சாதிப் படிநிலையில் மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள், இந்நாட்டில்.

தாழ்த்தப்பட்ட மக்கள் வடக்கு, தெற்கு, மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையினராக ஒருங்கிணைந்து இருப்பதாலும், இவர்களினுடைய தொடக்கக்காலத்தில் இருந்து பல்வேறு தலைவர்கள் சங்கங்கள் அமைத்துப் பணியாற்றியதாலும், இம்மக்கள் விழிப்புணர்வு பெற்றுத் தம் உரிமைகளுக்காகப் போராடக் களம் இறங்கியுள்ளார்கள்.

ஆனால் மேற்குத் தொடர்ச்சி உட்பட மலைப்பகுதிகளில் பெரும்பான்மை மக்களாக ஒருங்கிணைந்து வாழ்ந்த பழங்குடியின மக்கள், ஆங்கிலேயர்களால் சிதறடிக்கப்பட்டார்கள். இதனால் இவர்களின் மக்கள் வலிமை வலுவிழந்துவிட்டது. அடுத்து, தாழ்த்தப்பட்ட மக்களைவிடவும் மிகவும் ஒதுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட காரணத்தினால், கல்வி அறிவுபெறாமல் இம்மக்கள் மிகவும் பின்தங்கி விட்டார்கள். தொடக்ககாலங்களில் இம்மக்களை அணிதிரட்டவும், விழிப்புணர்வு பெறவும் தலைவர்கள் உருவாகா நிலைக்கு இதுவும் ஒரு காரணம்.

இன்று இம்மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சிறந்த சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். களப்பணியாற்றும் செயல்வீரர்கள் இருக்கிறார்கள். கல்வியில் முனைப்பு காட்டுகிறார் கள் - பட்டதாரிகளாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள் - மகிழ்ச்சியான செய்தி இது.

ஆனாலும் இம்மண்ணின் மைந்தர்களின் சமூகப் பொருளாதாரக் கல்வி மேம்பாடு வளர்ச்சி, ஏமாற்றத்தையே அளிக்கிறது. ஏனெனில், அரசிடம் இருந்து இவர்கள் பெறவேண்டிய உரிமைகளை, தவறாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் சாதிப்பிரிவுப் பெயர்கள் தடுத்துக் கொண்டிருக்கின்றன. அதனால் சாதிச்சான்று பெறுவதில் குழப்பமும், தொல்லை களும் தான் முன்வந்து நிற்கின்றன.

இவைகளை எல்லாம் கருத்தில் கொண்டு, இம்மக்களுக்கான “விடுதலை வேங்கைகள்” அமைப்பின் நிறுவனத் தலைவரும், சிறந்த களப்பணியாளருமான திண்டுக்கல் என். புரட்சிதாசன், அக்டோபர் திங்கள் 17ஆம் நாள் திண்டுக்கல்லில் ஒரு மாபெரும் எழுச்சி மாநாட்டைக் கூட்டினார்.

அந்த மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராகத் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அழைக்கப்பட்டிருந்தார். மாநிலப் பொருளாளர் எழில். இளங்கோவன் உடன் பங்குகொண்டார்.

இம்மாநாட்டின் தலைமைப் பொறுப்பேற்றவர் தலைவர் புரட்சிதாசன். விடுதலை வேங்கைகளின் பொதுச் செயலாளர் சி.ரவீந்திரன் வரவேற்புரை ஆற்றினார். மாநில சிறப்புத் தலைவர் சிம்சன் ஜி.கோவிந்தராஜுலு மாநில செயல்தலைவர் பெல் ஆர்.முத்தையா, அமைப்புச் செயலாளர் கே.ராஜேந்திரன், குறுமொழி ஒருங்கிணைப்பாளர் எட்டப்பன், மாநில செயல் தலைவர் சென்னை மாணவாளன், மாநில துணைத்தலைவர் கணியூர் நடராசன் எவிடன்ஸ் செயல் இயக்குநர் கதிர், தலித் போராளி முன்னணி மனோகரன் ஆகியோர் கருத்துரைகளை ஆற்றினார்கள்.

பெங்களூருவில் இருந்து அனைத்திந்திய மலைக்குறவர் கூட்டமைப்பின் தலைவர் கிருஷ்ணபிரசாத், பொதுச்செயலாளர் வெங்கடேஷ், கேராளவில் இருந்து சுப்பிரமணி ஆகியவர் களும் இம்மாநாட்டில் உரையாற்றினார்கள்.

மாநாட்டில் தலைவர் புரட்சிதாசன் தன் தலைமை உரையின்போது, மலைக்குறவர் மக்களின் சாதிப் பெயர்கள் மலைவாழ் அட்வணைப் பட்டியலில் இருப்பதற்குப் பதிலாக, “குறவர்” என்று பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், “கொரவர்” என்று சீர்மரபினர் பட்டியலிலும், “குறவன்” மற்றும் “சித்தனார்” என்று தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலும், “மலைக்குறவன்” என்று பழங்குடியினப் பட்டிய லிலும் பிரித்துப் போட்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார். இப்பெயர்கள் அனைத்தையும் ஒரே பட்டியலில், பழங்குடி இனப்பட்டியலில் “குறிஞ்சியர்” என்ற பெயரில், பதிவுப் பட்டியலிட முதல்வர் கலைஞர் அவர்கள் ஆவன செய்ய வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண் டியன் தன் நிறைவுரையின் போது, மலைக்குறவர் இனம் இம்மண்ணின் மூத்த குடி, மண்ணின் மைந்தர்கள். இவர்களின் கோரிக்கை நியாய மானது. மலைக்குறவர் மக்களின் சாதிப்பெயர்கள் இப்படி பிரிவுபட்டு இருப்பது சரியல்ல. ஒரே குடும்பத்தில் தந்தை மலைக்குறவராகவும், மனைவி பிற்படுத்தப்பட்டவராகவும், மகன் சீர்மரபின ராகவும், மகள் தாழ்த்தப்பட்டவராகவும் இருக்க முடியாது. அதுபோலத்தான் மலைக்குறவர் சாதிப் பெயர்களும் சிதறடிக்கப்பட்டுள்ளன. ஆரியத்தால் வந்த சாதியால், திராவிட இனம்படும்பாடு இது. இருந்தாலும், மலைக்குறவர்களின் நியாயமான கோரிக்கையை முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் கனிவுடன் கவனிப்பார். அவரின் கவனத்திற்குக் கொண்டுபோகும் முயற்சியை நாம் அனைவரும் இணைந்து செய்வோம். பழங்குடி மலைக்குறவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற் கான அனைத்து நிலைகளிலும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தன் ஒத்துழைப்பை உறுதியுடன் நல்கும் என்று கூறினார்.

மாநாட்டில் “27 பிரிவுகளில் இருக்கும் மலைக்குறவர் இனப்பெயர்களை ஒன்றிணைத்தும், சாதிப்பட்டியலில் பிற்பட்டோர், சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என்று வெவ்வேறாக இருக்கும் பெயர்களை நீக்கி அவர்களை பழங்குடி இனப்பட்டியலில் வைக்கப்பட வேண்டும்” என்ற ஒற்றைத் தீர்மானம் இயற்றப்பட்டு, குறுமொழி ஒருங்கி ணைப்பாளர் எட்டப்பன் அதை வாசித்தார்.

மாநாடு சிறப்புற நடைபெறத் தலைவர் புரட்சிதாசனுடன் இணைந்து செயல்பட்ட திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வி.சுப்பையா, மாவட்டச் செயலாளர் ஏ.பாண்டி, பொருளாளர் கே. வடிவேல், மேற்கு மாவட்டத் தலைவர் வேலு, மகளிர் அணித்தலைவி ஆர். அமுதா, இளைஞரணி இணைச்செயலாளர் சி.ஜெயராஜ், நகரச் செயலாளர் மைக் ராஜா உட்பட, மாநாட்டிற்கு வருகைபுரிந்தோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

சிறப்பு வாய்ந்த மாநாடு காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது.

- இரா.சந்தானம்

Pin It