தொலைத் தொடர்புத் துறையின் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் சில ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பான செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக ஆங்கிலச் செய்தி ஊடகங்கள். இது மக்களிடையே, இந்தப் பிரச்சினை குறித்த தவறான புரிதல்களை உருவாக்கி வருகிறது. இந்தப் பின்னணியை முன்வைத்துத் தமிழ் ஊடகப் பேரவை 24.11.2010 மாலை 6 மணி அளவில், சென்னை, தியாகராய நகரிலுள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் - விடுதலை ஆசிரியர் க.வீரமணி, கருஞ்சட்டைத் தமிழர் இதழ் ஆசிரியர் சுப.வீரபாண்டியன், மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், தமிழ் மைய இயக்குநர் ஜெகத் கஸ்பர், கேலக்சி மீடியா இயக்குநர் ரமேஷ் பிரபா ஆகியோர் விளக்கவுரையாற்றினர். அதிலிருந்து சில பகுதிகள்...

ஆசிரியர் கி.வீரமணி

நம்முடைய ஆ.ராசா மீதான பார்ப்பன ஊடகங்களின் தாக்குதல் என்பது தனி மனிதர் மீதான தாக்குதல் அன்று. காலங்காலமாக நடந்து வருகின்ற ஆரிய - திராவிடப் போராட்டம். ஒரு சூத்திர ஆட்சியை, தனித்தமிழரின் ஆட்சியை வீழ்த்துவதே இவர்களின் நோக்கம். நமது மதிப்பிற்குரிய வி.பி.சிங் அவர்களின் ஆட்சியில் மண்டல் கமிசனால் நாம் பல வாய்ப்புகளைப்பெற முடிந்தது. உயர்கல்வியில் 27 % இடஓதுக்கீட்டை இந்த ஊடகங்கள் எப்படிப் பெரிதாக்கினவோ, அதே வித்தையைத்தான் ராசா விவகாரத்திலும் செய்துவருகின்றன. இரண்டுக்கும் ஒர் அரசியல் பின்னணி உண்டு.

அரசியல் சட்டப்பிரிவு 151 பிரிவின்படி, சி.ஐ.ஜி. அறிக்கை கொடுத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறது. அந்தச் சட்டப்பிரிவின்படி, இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும், அந்த அறிக்கையின் மீது விவாதங்கள் நடைபெற வேண்டும், அதன்பிறகே வெளியிடப்பட வேண்டும். இந்த வழிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றனவா?

குடியரசுத் தலைவரிடம் இருந்தபோதே இந்த அறிக்கை வெளியில் கசிந்ததே எப்படி? இதற்கு ஒரு விசாரணை தேவையா, இல்லையா?

இந்திய தபால் மற்றும் தொலைபேசித் துறையின் தணிக்கை இயக்குநர் ஜெனரல் ஆர்.பி.சிங், பொதுமக்கள், ஊடகங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அரசுசாரா அமைப்புகள் எல்லாம் எங்களிடம் வந்து இந்த முறைகேடு சம்பந்தமான தகவல்களைச் சொன்னார்கள். விசாரிக்கச் சொல்லி மனு கொடுத்தார்கள். அந்த அடிப்படையிலேயே இந்த அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். பொதுப் பிரச்சினைகளுக்காக பிரதமரிடம் மனு கொடுக்கலாம், எங்கும் இல்லாத புதுமையாகத் தணிக்கைத் துறையிடம் மனு கொடுப்பார்களா? அப்படி என்றால் இவர்களாக எதையும் ஆராய்ந்து பார்த்து அறிக்கை தரவில்லை, தங்கள் மேசையில் வந்து விழுந்த தகவல்களைக் கொண்டே அறிக்கை தயாரித்திருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.

ஊடகங்கள் ஊதிப்பெருக்குகின்ற 1.76 லட்சம் கோடி என்பது பற்றி, சு.சாமி ஜுனியர் விகடன் பேட்டியில், “அதாவது மிகச்சரியாக அலைவரிசை டெண்டரை விட்டிருந்தால்,1.76 லட்சம் கோடி வரைக்கும் கூடுதலாக லாபம் பார்த்திருக்கலாம். அதைத்தான் இப்படிச் சொல்கிறோம். என்னைப் பொறுத்தவரையில் 60 ஆயிரம் கோடிகள் இதில் கைக்குக் கை புழங்கியுள்ளது என்று சந்தேகப்படுகிறேன். இது தொடர்பான கணக்குகளை நான் நீதிமன்றத்தில் விரிவாகச் சொல்ல முடியும்” என்று சொல்லியிருக்கிறார். அப்படியானால் அந்த 60 ஆயிரம் கோடிக்கான கொடுக்கல் வாங்கல்கள் இவருக்குத் தெரிந்திருக்கிறது. அதற்காக இந்த அரசியல் தரகரைக் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று நாம் கோரவேண்டும்.

உலகிலேயே இந்தியாவில்தான் தொலைத்தொடர்புக்கான கட்டணம் மிகவும் குறைவு என்பதை நாம் அறிவோம். இந்தச் சாதனையைச் செய்த ஆ.ராசாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படுவதற்கு முன்பே அவரை இந்த ஊடகங்கள் தண்டித்துவிட்டன என்று அட்டர்னி ஜெனரல் அந்தியர்ஜுனா சொன்னாரே, அதற்கு இவர்களின் பதில் என்ன?

அப்படிப்பட்ட பார்ப்பன ஊடகங்களை நாம் புறக்கணிக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

பேரா.சுப.வீரபாண்டியன்

இந்த அரங்கத்தில் எத்தனையோ கூட்டங்கள் பேசியிருக்கிறேன். ஆனால் இன்றுபோல் அரங்கம் நிறைந்த கூட்டத்தை நான் பார்த்ததில்லை. ஸ்பெக்ட்ரம் முறைகேடு - 1.76 லட்சம் கோடியை ஆ.ராசா ஒரு பெட்டிக்குள் வைத்துத் தன்னுடைய வீட்டிற்குக் கொண்டுபோய்விட்டார் போலும், என்பதாகத்தான் மக்கள் மத்தியில் ஒரு கருத்து இருக்கிறது. அப்படி ஒரு தவறான கருத்தைத் திட்டமிட்டே இந்த ஊடகங்கள் பரப்பிவருகின்றன. ஒர் ஆங்கிலத் தொலைக்காட்சி செய்தி போடுகிறது, ராஜா எஸ்கேப்ஸ்! என்ன அயோக்கியத்தனம் பாருங்கள். இதைப் பார்க்கிறபோது மக்களின் சிந்தனை என்னவாக இருக்கும். ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான விவரங்களை நாம் அறிக்கையைப் படித்துத் தெரிந்துகொள்ளாமல், இந்த ஊடகங்கள் வெளியிடுகின்ற செய்திகளைப் பார்த்துத் தெரிந்துகொள்கிறோம். அதனால்தான் இந்தத் தவறான புரிதல்கள்.

ராஜா யாரிடம் எவ்வளவு பணம் வாங்கினார் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அரசின் கொள்கை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ததால் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கொள்கையை வகுத்தது ராசா இல்லை. 1994 இல் என்.டி.பி குழுவால் வகுக்கப்பட்டுச் செயல்பாட்டில் இருந்த கொள்கை முடிவு அது. 2ஜி என்றால் என்ன? பொதுமக்களில் பலருக்கும் தெரியாது.அது வேறு ஒன்றுமில்லை. காவல்துறையினர் கையில் வைத்துக்கொண்டு இடையிடையே ஓவர் ஓவர் என்று சொல்லிக்கொண்டே பேசுவது 1ஜி. அந்த ஓவர் இல்லாமல் இரண்டு பேரும் நேரடியாகப் பேசிக்கொள்வது 2 ஜி. இதோடு பேசுபவர்களின் படமும் வந்து விழுந்தால் அதுதான் 3ஜி. இதைத்தான் புரியாத மொழியில் சொல்லி மக்களுக்கு விளங்காமல் செய்துவிட்டார்கள். அதுதானே அவர்களின் வழக்கம்.

ராசா அமைச்சராவதற்கு முன்பு அந்தத் துறையின் வருமானம் 3100 கோடி, அவர் பதவிக்கு வந்தபிறகு வருமானம் 15,000 கோடி. முரசொலி மாறன் நினைவஞ்சலிக் கூட்டத்தின்போது ஆ.ராசாவின் தோளில் பிரதமர் தட்டிக்கொடுத்ததைப் பெட்டிச் செய்திபோட்டுப் பெரிதாக்குகிறது தினமணி. அவருடைய தோளில் பிரதமர் தட்டிக்கொடுத்தது தவறு என்கின்றனராம் பா.ஜ.க.வினர். இது தீண்டாமையின் ஒரு வடிவம். இதற்காக அவர்களின் மீது வழக்குப் போடலாம். தினமணி ஆசிரியரைத் தீண்டாமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். (ஆமாம் கைது செய்ய வேண்டும் என்று பார்வையாளர் மத்தியில் இருந்து முழக்கங்கள் அதிர்கின்றன).

ஆ.இராசா இந்த முறைகேடு தொடர்பாக முக்கிய புள்ளிகளின் பெயர்களை வெளியிடுவார் என்பதால், அவருடைய உயிருக்கே ஆபத்து இருக்கிறது, எனவே அவரை வீட்டுச்சிறையில் வைக்க வேண்டும் என்கிறார் அரசியல் கோமாளி சு.சாமி. அப்படியானால் யார் அந்தத் திட்டத்தைத் தீட்டியிருக்கிறார்கள் என்கிற விவரம் அவருக்குத் தெரிந்திருக்கிறது. எனவே அவரை உடனடியாகக் கைது செய்து விசாரிக்க வேண்டும். அவாளுக்கு கருப்பு என்றாலே கசப்புத்தான். அதன் வெளிப்பாடுதான் ஆ.ராசா மீதான அந்த ஊடகங்களின் தாக்குதல்.

ஜெகத் கஸ்பர்

பொதுவாழ்வில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள்தான். 3ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு 2003 முதல் 2010 வரை நடைபெற்றிருக்கிறது. ஆனால் தணிக்கைத் துறையின் அறிக்கையில் ஆ.இராசா பதவி ஏற்றபின் செய்யப்பட்ட 2008 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டை மட்டுமே கணக்கில் எடுத்துகொண்டது ஏன்? தணிக்கை என்றால் முழுமையாக நடைபெற வேண்டும். ஒட்டுமொத்தத் துறையில் நடைபெற்ற முறைகேட்டினை ஆராய, ஒரு குறிப்பிட்ட ஆண்டை மட்டும் எடுத்துக்கொண்டது எப்படி? ஒன்று அந்த அதிகாரிக்குத் தணிக்கை தெரியாது அல்லது அவர் உள்நோக்கத்தோடு செயல்பட்டிருக்கிறார் என்பது புரிகிறது.

கடுகளவு உண்மையை வைத்துக்கொண்டு மலையளவு கற்பனைகளோடு செய்திகளை வெளியிடும் இந்த ஊடகங்கள், தங்களிடமுள்ள ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை உடனே திருப்பிக் கொடுக்கத் தயாரா? ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை என்பது தொலைத்தொடர் புத்துறைக்கு மட்டுமே உரியதன்று, காட்சி ஊடகத்துறைக்கும் உரியது. ஊடகங்கள் அரை உண்மையை பேசுவதைவிடுத்து முழு உண்மையைப் பேச வேண்டும். 2012 ஆம் ஆண்டுக்குள் 60 கோடி மக்களுக்குத் தொலைபேசி வசதி சென்று சேரவேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கைமுடிவு. திரு ராசா பதவியேற்றபோது, இந்த எண்ணிக்கை 30 கோடி, இன்று பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 71 கோடி. தொலைத் தொடர்புத் துறையை தொழில் வர்த்தகத் துறையாகப் பார்க்காமல், நாட்டின் கட்டுமான அமைப்பாகக் கருத வேண்டும் என்று தேசிய மேம்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. அப்படிப்பட்ட கட்டுமானத்துறையைக் கைப்பற்ற ஒரு கொள்ளைக் கும்பல் திட்டமிட்ட நிலையை முறியடித்து அதை மக்களுக்கானதாக மாற்றியிருக்கிறார் ராசா. அதற்கான விலையாகவே இந்தப் பழிவாங்கல் நடிவடிக்கைகள் நடந்திருக்கின்றன.

 ஏ.எஸ்.பன்னீர்செல்வம்

தொலைத்தொடர்பு வசதி அதிகரிக்க அதிகரிக்க மக்களின் வாழ்க்கைத் தரம் மாறிக்கொண்டே வருகிறது. பொது நலத்திற்கான, சமூக மேம்பாட்டுக்கான ஒரு முதலீடு தொலைத் தொடர்புக் கட்டுமானம். சி.ஏ.ஜி. அறிக்கை 2007 இல் இருந்துதான் தொடங்குகிறது. அதாவது ஆ.ராசா அந்தத் துறையின் அமைச்சராகப் பதவி ஏற்றபிறகு. அப்படியானால் அதற்கு முன்பு நாட்டில் தொலைத்தொடர்புத் துறையே இல்லாமல் இருந்ததா? (அறிக்கையைக் கையில் வைத்துக்கொண்டு) இந்த அறிக்கையின் முதல் பக்கத்தில் முன்னுரையில் தணிக்கை அதிகாரி சொல்கிறார், எனக்குத் தோன்றியதை இந்த அறிக்கையில் எழுதியிருக்கின்றேன். அதாவது எதையும் ஆராயாமல் தான்தோன்றித்தனமாக அவர் அதை எழுதியிருக்கிறார். அதை இந்த ஊடகங்கள் பூதாகரமாக்கி மக்களிடம் கொண்டுவந்து கொடுக்கின்றன. உன்னைத் தேடி வரும் செய்திகளை முழுமையாக நம்பாதே; தகவல்களை நீதான் தேடிச்செல்ல வேண்டும் என்பது இதழிலியலின் ஒரு முக்கியமான பாடம். ஆனால் இங்கே அதற்கு எதிராக நடந்திருக்கிறது. எங்கிருந்து தகவல்கள் இவர்களைத் தேடி வந்தன என்பதே நம் கேள்வி. இப்படி ஏராளமான முரண்பாடுகள், குளறுபடிகள் இந்த அறிக்கையில் உள்ளன. தயவு செய்து இந்த அறிக்கையினை இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து ஒவ்வொருவரும் கவனமாகப் படித்து உண்மையை அறிந்து, மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும்.

இரமேஷ்பிரபா

இல்லாத ஒன்று இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆங்கில ஊடகங்கள் எப்போதுமே ஒரு தனிச்சாதியாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நம்முடைய தமிழ் தொலைக்காட்சிகளில் முக்கியச் செய்திகள், தலைப்புச் செய்திகள் என்றுதான் போடுவோம். ஆனால் ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் எப்போதுமே ‘பிரேக்கிங் நியூஸ்’தான். அதாவது உண்மையை உடைக்கும் செய்தி, ஒரு கட்சியை உடைக்கும் செய்தி. இதுதான் அவர்களின் ஊடகத் தர்மம். நேர்காணல்களில் அவர்களின் அணுகுமுறை பாரபட்சமாகவே இருக்கும். நபர்களுக்கு ஏற்றாற்போல கேள்விகளும், விடையளிப்பதற்கான கால அவகாசமும் தரப்படும். இதை எல்லாம் எதிர்த்துக் கேட்காத வரை அவர்களின் ஆட்டம் தொடரும். இவற்றை தேசிய ஊடகங்கள் என்று சொல்லிக்கொள்கின்றனர்.

மாநில தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரையில் நட்டம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் அத்தனை ஆங்கில செய்திச் சேனல்களும் நட்டத்தில்தான் இயங்கிக்கொண்டுள்ளன. இப்படி நட்டத்தில் நடத்த வேண்டிய அவசியம் என்ன? காரணம் இவற்றிற்கு வேண்டிய உதவிகள் எங்கிருந்தோ வருகின்றன. ஊடகங்களின் பின்னால் அரசியல் இருக்கிறது. நம்முடைய கருத்தைச் சொல்வதற்கு வலிமையான ஊடகம் நமக்குத் தேவை. நம்முடைய பிள்ளைகள் ஆங்கிலச் சேனல்களில் வேலைக்குச் சேருவதற்குத் தயாராக வேண்டும். சேர்வது முக்கியமில்லை, இன உணர்வோடு செயல்பட வேண்டும்.

 தொகுப்பு - இரா.உமா

Pin It