புரட்சியாளர் அம்பேத்கரின் 54 ஆம் நினைவு ஆண்டு - புத்தரின் அடிச்சுவட்டில் அம்பேத்கர்

1891 ஏப்ரல் 14ஆம் நாள் மத்திய பிரதேசம் மாகு என்ற இடத்தில், பீமாபாய் - இராம்ஜிசக்பால் ஆகியோரின் 14 ஆம் மகனாகப் பிறந்தவர் பேரறிஞர் அம்பேத்கர். மக்களிடையே ஒரு சமூகப் புரட்சியை உருவாக்கிய இவர் தன் 65 ஆம் அகவையில் டில்லி அலிபூர் சாலையில் உள்ள அவரின் இல்லத்தில் 1956 டிசம்பர் 6 ஆம் நாள் மறைவெய்தினார். இவர் எழுதிய சீர்திருத்தக்காரர்களும் அவர்களுக்கு நேர்ந்த கதியும் என்ற கட்டுரையின் ஒரு பகுதி இது - பொறுப்பாசிரியர் 

சாதியை எதிர்க்கும் வி­யத்தில் புத்தர் தாம் போதித்ததை தாமே பின்பற்றினார். ஆரிய சமூகம் செய்ய மறுத்ததை அவர் செய்தார்.ஆரிய சமூகத்தில், சூத்திரன் அல்லது கீழ்சாதியைச் சேர்ந்தவன் ஒரு போதும் பார்ப்பனன் ஆக முடியாது. ஆனால் புத்தர் சாதியை எதிர்த்துப் போதனை செய்தது மட்டுமின்றி, சூத்திரர்களையும் கீழ் சாதியினரையம் பிக்குகள் ஆக அனுமதித்தார். புத்த மதத்தில் பிக்குகள், பார்ப்பனிய‌த்தில் பார்ப்பனர்களுக்கு இருந்த அந்தஸ்த்தைப் பெற்றிருந்தனர்.

முதலாவதாக, முற்றிலும் தம்முடைய கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்த பிக்கு, சங்கத்தில் அவர் பிறப்பினாலோ, தொழில், சமூக அந்தஸ்து ஆகியவற்றாலோ வரும் எந்த அனுகூலம் அல்லது இடையூற்றுக்கும் சிறிது கூட இடம் கொடுக்கவில்லை. வெறும் சடங்குகளையும் சமூகத் தூய்மையின்மை பற்றிய கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்ட விதிகளையயல்லாம் அவர் முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளினார். அவருடைய சங்கத்தில் மிக முக்கியமானவர்களில் ஒருவரும், கோதமருக்கு அடுத்தபடியாக சங்கவிதிகளில் மிகவும் தேர்ந்தவர் என்று கருதப்பட்டவருமான உபாலி முன்பு ஒரு நாவிதராக இருந்தார்; மிகவும் தாழ்வாகக் கருதப்பட்ட தொழில்களில் ஒன்று அது. சுநீதா என்ற பிக்குவின் சுலோகங்கள் ‘தேர கதா’ நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. அவர் தாழ்ந்த பழங்குடி வகுப்புகளில் ஒன்றான புக்குஞா வகுப்பைச் சேர்ந்தவர். கடுமையான முரண்கோட்பாடு ஒன்றைப் பிரச்சாரம் செய்த சதி என்பவர் ஒரு மீனவர். பின்னாட்களில் அது ஒரு தாழ்ந்த சாதியாக இருந்தது. அது மட்டுமின்றி, அந்தத் தொழிலின் கொலைத்தன்மை காரணமாக அது மிகவும் வெறுக்கப்பட்ட தொழிலாகவும் இருந்தது. நந்தர் என்பவர் மாடு மேய்ப்பவர். பந்தகா என்ற பெயருள்ள இரண்டு பேரும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த மணமாகாத ஒரு பெண்ணுக்கு ஒரு அடிமையின் மூலம் பிறந்தவர்கள். (மனு நூலின் 31 ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ள விதியின்படி இவர்கள் சாதிக்குப் புறம்பானவர்கள்)

காபா என்பவர் ஒரு மான்வேட்டைக்காரனின் மகள். புன்னா, புன்னிகா என்பவர்கள் அடிமைப் பெண்களாயிருந்தவர்கள். சுமங்கல மாதாவின தந்தையும், கணவரும் கோரைப்புல் முடையும் தொழில் செய்பவர்கள். சுபா ஒரு கருமானின் மகள். இவற்றைப்போல மேலும் பல உதாரணங்களைக் கூற முடியும். மேலும் பல நூல்கள் வெளியிடப்படும் போது இவை போன்ற உதாரணங்கள் மேலும் பல தெரிய வரும்.

இத்தகையோரின் எண்ணிக்கை சிறியது என்று கூறுவதோ, இந்தத் தாராள மனப்பான்மை வெறும் வெளிவே­ம் என்று கூறுவதோ வரலாற்று உணர்வைக் காட்டாது. பிக்கு சங்கத்தில் இவர்களின் விகிதம், இழித்துக் கூறப்பட்ட இந்தச் சாதிகளுக்கு மொத்த மக்கள் தொகையில் இருந்த விகிதத்துக்கு அநேகமாக, ஒத்ததாக இருந்திருக்கும். தேரிகதாவில் கூறப்படும் தேரிகளில் அறுபது பேருடைய சமூக அந்தஸ்து நமக்குத் தெரிகிறது. இவர்களில் ஜந்துபேர் மேலே குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். அதாவது மொத்தத்தில் 8 1/2 சதவீதம் பேர் தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள். இதே சமூக அந்தஸ்து உள்ள மக்களின் விகிதம் மொத்த மக்கள் தொகையில் அநேகமாக இதே அளவுதான் இருந்திருக்கக் கூடும்.

புத்தர், சூத்திரர்களையும் தாழ்ந்த சாதியினரையும் பிக்கு சங்கத்தில் சேர்த்து அவர்களின் நிலையை உயர்த்தியது போலவே, பெண்களின் நிலையையும் உயர்த்தினார். ஆரிய சமூகத்தில் பெண்களுக்குச் சூத்திரர்களின் அந்தஸ்துதான் தரப்பட்டிருந்தது. ஆரிய இலக்கியங்களில் பெண்களும், சூத்திரர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே அந்தஸ்து உள்ளவர்களாகப் பேசப்படுகிறார்கள். இருவருக்குமே சன்னியாசம் பெறும் உரிமை சிடையாது. சன்னியாசம் தான் மீட்சிக்கு ஒரே வழியாயிருந்தது. பெண்களும் சூத்திரர்களும் மீட்சிக்கு வழியில்லாதவர்களாக இருந்தார்கள். புத்தர் இந்த விதியை சூத்திரர்கள் விசயத்தில் உடைத்தெறிந்தது போலவே பெண்கள் வி­யத்திலும் உடைத்தெறிந்தார். சூத்திரன் பிக்கு ஆக முடிந்தது போலவே பெண்களும் பிக்குணிகள் ஆக முடிந்தது. ஆரிய சமுதாயத்தில் அப்போது மிக உயர்ந்ததாகக் கருதப்பட்ட அந்தஸ்தைப் பெண்கள் இதன் மூலம் பெற முடிந்தது.

புத்தர் ஆரிய சமூகத்தின் தலைவர்களை எதிர்த்துப் போராடிய மற்றொரு பிரச்சினை ஆசிரியர்கள், கற்பித்தல் பற்றிய அறநெறிக் கொள்கையாகும். கல்வி கற்பது பார்ப்பனர், க்ஷத்ரியர், வைசியர் ஆகியோருக்கு உள்ள சிறப்பு உரிமை என்று ஆரிய சமூகத் தலைவர்கள் கருதினார்கள். சூத்திரர்களுக்குக் கல்வி கற்கும் உரிமை கிடையாது. பெண்களுக்கும், இருபிறப்பாளர் அல்லாத ஆண்களுக்கும் கல்வி கற்பிப்பது சமூக ஒழுங்குக்கு ஆபத்தாகும் என்று அவர்கள் வாதிட்டார்கள். புத்தர் இந்த ஆரியக் கொள்கையை மறுத்தார். இந்தப் பிரச்சினை பற்றி ரைஸ் டேவிஸ் சுட்டிக்காட்டியது போல “ஒவ்வொருவரும் கல்வி கற்க அனுமதிக்கப்பட வேண்டும்; சில திறமைகள் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் கல்வி கற்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும்; அப்படிக் கற்பிப்பவர்கள்; எல்லோருக்கும், எல்லாவற்றையும் கற்பிக்க வேண்டும். எதையும் மறைக்கக்கூடாது, யாரையும் விலக்கக் கூடாது.” இந்த வி­யம் பற்றி புத்தருக்கும், பார்ப்பன லோஹிக்காவுக்கும் இடையில் நடந்த உரையாலில் கூறப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். இந்த உரையாடல் லோஹிக்கா சூத்தா எனப்படுகிறது.

Pin It