சமூக ஆர்வலர் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்.சின் கருவியாக ஆடிக்கொண்டிருக்கும் அன்னா ஹசாரே என்ற மனிதரின் ஒரே அடையாளம் அவர் அணிந்திருக்கும் காந்தி குல்லாய். அவருடைய துணை அடையாளம், கண்ணுக்குத் தெரியாத காவி உடை.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சட்டத்தின் மூலம் மட்டுமே ஒழித்துவிட முடியாது என்றாலும், சட்ட நடைமுறைகளும் தேவைதான். அன்னா ஹசாரே லோக்பால் குறித்த சட்ட நடைமுறை பற்றி மட்டும் கவலைப்படவில்லை. பிரதமரைப் பற்றியே கூடுதலாகக் கவலைப் படுகிறார்.

ஊழலை ஒழிப்பதாகச் சொல்லிக் கொண்டு, விளம்பர வெளிச்சத்தில் மின்ன வேண்டும் என்னும் ஆசை அவருக்கு வந்துவிட்டது. அதனால்தான் எந்த வரைவு மசோதா பற்றியும் விவாதிக்காமல், தான் எதற்கும் அஞ்சாதவன் என்னும் வதந்தியை மட்டுமே விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார். வரும் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் லோக்பால் வரைவுச் சட்டம் முன்வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை விவாதித்து, பிறகு அது பற்றிய முடிவை எடுப்பதே விவேகமாகும். அன்னா ஹசாரேயோ 16ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் உறுதி என்று அறிவிக்கிறார். அப்படியானால் லோக்பால் வரைவுக் குழுவில் அவர் இடம் பெற்றிருக்க வேண்டிய தேவையே இல்லை. எல்லாவற்றையும் உண்ணாவிரதம் மூலமே ஒழித்துக் கட்டியிருக்கலாம்.

மத்திய அரசு நாடாளுமன்றம் உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு விதித்திருக்கிறது. தடையை மீறுவேன் என்கிறார் ஹசாரே. அதே பேட்டியில், அடுத்த நிமிடம், தடையை எதிர்த்து உச்சநீதி மன்றம் செல்வேன் என்கிறார். உடனடியாக, உண்ணாவிரதத்தில் தடியடி நடத்தினாலும் கவலைப்பட மாட்டேன் என்கிறார்.

பாவம், ஊடகங்களால் உருவாக்கப்பட்ட திடீர் மகாத்மா நிரம்பவே குழம்பிப் போயிருக்கிறார் என்பது தெரிகிறது.

தடையை மீறுகிறவர் ஏன் நீதிமன்றம் செல்கிறார்? நீதிமன்றம் செல்வது என்று முடிவெடுத்தால், பிறகு ஏன் தடையை மீறுகிறார்?

தடியடி கண்டு அஞ்சமாட்டேன், துப்பாக்கிக்கு மார்பு காட்டுவேன் என்றெல்லாம் நம் தமிழ்த் திரைப்படக் கதாநாயகர்களைப் போல பொரிந்து தள்ளுகிறார் ஹசாரே. உள்மனத்தில் அவருக்கு ஓர் எண்ணம் இருக்கிறதோ என்று ஐயமாய் உள்ளது. தடியடி நடந்து, கலவரம் மூண்டு யாராவது அப்பாவித் தொண்டர்கள் சிலர் காயப்பட்டால், அது தன் உண்ணாவிரதத்திற்கு மேலும் விளம்பரம் சேர்க்கும் என்று எண்ணுகிறாரோ என்னவோ? அடடே, காந்தியின் சீடர் வன்முறையின் காதலராக அல்லவா இருக்கிறார்.

மத்திய அரசும் லோக்பால் சட்டத்திற்கு பிரதமரும் உட்பட்டவரே என்று சொல்ல ஏன் தயங்க வேண்டும்? பிரதமரானாலும், நீதிபதிகளானாலும் வானத்திலிருந்து குதித்தவர்கள் இல்லை. சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டவர்களே என்னும் போது ஏன் இந்தத் தயக்கம் என்னும் கேள்வி மக்கள் மனத்தில் எழவே செய்கிறது.

நாட்டில் உள்ள பொதுவான எண்ண ஓட்டத்தைப் புரிந்து செயல்படுவதே அரசுக்கு அழகு. இல்லையயனில் ஹசாரே போன்ற விளம்பரம் விரும்பிகளுக்கே அது பயன்படும் என்பதை அரசு கவனத்தில கொள்ள வேண்டும்.

Pin It