வைக்கம் கோயில் தெருவில் ஈழவ மக்கள் நடக்கக்கூடாது என்று சாதித் திமிர் ஆதிக்கத்தைக் காட்டிய அதே கேரளா தான்; இன்று, தமிழ் இன மக்களின் மீது ஓர் இனஆதிக்கத்தைக் காட்டத் தொடங்கி இருக்கிறது என்பதற்குச் சான்று முல்லைப்பெரியார் அணை ‡டேம் 999 .

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் இன்று நேற்றல்ல, நீண்டகாலமாகக் கேரளா தமிழகத்திற்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் தொல்லை அது.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்குச் சொந்தமான இடுக்கியில் கட்டப்பட்ட பலமான அணை முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையின் மூலமாகக் தேனி மாவட்டம் உள்பட 6 மாவட்டங்களின் விவசாயமக்கள்  பாசனப் பயனடைந்து வருகின்றார்கள்.

பெரியாறு அணையின் நீர் மட்டக் கொள்ளவு 157 அடி. ஆனால் கேரள அரசு 136 அடி மட்டுமே நீரைத் தேக்கி வைக்கிறது. இதனால் இவ்வணையில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு குறைந்து 6 மாவட்ட விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இது குறித்துத் தமிழகம் தோடுத்த வழக்கில் 142 அடி அணையின் நீரை உயர்த்த உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தும் கூட, கேரள அரசு 136 அடிக்கு மேல் நீரை ஏற்ற மறுத்து வருகிறது.

அதற்கு அவர்கள் பெரியாறு அணை பலம் இழந்து விட்டது, கீரல் விழுந்து விட்டது, வெடிப்பு ஏற்பட்டு இருக்கிறது, சிதிலம் அடைந்து விட்டது இப்படிக் கவைக்குதவாத காரணங்களைக் கேரள அரசு சொல்லிக் கொண்டு இருக்கிறது.

இது குறித்து மத்திய அரசின் ஆய்வுக் குழுவினர் பல தடவை ஆய்வு செய்து, அணை பலமாகவே இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்களே ஒழிய, அணை பலவீனப்பட்டுப் போய்விட்டது, இதனால் ஆபத்து இருக்கிறது என்று தவறியும் கூடச் சொன்னதில்லை.

உச்சநீதிமன்றத்தில் இருந்தும், மத்திய அரசின் அணை ஆய்வுக் குழுவில் இருந்தும் தமக்குச் சாதகமான எந்த ஒரு பதிலும் வராத நிலையில், மக்களைக் கலவரப்படுத்தி, அச்சமடையச் செய்து, பீதியைக் கிளப்பிவிடும் பயங்கரவாத விளம்பர உத்தியைக் கேரளா கையாண்டிருக்கிறது என்பதைத்தான் டேம் 999 காட்டுகிறது.

கேரள அரசும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து பணம் போட்டு, பிஷ் டி.வியால் தயாரிக்கப்பட்ட டேம் 999 திரைப்படத்தை உலகம் முழுவதும் திரையிடப்படும் பொறுப்பை வார்னர் பிரதர்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.

கடற்படையில் மாலுமியாக இருந்த, கேரளத்தைச் சேர்ந்த சோகன்ராய் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

அவர், நூறு ஆண்டு காலம் பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு மேற்கொண்டேன். அப்போது சீனாவில் 1975ம் ஆண்டு நடைபெற்ற பான்கியோ டேம் பேரிடரில் சிக்கி இரண்டரை இலட்சம் பேர் உயிரிழுந்த சம்பவத்தைக் கண்டேன். அதே அபாயம் முல்லைப் பெரியாறு அணையிலும் உள்ளது என்று சொல்கிறார்.

இங்கே இரண்டு செய்திகள் கவனத்திற்கு உரியன. முதலாவது, சோகன்ராய் ஒரு மாலுமியே தவிர, அவர் அணை குறித்து ஆய்வு செய்யும் வல்லுநர் அல்லர். அங்கீகரிக்கப்படாத இந்தத் தனிமனிதனின் ஆய்வு யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஓன்று.

இரண் டாவது செய்தி சீனாவின் பான்கியோ அணை உடைந்து ஏற்பட்டப் பேரிடரைப் போல உலகில் வேற எங்கும் நிகழாதா? இந்தியாவின் மிகப்பெரிய அணை பக்ராநங்கல் அணை. இன்னும் இந்நாட்டில் எத்தனையோ அணைகள் இருக்கும் போது, அவை எல்லாம் பலமாக இருப்பது போலவும், கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணைதான் அடுத்தப் பேரிடரை ஏற்படுத்தப் போவதாகவும் அவர் கூறியிருப்பது, கேழ்வரகில் வடியும் நெய்யிற்குச் சமம். அது ஒரு கேலிக்கூத்து.

டேம் 999 திரைப்படத்தில் முல்லைப் பெரியாறுஅணையைக் காட்டாமல், ஆலப்புழையில் அணை உடையும் காட்சிகளை நவீனத் தொழில் நுட்பத்தில் கிராஃபிக்ஸ் செய்து, மக்கள் அழிவது போல நடக்காத ஒன்றை நடக்க இருப்பது போல காட்டியிருப்பது, திரைப்படம் என்ற கலை நுட்பத்தை ஒரு பயங்கரவாதத்திற்கு மறைமுகமாகப் பயன்படுத்தியிருப்பதாகவே தோன்றுகிறது.

ஏற்கனவே இதுபோன்ற குறும்படத்தை முதலில் சி.டியாக வெளியிட்டவர் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன். அவரின் இணையத்தளத்திலும் அவர் வெளியிட்டுள்ளார். இப்பொழுது திரைப்படமாக வெளியாகியிருக்கிறது.

இந்தநிலையில் கடந்த 23ம் தேதி கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டுப் புதிய அணை கட்டுவதில் இருந்து பின்வாங்கக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஜோசப் செய்தியாளர்ளிடம் பேசும் போது, புதிய அணை கட்டுவதை உறுதி செய்த அவர், இதுவரை 136 அடிக்குத் தேக்கி வைத்த அணை நீர் இனி 120 அடியாகக் குறைக்கப்பட இருப்பதாகவும், தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முன்கூட்டியே 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள செய்தியும் வெளியாகியிருக்கிறது.

கொச்சியில் பேசிய இன்றைய எதிர்க்கட்சித்தலைவர் அச்சுதானந்தன், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது அவசியம் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தமிழ்நாட்டுடன் விலைபேசும் முயற்சியில் இறங்கக்கூடாது என்றும் கடுமையாகப் பேசியிருக்கிறார்.

கேரளாவின் ‡ தமிழக மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகத் தமிழக மக்கள், தமிழக அனைத்துக் கட்சிகளின் எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடக்கத்திலேயே தமிழகக் கட்சிகளின் உறுப்பினர்கள் டேம் 999 திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்ப்புக் குரல்கொடுத்தனர்.

குறிப்பாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பிரதமரிடம் இதுகுறித்து விளக்கம் அளித்துப் பேசியுள்ளார். பின்னர் பிரதமர் மன்மோகன் சிங், தற்போது கோவாவில் உலக திரைப்பட விழாவில், இருக்கும் துறை அமைச்சர் அம்பிகா சோனி டில்லி திரும்பியதும் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்.

நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினைக்குப் பிரதமரின் இந்த நடிவடிக்கை உகந்ததாகத் தெரியவில்லை. செயல்படாத பிரதமர் என்ற கூற்றை மீண்டும் நிரூபிப்பது போல இது இருக்கிறது.

அதே சமயம் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சியினரும் ஒரு சேர இத்திரைப்படத்தை இந்தியா முழுவதும் தடைசெய்யக் கூறியும் மத்திய அரசு இதில் அலட்சியமே காட்டுகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் திரைப்படத் தணிக்கைக் குழு என்ன செய்கிறது என்பது விளங்கவில்லை.

நாட்டின் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் திரைப்படத்தின் உரையாடல், காட்சி அமையுமானால் அதற்குத் தகுதிச் சான்றிதழ் கொடுக்கக் கூடாது என்பது விதி.

மாறாக டேம் 999 என்ற திரைப்படம், இந்தியாவின் ஒரு மாநிலம், அதில் வாழும் 7 கோடி மக்களுக்கு எதிராக இருக்கின்ற நிலையில் அத்திரைப்படத்திற்கு எப்படி தணிக்கைக் குழுவினர் சான்று கொடுத்தார்கள்?

இப்படி சான்று கொடுத்திருக்கும் நிலையில், தமிழக அரசு மட்டும் தமிழகத்தில் இத்திரைப்படத்தை வெளியிடத் தடை விதித்திருக்கிறது.

அதே சமயம் பிறமாநிலங்களில் இத்திரைப்படம் வெளியாகும். அதை தனியார் தொலைக்காட்சியும் வெளியிடலாம். சி.டி.க்களும் வெளிவரும். இவையும் கூடத் தமிழகத்தில் மேலும் கொந்தளிப்பு ஏற்படுத்த வாய்ப்பாக அமையலாம் அல்லவா!

கேரள அரசின் அடாவடித் தனத்தை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். டேம் 999 திரைப்படத்தை இந்தியா முழுவதும் திரையிடத் தடை செய்ய வேண்டும்.

தேவையில்லாமல் கேரளா ‡ தமிழகத்திற்கு, டில்லி கட்டைப் பஞ்சாயத்து நடத்தாமல், மீண்டும் நடுநிலையான வல்லுனர் குழுவை அமைத்து அணையை ஆய்வு செய்து அறிக்கை தர மத்திய அரசு முன்வர வேண்டுமே ஒழிய, முல்லைப் பெரியாறு அணையை இடிக்க ஒரு போதும் சம்மதிக்கக் கூடாது. தமிழகமும் சம்மதிக்காது.

இதுதான் 7 கோடித் தமிழர்களின் ஒருமித்த குரலாகும்.

Pin It