சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து பல சுவாரஷ்யமான நிகழ்வுகள் தமிழக அரசியலில் தோன்றியுள்ளன. அவர்களது போராட்டத்தை ஆதரிக்கும் சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்). போன்ற கட்சிகளைச் சாடும் முகமாக தமிழக முதல்வர் சில கருத்துக்களைக் கூறியுள்ளார். அதாவது இந்தக் கம்யூனிஸ்ட் கட்சிகள் மாவோயிஸ்ட்களுக்கு இணக்கமானவர்கள். அதனால்தான் நேபாள மாவோயிஸ்ட்களுடன் கலந்து பேச சி.பி.ஐ(எம்)கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாரம் யெச்சூரி அனுப்பட்டார் என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் அவர்கள் இதுபோன்ற கருத்தை வெளியிடுவது முதல்முறை அல்ல. 

தீனமான பிரதிபலிப்பு 

1971- ம் ஆண்டு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்து அதன் முதல்வராகத் தற்போதய முதல்வர் அவர்கள் பதவியேற்றார். அந்நிலையில் பல தொழிலாளர் போராட்டங்களை அவரது அரசு எதிர்கொண்டது அப்போது அவர் முன்வைத்த கருத்துக்களின் தீனமான பிரதிபலிப்பாகவே தற்போது தமிழக முதல்வர் முன்வைத்துள்ள இக்கருத்துக்கள் உள்ளன. சென்னையில் சிம்சன், பாடியில் உள்ள லூகாஸ் டி.வி.எஸ். போன்ற தொழிற்சாலைகளில் தொழிலாளர் போராட்டங்கள் எழுபதுகளில் தோன்றிய போது அப்போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். அது மட்டுமல்ல அப்போராட்டங்களை அவ்வேளையில் முன்னின்று நடத்திய சி.ஐ.டி.யு., எ.ஐ.டி.யு.சி. போன்ற தொழிற்சங்கங்களை வழிநடத்தும் சி.பி.ஐ. மற்றும் சி.பி.ஐ(எம்) கட்சிகளின் தலைவர்களையும் தொண்டர்களையும் இவர்கள் பகலில் மார்க்சிஸ்டுகள் இரவில் நக்சலைட்டுகள் என்றும் அப்போது அவர் வர்ணித்தார்.

அப்போது சி.பி.ஐ(எம்). கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்த ஹிந்து என்.ராம், திருமதி.மைதிலி சிவராமன் ஆகியோர் குறித்து கம்யூனிஸ்ட் இயக்கங்களில் சாதாரண மக்களின் பிள்ளைகள் தான் இருப்பார்கள் என்பதில்லை; மவுண்ட் ரோடு மகாதேவர்களின் பிள்ளைகளும் இருப்பார்கள் என்றும் தற்போதைய முதல்வர் அப்போது கூறினார்.

இரும்புக் கரமும் கரும்புக் கரமும்

 ஆனால் அன்று சி.பி.ஐ. மற்றும் சி.பி.ஐ(எம்). கட்சிகளின் நிலை இன்றைய நிலையைப்போல் இல்லை. இன்று சி.பி.ஐ(எம்). கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக இருக்கக்கூடிய திரு.சீத்தாராம் யெச்சூரி அவர்கள் சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்). கட்சியினர் மாவோயிஸ்ட்களுக்கு இணக்கமானவர்கள் என்று தமிழக முதல்வர் கூறியவுடன் கொஞ்சும் தொனியில் ஒரு மூத்த அரசியல்வாதி எவ்வாறு இப்படிக் கூறலாம்? மாவோயிஸ்ட்களை முக்கியமாக எதிர்ப்பவர்கள் இன்றைய காலகட்டத்தில் நாங்களே. பாராளுமன்ற ஜனநாயகத்தில் முழுமையான நம்பிக்கையுள்ள எங்களுக்கும் பாராளுமன்ற ஜனநாயகத்தையே நம்பாத மாவோயிஸ்ட்களுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? என்று பல தன்னிலை விளக்கங்களைக் கொடுக்கிறார். ஆனால் அன்று இக்கட்சிகளின் தலைவர்களாக இருந்தவர்களின் வாதங்கள் இவ்வாறு இருக்கவில்லை.

 மிகக்குறைந்த வயதில் அரசியலுக்கு வந்துவிட்ட தற்போதய தமிழக முதல்வர் அப்போதும் கூட ஒரு இளைய அரசியல்வாதியல்ல. ஆனால் அடக்கு முறைகளையும் போர்க்குணமிக்க போராட்டங்களையும் ஓரளவு எதிர்கொண்டவர்களாக இருந்த அக்கட்சியின் அன்றையத் தலைவர்கள் முதல்வரது அரசியல் முதிர்ச்சியைப் பாராட்டவில்லை. மாறாக அவர்கள் ஆட்சியாளர்கள்; எப்போதும் தங்களது அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள இத்தகைய வன்முறைவாதிகள் போன்ற பட்டங்களைப் போராடும் அமைப்புகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் கொடுக்கவே செய்வர்; அவற்றிற்குப் பதில் கூறி உள்நோக்கம் கொண்ட அந்தக் கருத்துக்களை கெளரவிப்பது அநாவசியம் என்றே கருதினர். மாறாக தொழிலாளருக்கு இரும்புக்கரம்; முதலாளிகளுக்கு கரும்புக்கரமா என்றே முதல்வரின் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்ற கூற்றிற்கு அப்போது அவர்கள் பொருத்தமாகப் பதிலுரைத்தனர்.

ஆனால் இன்று இத்தனை ஆண்டுகால சி.பி.ஐ(எம்). கட்சியின் பாராளுமன்ற ஜனநாயக அரசியல்அதன் தலைவரை உள்நோக்கத்துடன் முன்வைக்கப்படும் இந்தக் கூற்றுக்கு கெஞ்சும் மற்றும் கொஞ்சும் தொனியில் பதில் கூற வைத்திருக்கிறது.

அதன் பின்னணி இதுதான். சட்டமன்ற தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. சீத்தாராம் யெச்சூரி அவர்கள் முன்வைக்கும் பாராளுமன்ற ஜனநாயகம் நமது நாட்டில் வளர்ந்து செழித்தோங்கியுள்ளது. ஆனாலும் கொள்கை அடிப்படையில் தான் கட்சிகளின் அணிச்சேர்க்கைகள் நடைபெறும் என்ற நிலையில் கட்சிகள் எவையும் இல்லை. கோட்பாடுகள் கொள்கைகளை எத்தனை காததூரம் தூக்கியயறிய முடியுமோ அத்தனை தூரம் தூக்கியயறிந்தாவது அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பதே ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளின் இலக்குகளாகத் தற்போது உள்ளது. அத்தகைய சந்தர்ப்பவாத நிலைகள் எடுப்பதைச் சாத்தியமாக்கும் விதத்திலேயே சீத்தாராம் யெச்சூரி அவர்கள் மனமுவந்து தங்கள் கொள்கையாகப் பறைசாற்றும் பாராளுமன்ற ஜனநாயகம் உள்ளது; அதாவது சீரழிந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி நீடித்தாலும் நீடிக்கலாம் அல்லது காங்கிரஸ் அ.தி.மு.க. கூட்டணி ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்ற நிலையே நிலவுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா ஓரிரு மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த வேளையில் பல முக்கிய காங்கிரஸ் தலைவர்களை அங்கு சந்தித்தது; கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே காங்கிரஸ் கட்சியின் இளைய தலைவர் ராகுல் காந்தி ஜெயலலிதாவைப் பற்றி உயர்வான கருத்துக்களை முன்வைத்தது; தமிழக காங்கிரஸ் தலைவர்களில் பலர் ஆங்காங்கே அவ்வப்போது தமிழக அரசைக் கடுமையாக சமீபகாலமாகச் சாடி வருவது இவற்றையயல்லாம் வைத்துப் பார்த்தால் காங்கிரஸ் அ.தி.மு.க. கூட்டணி ஏற்படவே ஏற்படாது என்று உறுதியுடன் அறுதியிட்டு யாரும் கூற முடியாது.    

இந்த நிலையில் காங்கிரஸ் அ.தி.மு.க. கூட்டணி ஏற்பட்டால் தற்போதுள்ள சி.பி.ஐ(எம்) - ன் நிலையான அ.தி.மு.க - வுடன் இணைந்து நிற்கும் நிலையை அதனால் உறுதியாகக் கடைபிடிக்க முடியாது. அந்நிலையில் தி.மு.க - வுடன் கூட்டுச்சேர்ந்து நிற்க வேண்டிய அவசியம் அக்கட்சிக்கு ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஏற்கனவே அக்கட்சியின் அரசு ஊழியர் அமைப்புகள் அத்தகைய கூட்டணியைப் பெரிதும் வற்புறுத்திக் கொண்டும் உள்ளன. இந்த நிலையில் தி.மு.கழகத்தை தாஜா செய்து வைத்திருக்க வேண்டியது சி.பி.ஐ(எம்) கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரின் தலையாய கடமையல்லவா? அதற்காகவே இந்தக் கொஞ்சலும் கெஞ்சலும்.

சி.பி.ஐ(எம்) கட்சி ஒரு சமயம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவோம் என்ற லெனினது கோட்பாடுகளின் படி செயல்படுவதாகப் பாவனை காட்டியது; ஒரு சில மாநிலங்களில் ஆட்சியதிகாரத்திற்கு வந்து பதவி சுகத்தினை நுகர்ந்த பின்பு படிப்படியாக பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவோம் என்ற பழைய முழக்கத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு தற்போது பாராளுமன்ற ஜனநாயகத்தில் உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் என்ற நிலையை உரத்து முழங்கத் தொடங்கிவிட்டது.

பாராளுமன்ற ஜனநாயகம் என்று அவர்கள் மேம்போக்காகக் கூறினாலும் அவர்கள் கடைப்பிடிப்பது மாமேதை லெனின் போன்ற தலைவர்கள் வெறுத்தொதுக்கிய பாராளுமன்ற வாதத்தையே. அதனால் வர்க்க அரசியல் நடத்துவதைக் கைவிட்டு அக்கட்சியினர் பல முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து வேறுபாடு இல்லாத குணாம்சரீதியில் ஒன்றுபட்ட அரசியல் வர்க்கமாகிவிட்டனர். ஓரே வர்க்கமாகிவிட்ட பின் நிச்சயமாக திரு.சீத்தாராம் யெச்சூரி அவர்களின் கண்ணுக்கு சத்துணவு ஊழியர் போராட்டம் உட்படப் பல தொழிலாளர் போராட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு கட்டவிழ்த்து விடும் அடக்குமுறையை எதிர் கொள்ளும் போதும் கூடத் தமிழக முதல்வர் அவர்களின் அரசியல் முதிர்ச்சியே பெரிதாகக் கண்ணுக்குத் தெரிகிறது. ஏன் முதிர்ச்சி குறித்து இத்தனை வாதம் என்ற கேள்வி எழலாம். முதிர்ச்சிக்கும் முதுமைக்கும் பெரிய வேறுபாடு உண்டு. முதுமை நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்படுவது. ஆனால் முதிர்ச்சி சமூக ரீதியான ஆக்கபூர்வப் போராட்டத்தினால் ஏற்படுவது. அதற்கு வயது வரம்பில்லை.

சம்பிரதாய வாதம் சரியானதல்ல

சுயலாபம் தேடும் அரசியல்வாதிகள் கூட அவர்களின் சுயலாபம் தேடும் போக்கை வயதான காலத்திலும் பரபரப்பேதுமின்றி சாவகாசமாகவும் நிதானமாகவும் கடைப்பிடிக்க முடியும். அதன் பெயர் முதிர்ச்சி அல்ல. அது மிகவும் அபாயகரமான தந்திரப்போக்கு. உண்மை என்னவென்றால் இக்காலகட்ட முதலாளித்துவ அரசியல் முதிர்ச்சியுள்ள அரசியல்வாதிகள் நிறையப் பேரை உருவாக்கவில்லை. இல்லை; ஒரு சம்பிரதாயத்திற்காகக் கூட முதிர்ச்சியான அரசியல் தலைவர் என்று யெச்சூரி கூறியிருக்கலாம் என வாதிடலாம். சம்பிரதாயங்களுக்கெனப் பேசுவதும் செயல்படுவதும் சமூகமாற்ற அரசியலுக்கு ஒத்துவராத விசயம். அவற்றைக் கடைப்பிடிப்பதும், பராமரிப்பதும் அடிப்படை மாற்றங்களை வலியுறுத்தாமல், இருக்கும் சமூக அமைப்பை ஆங்காங்கே சில சீர்திருத்தங்களைச் செய்து வைத்துக் கொள்ளும் ‘உள்ளதைப் பராமரிக்கும் அரசியல் வாதிகளுக்கே சாத்தியம். உண்மையான மார்க்சிய அரசியலின் நிழலில் பயணம் செய்பவர்களுக்குக் கூட அது ஒத்து வராது. உண்மையில் இங்கு யெச்சூரி அவர்கள் கூறியது மற்றும் அது கூறப்பட்டதன் பின்னணியைக் கொண்டு பார்த்தால் அது தமிழக முதல்வரை தாஜா செய்வதற்கு என்றே தோன்றுகிறது.

தமிழக முதல்வர் அவர்கள் அவரது வாதத்திற்கு வலுச்சேர்க்கும் விதத்தில் முன்வைத்த மற்றொரு கருத்து நேபாள மாவோயிஸ்ட்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சீத்தாராம் யெச்சூரி அவர்கள் அனுப்பப்பட்டார்; அதுவும் மாவோயிஸ்ட்களுக்கு மார்க்சிஸ்ட்கள் இணக்கமானவர்கள் என்பதைப் புலப்படுத்துவதே என்பதாகும். தமிழக அரசியலில் எப்படியாவது சாதுர்யமாக சாணக்யமாக பல முழக்கங்களை முன்வைத்துப் பல திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு வருவதை சாத்தியமாக்குவதில் தமிழக முதல்வரின் அரசியல் ‘முதிர்ச்சி’யோ தந்திரமோ நிச்சயமாகப் பயன்பட்டிருக்கலாம்.   

வேறுபாடுகளைப் பார்க்க வேண்டும்

ஆனால் இந்திய, நேபாள மாவோயிஸ்ட்கள் இருவரையும் ஓர் நிறையில் வைத்துப் பார்ப்பது - எவ்வளவு தூரம் அவரது வயதிற்கும் அனுபவத்திற்கும் மதிப்பளித்துக் கூறினாலும் முதிர்ச்சியான அரசியல் அறிவு அல்ல; வெளிப்படையான பல உண்மைகளை வருந்தத்தக்க விதத்தில்  இவ்விச யத்தில் அவர் கணக்கில் கொள்ளாதவராக இருக்கிறார் என்பதே அதன்மூலம் வெளிப்படுகிறது. மாவோ என்ற பெயர் இவ்விரு அமைப்புகளுக்கும் பொதுவாக இருப்பதை வைத்து அரசியல் உள்நோக்குடன் யு.சி.பி.என்(எம்) அமைப்பை இங்கு இழுத்து பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்படும் சி.பி.ஐ(எம்.எல்) அமைப்போடு ஒத்த கருத்துக் கொண்டவர்கள் என சி.பி.ஐ. மற்றும் சி.பி.ஐ(எம்). கட்சிகளை மறைமுகமாக அச்சுறுத்துவதே இங்கு முதல்வரின் நோக்கமாக இருக்க முடியும். உண்மையில் நடைமுறைகள் எதிலும் நேபாள மாவோயிஸ்ட்களுக்கும் இந்திய மாவோயிஸ்ட்களுக்கும் இடையில் தற்போது எந்தவொரு ஒற்றுமையும் இல்லை.

இந்திய மாவோயிஸ்ட்களைப் போலன்றி நேபாள மாவோயிஸ்ட்கள் பாராளுமன்றத்தை லெனினது கருத்தின்படி பயன்படுத்தியவர்கள். பாராளுமன்ற நடைமுறைகளோடு மக்கள் இயக்கத்தையும் ஒருங்கிணைத்து நேபாள மண்ணில் ஒரு அடிப்படை மாற்றத்தைச் சாதிப்பதற்காக மார்க்சிய விஞ்ஞானத்தின் அடிப்படையில் போராட்டங்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள். தேர்தலில் போட்டியிடுவது என்பதையே குருட்டுத்தனமாக எதிர்க்கும் பிடிவாத நடைமுறை இல்லாதவர்கள். அடிப்படை சமூகமாற்றத்திற்கான அனைத்து நடைமுறைகளையும் முழக்கங்களையும் அசலும் நகலும் மார்க்சிச அடிப்படையில் செய்து கொண்டிருப்பவர்கள்.

ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு பாராளுமன்றத்தில் பங்கேற்றவுடன் மகத்தானதொரு வெற்றியைப் பெற முடிந்தவர்களாக இருந்தவர்கள்; ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த பின்னரும் கூட சிவில் நிர்வாகத்தின் மேலாண்மையை மதிக்காததொரு நடவடிக்கை ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட நிலையில் பதவியைத் துச்சமென தூக்கியெறிந்து தெருவில் இறங்கித் தயங்காமல் போராடியவர்கள். நேபாள அரசியலில் இருக்கும் அனைத்து ஊசலாட்ட சக்திகளையும் தனிமைப்படுத்தி இன்றும் நேபாள சமூக மாற்றத்தின் ஓரே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி அதன்மூலம் உலக அளவில் தேக்கநிலையில் உள்ள சமூகமாற்ற நடவடிக்கைகளுக்கு உத்வேகமளிப்பவர்கள்.

 தமிழக முதல்வர் அவர்கள் நேபாள அரசியலையும் அதன் நிகழ்வுகளையும் கூர்ந்து கவனித்திருந்தால் மேலே விவரித்த உண்மைகள் அவரது பார்வையில் பட்டிருக்கும். அத்தனை உண்மைகளையும் அவர் பார்க்காதிருந்தாலும் கூடத் தேர்தலில் பங்கேற்றுப் பாராளுமன்றத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் என்பதையும், நேபாள் அரசியல் நிர்ணயச் சட்டம் அமலுக்கு வருவது தாமதமாகக் கூடாது என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பவர்கள் என்பதையாவது பார்த்திருப்பார். அது இவ்விரு அமைப்புகளுக்கும் இடையில் நடைமுறையில் பெரிய வேறுபாடு உள்ளதென்பதை அவருக்குப் புரிய வைத்திருக்கும்.

 இதை நாம் இங்கு ஏன் கூறுகின்றோம் என்றால் பாராளுமன்ற ஜனநாயத்தின் முழு நம்பிக்கையுள்ள ஒரு நவீனரக மார்க்சிஸ்டாக இல்லாமல் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டும் அதே சமயத்தில் பாராளுமன்ற வாதத்திற்குப் பலியாகிவிடக்கூடாது என்ற மார்க்சிய லெனினிய வாதியாக திரு.சீத்தாராம் யெச்சூரி அவர்கள் இருந்திருந்தால் அவர் இத்தகையதொரு பதிலைத்தான் தமிழக முதல்வர் அவர்களுக்குக் கூறியிருப்பார். அதாவது அரசியல் ‘முதிர்ச்சியோடு’ நமது எல்லை தாண்டிய நாடுகளின் அரசியலையும் அந்நாட்டு அரசியல் வரலாற்றையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பாருங்கள்; அந்த அடிப்படையில் உங்கள் கருத்துக்களைச் சீர்படுத்தி வெளியிடுங்கள் என்று அவர் கூறியிருப்பார்.    

Pin It