருந்தன. அடடா, அந்நிய முதலீட்டால் விலைவாசி குறைகிறதே என்றுதான் மக்கள் கருதினர். ஆனால், சந்தையைக் கைப்பற்றிய பிறகு வெளிநாட்டுக் குளிர்பானங்களின் விலை எவ்வளவு கூடிற்று என்பதை சசி தரூர் அறிய மாட்டாரா?

நம் நாட்டிற்குள் 23 இலட்சம் கோடி அந்நிய முதலீடு வருவதன் மூலம், 90 விழுக்காடு சிறுவணிகத்தை நாம் அவர்களுக்குத் தாரை வார்க்கிறோம் என்று பொருள். இந்தியனாக இரு, இந்தியப் பொருள்களையே வாங்கு என்னும் முழக்கத்தைக் காங்கிரஸ் கட்சி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. சிறு வணிகத்தை நடத்தி வரும் முதலாளிகள் மட்டுமின்றி, அங்கே பணியாற்றும் பல லட்சக் கணக்கான தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும் நடுத்தெருவுக்கு வரப்போகின்றனர் என்பதே உண்மை.

மத்திய அரசின் கூட்டணியில் இருந்தாலும், வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசும், தமிழ்நாட்டில் தி.மு.கழகமும் இதனை எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளனர். மாநில அரசுகளைக் கேட்காமல் எடுக்கப்பட்ட இம்முடிவை ஏற்பதற்கு இல்லை என்றும், தமிழ்நாட்டிற்குள் இதனை அனுமதிக்க முடியாது என்றும் தமிழக முதலமைச்சர் உறுதிபடக் கூறியுள்ளார். எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ள அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

 

Pin It