அண்மையில் வெளியாகி உள்ள இந்திய ஆட்சிப் பணிக்கான (ஐ.ஏ.எஸ்) தேர்வு முடிவுகள், பல்வேறு வகைகளில் நமக்கு மகிழ்வூட்டுவனவாக உள்ளன. முன்பெல்லாம், இந்திய அளவில் இ.ஆ.ப. தேர்வில் வெற்றிபெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். இன்று அந்நிலை மாறியுள்ளது.

மூன்று அடிப்படைகளில், தேர்வு முடிவுகள் நமக்குப் பெரும் நம்பிக்கையையும், ஊக்கத்தையும் தருகின்றன. வெற்றி பெற்றுள்ள தமிழர்களின் எண்ணிக்கை, பெண்களின் எண்ணிக்கை, மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை ஆகியனவே அவை.

இந்த ஆண்டு, முதல் கட்டத் தேர்வை 1,93,091 பேர் எழுதினார்கள். ஏறத்தாழ இரண்டு இலக்கம் பேர் பங்கேற்றாலும், 15 ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் இறுதிநிலைத் தேர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அத்தேர்வை எழுதி 12,026 பேர்களில், 2,432 பேர் மட்டுமே வெற்றி பெற்று, நேர்முகத் தேர்வைச் சந்தித்தனர். இப்போது அவர்களில் 875 பேர் அதிலும் வெற்றி பெற்று இ.ஆ.ப.பட்டத்தைப் பெற்றுள்ளனர். இரண்டு இலக்கம் மாணவர்களில் முதல் 875 இடங்களைப் பிடித்துள்ளவர்கள் இனி இ.ஆ.ப. என அழைக்கப்படுவர்.

இவ்வளவு கடுமையான போட்டியில் வெற்றி பெற்றுள்ள 875 பேர்களில் 110 பேர் தமிழர்கள் என்பதும், 195 பேர் பெண்கள் என்பதும், 30 பேர் மாற்றுத் திறனாளிகள் என்பதும் நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது.

இந்தியாவில், பெரியனவும், சிறியனவுமாக முப்பதுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் உள்ளன. எனினும் ஏறத்தாழ எட்டில் ஒரு பங்கு இடத்தில் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பெண்களைப் பொறுத்தமட்டில், வெற்றி விகிதம் 22.2 என்கிற அளவில்தான் உள்ளது என்றாலும், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரையில் முழுவதுமாகக் கல்வி மறுக்கப்பட்ட பெண் சமூகம் இன்று இந்நிலையை எட்டியிருப்பது பெருமைக் குரியதுதான். அவ்வாறே, வாழ்க்கை முழுவதும் போராடிக் கொண்டி ருக்கும் மாற்றுத் திறனாளிகளில் 30 பேர் இ.ஆ.ப. அளவிற்கு வந்திருப்பது, அவர்களின் பேராற்றலைக் காட்டுகிறது.

தமிழகத்தில் இ. ஆ. ப. எண்ணிக்கை கூடுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக உள்ளது, சென்னை, சைதாப்பேட்டையில் இயங்கிவரும் ‘மனிதநேய மையம்’. இவ்வாண்டு வெற்றிபெற்றுள்ள 110 பேரில் 43 பேர் அம்மையத்தில் பயிற்சி பெற்றவர்கள். அம் மையத்தையும், அதனை நிறுவி இயக்கி வரும் சைதை துரைசாமி, மல்லிகா துரைசாமி ஆகியோரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மனிதநேய மையம், சமூகப் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு இலவயப் பயிற்சியை மட்டுமின்றி, தங்கும் இடம், தரமான உணவு, தகுதியான நூல்கள் ஆகியனவற்றையும் வழங்கி உதவுகின்றது.

கோடிப் பணம் இருந்தாலும், கொடுக்கும் மனம் எல்லோருக்கும் வந்துவிடாது. சைதை துரைசாமிக்கு அந்த மனம் வாய்த்திருக்கிறது. வெறும் நன்கொடையாக மட்டுமல்லாமல், ஆக்கப்பூர்வமான கல்வி மேம்பாட்டிற்கும், தமிழகத்தின் பெருமைக்கும் அவர்களின் கொடை உதவுவது மேலும் மகிழ்ச்சி தருகிறது.

- சுப.வீரபாண்டியன்

Pin It